12/06/2026
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள்

“மாலைக்குள் வெளியேறு” – அரசு ஒப்பந்த பணியாளர்கள் திடீர் வெளியேற்றம்… நடந்தது என்ன?

  • May 7, 2026
  • 0

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த திட்டப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு திடீர் வாய்மொழி வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் நிர்வாக நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

“மாலைக்குள் வெளியேறு” – அரசு ஒப்பந்த பணியாளர்கள் திடீர் வெளியேற்றம்… நடந்தது என்ன?

ஒப்பந்த ஊழியர்களுக்கு எந்த எழுத்துப்பூர்வ உத்தரவும் இன்றி அலுவலகங்களை காலி செய்ய வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் புதிய அரசு முழுமையாக அமைக்கப்படாத சூழலிலேயே, பல்வேறு அரசு துறைகளின் கீழ் பணியாற்றி வந்த திட்டப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திடீரென வெளியேற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி மக்கள் தொடர்புத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊழியர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, மே 7 ஆம் தேதி காலை வரை எந்தவித எழுத்துப்பூர்வ உத்தரவும் வழங்கப்படவில்லை. ஆனால் அதே நாளில் மதியம் அதிகாரிகள் வாய்மொழியாக அறிவிப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த அறிவிப்பில், “இன்று மாலை 5 மணிக்குள் அலுவலகங்களை காலி செய்ய வேண்டும். இல்லையெனில் அலுவலகங்கள் பூட்டப்படும்” என எச்சரிக்கப்பட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அவகாசம் கூட வழங்கப்படாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் ஒரே வருமானத்தை நம்பி வாழும் பல தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் திடீரென வேலை இழக்கும் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“அரசு மாறலாம்; ஆனால் அரசு திட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒரே நாளில் சாலையில் தள்ள முடியுமா?” என்ற கேள்வி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

போராட்டத்தில் ஊழியர்கள்

இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் அலுவலக வளாகங்களிலேயே அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலா மேற்கொள்ளப்படுகிறது? அல்லது நிர்வாக மறுசீரமைப்பு என்ற பெயரில் ஊழியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? என்ற கேள்விகளும் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.

அரசு தரப்பில் விளக்கம் இல்லை

இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் இதுவரை தெளிவான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. திடீர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எதிர்காலம் குறித்து கவலை அதிகரித்துள்ளது.