21/05/2026
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

“தவெக அமைச்சர் ஸ்ரீநாத் ஒரு மீனவரா- உண்மை என்ன?” – PPN_Fact_Check

  • May 21, 2026
  • 0

“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. உண்மை என்ன?

“தவெக அமைச்சர் ஸ்ரீநாத் ஒரு மீனவரா- உண்மை என்ன?” – PPN_Fact_Check

தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று ஆளுநர்மாளிகையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்துக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஒரு மீனவர் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

பரவும் படம்:


சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்தத் தகவலின் உண்மையை Pen Point News ஆய்வு செய்தது.

எங்கிருந்து தொடங்கியது இது?

அண்மையில் தேர்தல் பிரசாரத்தின்போது, ANI செய்தி முகமைக்கு அவர் கொடுத்த பேட்டியில், “நான் பிறந்தது தூத்துக்குடி தான். இதுதான் என் Natiive” என்று கூறினார். ஆனால், தான் ஒரு மீனவர் என்றோ , மீனவப் பின்னணி கொண்டவர் என்றோ, அவர் ஏதும் சொல்லவில்லை.

இந்நிலையில் இன்று தவெக அரசின் அமைச்சரவையில் ஸ்ரீநாத்துக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வழங்கப்பட்டதும், ஒரு மீனவரையே மீன்வளத்துறைக்கு அமைச்சராக நியமித்திருக்கிறது அரசு என்று, சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவத் தொடங்கி விட்டன.


ஆனால் உண்மையில், அவர் மீனவர் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஏதும் உண்டா என்று தேடிப் பார்த்தோம்.

தேர்தல் ஆவணங்கள், ஊடக அறிக்கைகள், அரசியல் சுயவிவரங்கள் என எதிலும், அமைச்சர் ஸ்ரீநாத் “மீனவக் குடும்பப் பின்னணி” கொண்டவர் என்று குறிப்பிடப்படவில்லை.

அவரைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் அவரை, முதல்வர் “விஜய்யின் நண்பர்” , “நகைச்சுவை நடிகர்”, “இயக்குநர்…” என்றுதான் தெரிவிக்கின்றன.  இவர் இயக்கத்தில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம், இயக்குநராகவும் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. ஆனால், இவர்மீனவர் என்பதற்கான எந்த சான்றும் இல்லை. 

தேர்தல் ஆணையத்தின், அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இவர் சென்னை அண்ணா நகரில் வசிப்பவர். வில்லிவாக்கம் தொகுதியில் வாக்குரிமை பெற்றவர்.

1973 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1992 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரிலுள்ள டான் போஸ்கோ பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுள்ளார்.

அத்துடன், அதே ஆண்டில் வெளியான “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில், தற்போதைய முதலமைச்சரும் அன்றைய நடிகருமான விஜயின் நண்பராகவே ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

“தூத்துக்குடி சொந்த ஊர்” என்பது ஒரு தகவல். ஆனால் “மீனவர் அல்லது மீனவக் குடும்ப பின்னணி” என்பது முற்றிலும் வேறு. 

அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். மீன்வளத்துறையும்  மீனவர் நலமும் இப்போது மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் துறைகள் தான். மீனவர்களைப் புரிந்துகொண்டு வேண்டிய பணிகளை ஆற்றுவார் என்று நம்புவோம்.

ஆனால்.., அவரே ஒரு மீனவர் என்று சொல்ல வேண்டுமென்றால்அதிகாரப்பூர்வமாக, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீனவர் என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.

இது Pen Point News. நாங்கள் நடுநிலை அல்ல நடுவுநிலை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *