10/11/2026
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் உலகம் சிறப்பு கட்டுரைகள்

Exclusive: கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலுக்கு டார்வின் முகவுரை எழுத மறுத்தாரா? – உண்மை என்ன?

  • November 9, 2026
  • 0

கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலுக்கு முகவுரை வழங்க சார்லஸ் டார்வின் மறுத்தாரா? நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் செய்தியின் உண்மையை உடைக்கிறது இந்தக் கட்டுரை.

Exclusive: கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலுக்கு டார்வின் முகவுரை எழுத மறுத்தாரா? – உண்மை என்ன?

கார்ல் மார்க்ஸும் சார்லஸ் டார்வினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவுலகை ஆழமாக மாற்றிய இரு சிந்தனையாளர்கள். ஒருவர் முதலாளித்துவப் பொருளாதாரம், வர்க்க உறவுகள், உழைப்பு மற்றும் சமூக மாற்றம் குறித்து ஆய்வு செய்தார். மற்றொருவர் உயிரினங்களின் பரிணாமம், இயற்கைத் தேர்வு மற்றும் உயிரினப் பல்வகைமை குறித்து அறிவியல் விளக்கத்தை முன்வைத்தார். 

இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒருவருடைய ஆய்வுப் பொருள் மனித சமூகமும் பொருளாதாரமும் என்றால், மற்றொருவருடையது இயற்கையும் உயிரினங்களும்.

ஆனாலும், இருவரின் பெயர்களும் பின்னாளில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் கதையுடன் இணைக்கப்பட்டன.  “கார்ல் மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ (Das Kapital) நூலை சார்லஸ் டார்வினுக்கு அர்ப்பணிக்க விரும்பினார்; டார்வின் அதனை மதக் காரணங்களால் மறுத்தார்” என்பதே அந்தக் கதை. சில வடிவங்களில் இது, “மார்க்ஸ் தனது ‘மூலதனம்’ நூலுக்கு முகவுரை எழுதுமாறு டார்வினிடம் கேட்டார்; டார்வின் மறுத்தார்” என்றும் கூறப்படுகிறது.

சமூகத்தில் தங்களுக்கென மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ள பலரும் கூட மேடைகளில் பேசும்போது பயன்படுத்தும் உதாரணங்களுள் ஒன்றாக இந்தச் சம்பவம் இருக்கிறது. மதக் காரணங்களுக்கும் குடும்ப எதிர்ப்புக்கும் டார்வினே அடிபணிந்து மார்க்ஸ் நூலுக்கு முன்னுரை தரமாட்டேன் என்றார் என்பதே அந்தச் சம்பவத்தைப் பேசுவோர் சொல்ல நினைக்கும் அடிப்படைச் செய்தி. 

ஆனால், உண்மையில் அப்படி நடந்ததா? மார்க்ஸ் நூல் அனுப்பினாரா? டார்வின் மறுத்தாரா என்றால் இரண்டுமே ஆம். ஆனால், அந்த மறுப்புக் கடிதம் உண்மையானதுதான். ஆனால் அந்தக் கடிதம் கார்ல் மார்க்ஸுக்கு எழுதப்பட்டது அல்ல. பின்நாட்களில் இந்தக்கடிதம் மார்க்ஸ் தொகுப்புக்குள் சிக்கியதால், குழப்பிக் கொள்ளப்பட்டது. இதுதான் இந்த வரலாற்றுக் கதையின் மையக் குழப்பம். 

அதெப்படி நடந்தது? பார்க்கலாம். 

மார்க்ஸ் டார்வினுக்கு அனுப்பிய Das Kapital பிரதியிலிருந்து தொடங்குவோம். பின் 1873-ஆம் ஆண்டின் உண்மையான மார்க்ஸ்-டார்வின் கடிதப் போக்குவரத்துக்கும், 1880-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற “மறுப்புக் கடிதம்” என்ன சொல்கிறது என்பதற்கும் இடையில் நடந்தது என்ன என்பதை நம் வாசக நண்பர்களுக்கு மூலப்பிரதி ஆதாரங்களுடன் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 

சரி… ஆரம்பிக்கலாமா? 

முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, மார்க்ஸுக்கும் டார்வினுக்கும் நட்பு இருந்ததா என்பதுதான். 

“மார்க்ஸுக்கும் டார்வினுக்கும் இடையில் ஒரு உண்மையான அறிவுசார் தொடர்பு இருந்தது. மார்க்ஸ், டார்வினின் அறிவியல் பணிகளை அறிந்திருந்தார்; குறிப்பாக டார்வினின் பரிணாமக் கருத்துகள் மார்க்ஸின் காலத்திய அறிவுசார் சூழலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

தன்னை விட 9 வயது மூத்தவரான டார்வினின் கோட்பாடுகள், தன் கருத்தியலுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வழங்குவதாக மார்க்ஸ் பார்த்தார்.

அதே காலகட்டத்தில் மார்க்ஸ் தனது மிகப்பெரிய பொருளாதார ஆய்வான Das Kapital-ஐ உருவாக்கிக் கொண்டிருந்தார். 1867-ல் அதன் முதல் தொகுதியின் முதல் பதிப்பு வெளியானது. பின்னர் மார்க்ஸ் அதனைத் திருத்தி விரிவுபடுத்தி, இரண்டாம் பதிப்பை 1873-ல் வெளியிட்டார் (ஜெர்மன் மொழியிலேயே). அந்தப் பதிப்பின் ஒரு பிரதிதான் டார்வினுக்கு அனுப்பப்பட்டது. 

அந்தப் புத்தகம் இன்றும் இருக்கிறது, மேலும் அது டார்வினுக்காக மார்க்ஸ் கையெழுத்திட்ட பிரதியாகவே இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. English Heritage-ன் தகவல்படி, அந்தப் பிரதியில் மார்க்ஸ் “on the part of his sincere admirer, Karl Marx” என்று தன்னைக் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, மார்க்ஸ் டார்வினை உண்மையாகவே அறிவுசார் முறையில் மதித்தார் என்பதற்கு நேரடியான சான்று அது. ஆனால் இங்கேதான் ஒரு முக்கியமான வேறுபாட்டைச் செய்ய வேண்டும். டார்வினை மார்க்ஸ் மதித்தார் என்பது ஒரு உண்மை. ஆனால் அதிலிருந்து, “மார்க்ஸ் தனது நூலை டார்வினுக்கு அர்ப்பணிக்க முயன்றார்” என்று தானாக முடிவு செய்ய முடியாது. வரலாற்று ஆய்வில் இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

மார்க்ஸ் உண்மையில் டார்வினுக்கு ‘மூலதனம்’ அனுப்பினார். ஆனால், முகவுரை எழுதிக்கொடுங்கள் என்று கேட்டோ இந்த நூலை தங்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டோ அல்ல. 

இந்த விவகாரத்தின் மிக முக்கியமான பொருள் சான்று டார்வினிடம் இருந்த Das Kapital பிரதிதான். English Heritage மற்றும் Cambridge University Library தொடர்பான பதிவுகளின்படி, மார்க்ஸ் அந்தப் பிரதியை 1873-ல் டார்வினுக்கு அனுப்பினார். பின்னர் அது Darwin Library-யில் பாதுகாக்கப்பட்டது; இன்று அதை Down House-ல் காண முடிகிறது. அந்தப் புத்தகத்தை Cambridge University Library பாதுகாத்து வருகிறது; 2024-ல் சிறப்பு conservation பணிகளுக்குப் பிறகு அது மீண்டும் Down House-ல் காட்சிக்கு வைக்கப்பட்டது.

மார்க்ஸ் டார்வினுக்கு “sincere admirer” தனிப்பட்ட கையெழுத்துக் குறிப்புடன் அனுப்பிய பரிசுதான் அந்த நூல். டார்வினின் அறிவியல் சிந்தனைகள் மீது மார்க்ஸுக்கு இருந்த மரியாதையும் இதன்மூலம் தெளிவாகிறது எனவே, மார்க்ஸுக்கும் டார்வினுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்ல முடியாது. 

சரி. பரிசாக வந்த நூலை படித்தாரா? அதன்பின் டார்வின் பதில் அனுப்பினாரா என்றால், ஆம். 

மார்க்ஸ் அனுப்பிய Das Kapital பிரதியைப் பெற்ற பிறகு, சார்லஸ் டார்வின் 1873 அக்டோபர் 1ஆம் தேதியிட்டு மார்க்ஸுக்கு நேரடியாகக் கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில்  இது மிகவும் முக்கியமான முதன்மை ஆவணம். Darwin Correspondence Project-ல் இது Letter No. 9080 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது; 

பெறுநர் Karl Heinrich (Karl) Marx, அனுப்பியவர் Charles Robert Darwin என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. Amsterdam-ல் உள்ள International Institute of Social History-ன் Karl Marx / Friedrich Engels Papers தொகுப்பு, அசல் கடிதத்தின் ஆதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் இதோ…

To Karl Marx  1 October 1873

Down, | Beckenham, Kent.

Oct 1. 73

Dear Sir

I thank you for the honour which you have done me by sending me your great work on Capital; & I heartily wish that I was more worthy to receive it, by understanding more of the deep & important subject of political economy. Though our studies have been so different, I believe that we both earnestly desire the extension of knowledge, & that this in the long run is sure to add to the happiness of mankind.

I remain Dear Sir | Yours faithfully | Charles Darwin

அன்புள்ள ஐயா,

‘மூலதனம்’ (Capital) குறித்த உங்கள் மகத்தான படைப்பை எனக்கு அனுப்பி நீங்கள் எனக்கு அளித்த கௌரவத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்; அரசியல் பொருளாதாரம் சார்ந்த அந்த ஆழமான மற்றும் முக்கியமான விஷயத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு, அதனைப் பெறுவதற்கு நான் இன்னும் தகுதியுடையவனாக இருந்திருக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். நமது ஆய்வுகள் வெவ்வேறானவையாக இருந்தபோதிலும், அறிவு விரிவடைய வேண்டும் என்று நாம் இருவரும் உண்மையாகவே விரும்புகிறோம் என்றும், இது நீண்ட கால அடிப்படையில் மனிதகுலத்தின் மகிழ்ச்சியை நிச்சயம் அதிகரிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

என்றும் அன்புடன் | தங்கள் உண்மையுள்ள | சார்லஸ் டார்வின்

இங்கே கவனிக்க வேண்டியது மிக முக்கியமானது: இந்தக் கடிதம் மார்க்ஸுக்கே எழுதப்பட்டது. ஆனால் அதில் “உங்கள் நூலை எனக்கு அர்ப்பணிக்க வேண்டாம்”, “நான் உங்கள் நூலுக்கு முகவுரை எழுத முடியாது”, “மத உணர்வுகள் காரணமாக நான் மறுக்கிறேன்” என்பன போன்ற எந்தக் குறிப்பும் இல்லை. இது ஒரு நன்றி கடிதம். அவ்வளவுதான். 

எனவே “1873-ல் டார்வின் மார்க்ஸின் கோரிக்கையை நிராகரித்தார் டார்வின் என்று சொல்வது பொருந்தாது. 

அப்படியானால் “டார்வின் மறுத்தார்” என்ற கதை எங்கிருந்து வந்தது? அதில் மத உணர்வுகள் காரணம் என்று இருந்ததாக எப்படி சொல்லப்பட்டது? எதன் அடிப்படையில் பலரும் பேசுகிறார்கள்?

இதற்காக ஒரு கடிதம் வேறு ஆதாரம் என்ற பெயரில் பொதுவெளியில் காட்டப்படுகிறதே என்றால், அதுவும் உண்மைதான். ஆனால் முழு உண்மையல்ல. பார்த்துவிடலாம்.

நிகழ்காலத்தில் மிகச்சிறியதாகத் தெரியும் ஒரு நோக்குமயக்கப் பிழை, வரலாற்றில் மாபெரும் சிக்கலாக மாறக்கூடும். அப்படி ஒரு நோக்கு மயக்கப் பிழையாகத்தான் அந்தக் கடிதம் காட்டப்படுகிறது.  உண்மையில் டார்வின் எழுதிய மறுப்புக் கடிதம் மார்க்சுக்கு எழுதியது அல்ல. ஏவலிங்குக்கு எழுதியது. 

எடவ்ர்டு ஏவலிங். பகுத்தறிவுச் சிந்தனையாளர், எழுத்தாளர் மற்றும் அறிவியல் துறை சார்ந்தவர். அவர் டார்வினின் அறிவியல் சிந்தனைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய “Darwin and his works” என்ற கட்டுரைத்தொடர் National Reformer இதழில் 1878 முதல் 1880 வரை 28 பகுதிகளாக வெளிவந்தது.

பின், 1880-ல் அவர் டார்வினின் சிந்தனைகள் தொடர்பான மற்றொரு படைப்பை வெளியிடத் திட்டமிட்டார். அந்தப் படைப்பு பின்னர் The Student’s Darwin என்ற பெயரில் 1881-ல் வெளியானது. இந்த நூலை அவர் டார்வினுக்கு அர்ப்பணிக்க விரும்பினார். எனவே அதற்கு  இப்படித்தான் ஒரு நூலை அர்ப்பணிக்க கோரிய கடிதம் டார்வினுக்கு வந்து சேர்கிறது.

12 அக்டோபர் 1880 அன்று எட்வர்டு ஏவெலிங், டார்வினுக்கு ஒரு கடிதம் எழுதினார். (Darwin Correspondence Project Letter No. 12754) 

அதில் ஏவெலிங், டார்வினின் முந்தைய எழுத்துக்கள் தொடர்பாகத் தாம் எழுதிய பணிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, தனது இரண்டாவது படைப்பை டார்வினுக்கு அர்ப்பணிக்க அனுமதி கேட்டார். அத்துடன், நூலின் பிரதியையும் பார்வைக்கு சேர்த்து அனுப்பியிருந்தார். முழுக் கடிதம் பின்னால், இணைக்கப்பட்டுள்லது. 

அதற்கு 13 அக்டோபர் 1880 அன்று டார்வின் பதில் கடிதம் எழுதினார். அதில் அவர் ஒரு நூலைத் தமக்கு அர்ப்பணிப்பதை ஏற்க விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார். மேலும் மதம் தொடர்பான நேரடி தாக்குதல்களுக்கு தமது பெயர் ஆதரவாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்ற கவலையையும் வெளிப்படுத்தினார். 

அவர் எழுதிய கடிதம் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் வடிவத்தை இங்கே தருகிறேன். 

அன்புள்ள ஐயா,

உங்கள் கனிவான கடிதத்திற்கும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தவற்றுக்கும் மிக்க நன்றி. எனது எழுத்துக்கள் குறித்த உங்கள் கருத்துக்களை எந்த வடிவத்திலாவது வெளியிடுவதற்கு எனது ஒப்புதல் தேவைப்படாது; ஒப்புதல் தேவைப்படாத ஒன்றிற்கு நான் ஒப்புதல் அளிப்பது அபத்தமானதாகவே இருக்கும். 

அந்தப் பகுதியையோ அல்லது தொகுப்பையோ எனக்கு அர்ப்பணிக்க வேண்டாம் என்றே நான் விரும்புகிறேன் (நீங்கள் எனக்கு அளிக்கவிருந்த அந்த கௌரவத்திற்கு நன்றி); ஏனெனில், அத்தகைய அர்ப்பணிப்பு, அந்த ஒட்டுமொத்த வெளியீட்டிற்கும் எனது ஒப்புதல் இருப்பதாக ஒருவிதத்தில் உணர்த்தும்; ஆனால் அந்த வெளியீட்டைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 

மேலும், அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமான சிந்தனையை நான் வலுவாக ஆதரிப்பவன் என்றாலும், கிறிஸ்தவம் மற்றும் இறைக்கொள்கைக்கு (theism) எதிரான நேரடி வாதங்கள் பொதுமக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது (அது சரியோ அல்லது தவறோ); அறிவியலின் வளர்ச்சியால் மனிதர்களின் மனங்களில் ஏற்படும் படிப்படியான தெளிவுணர்வின் மூலமே சிந்தனைச் சுதந்திரம் சிறப்பாக ஊக்குவிக்கப்படுகிறது. எனவே, மதம் சார்ந்த விஷயங்களைப் பற்றி எழுதுவதைத் தவிர்த்து, அறிவியலில் மட்டுமே கவனம் செலுத்துவதை நான் எப்போதும் எனது குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். 

இருப்பினும், மதத்தின் மீதான நேரடித் தாக்குதல்களுக்கு நான் ஏதேனும் வகையில் உதவினால், அது எனது குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கும் என்ற எண்ணம் எனது முடிவில் ஒருவிதச் சார்புநிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

உங்கள் கோரிக்கையை மறுப்பதற்கு வருந்துகிறேன்; ஆனால் நான் வயதானவன், உடல் வலிமை மிகவும் குறைவு. அச்சுப் பிரதிகளைச் சரிபார்ப்பது எனக்கு மிகுந்த சோர்வை அளிக்கிறது.

இப்படிக்கு, என்றும் அன்புடன் | உண்மையுள்ள | சார்லஸ் டார்வின்

அப்படியானால் மார்க்ஸ் இந்தக் கடிதத்தில் எவ்வாறு வந்தார்? இதுதான் வரலாற்றுக் குழப்பத்தின் உண்மையான தொடக்கம். 

1931-ல் வெளியான இந்தக் கடிதத்தின் ஒரு ரஷ்ய மொழிபெயர்ப்பில், அந்தக் கடிதத்தின் பெறுநராக Karl Marx-ஐ தவறாகக் குறிப்பிட்டது. 

அதாவது, 1931 ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் சோவியத் இதழான Pod Znamenem Marxizma (Under the Banner of Marxism) இதழில், பக்கங்கள் 203–204-ல் Charles Darwin-ன் 13 அக்டோபர் 1880 கடிதம், “Charles Darwin to Karl Marx” என்ற தலைப்பில் ரஷ்ய மொழிபெயர்ப்பாக வெளியானது.  இதில் டார்வின் எழுதிய மறுப்பை அடிப்படையாகக் கொண்டு, தனது மூலதனத்துக்கு மெய்ப்பு பார்க்க மார்க்ஸ் கேட்டதாகவும் அர்ப்பணிக்க கேட்டதாகவும் யூகங்கள் உருவாகின. 

இதன் விளைவாகத்தான், மார்க்ஸ் தனது Das Kapital நூலின் அடுத்த தொகுதியை டார்வினுக்கு அர்ப்பணிக்க விரும்பியதாக சில அறிஞர்கள் கருதத் தொடங்கினர்.

இப்போதும் ஒரு செய்தி நமக்கு விளங்கவில்லை. எப்படி Aveling-ன் கடிதம் Marx-ன் ஆவணங்களோடு குழப்பமடைந்தது?

எட்வர்டு ஏவெலிங் பின்னர் கார்ல் மார்க்ஸின் மகள் எலேனார் மார்க்ஸ் உடன் நெருங்கிய உறவில் இருந்தார். இதன் காரணமாக ஏவெலிங் மற்றும் மார்க்ஸ் தொடர்பான ஆவணங்கள் பின்னாளில் ஒன்றோடொன்று கலந்திருந்தன. Darwin Correspondence Project இதையே 1880 கடிதம் தொடர்பான footnote-ல் குறிப்பிடுகிறது: ஏவெலிங்-ன் பின்னைய மார்க்ஸ் குடும்பத் தொடர்பு காரணமாக அவரது ஆவணங்களும் மார்க்ஸின் ஆவணங்களும் ஒன்றாகக் கலந்தன; இதுவே கடிதத்தின் உண்மையான பெறுநரை அடையாளம் காண்பதில் குழப்பத்தை ஏற்படுத்திய காரணிகளில் ஒன்று.

தொடர்புடைய ஆவணங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டபோதுதான் உண்மை வெளியானது. அந்த ரஷ்ய மொழிபெயர்ப்பாளர், கடிதம் யாரிடமிருந்து என்பதைப் பார்த்தாரே ஒழிய யாருக்கு என்பதையும் காலக்கட்டத்தையும் உற்று நோக்கவில்லை. 1970 வரை இந்தத் தகவல் அப்படியே பரவி வந்தது.

வரலாற்றாசிரியர்கள் இந்தக் கடிதத்தின் உண்மையான பெறுநர் யார் என்பதை மீண்டும் ஆராயத் தொடங்கினர். குறிப்பாக 1975 முதல் 1982 வரை இந்த ஆய்வுகள் மீண்டும் மீண்டும் மேம்படுத்தப்பட்டன. 

Margaret A. Fay மற்றும் Lewis S. Feuer ஆகியோர் இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்ததில் குறிப்பிடத்தக்கவர்கள்.

“Is the ‘Darwin–Marx Correspondence’ Authentic?” என்ற ஆய்வை  Annals of Science, (Vol. 32, No. 1, 1975, pp. 1–12) இதழில் வெளியிட்டனர்.

இதில் Darwin-ன் 1880 கடிதம் Marx-க்கு எழுதப்பட்டதாகக் கூறப்படுவதில் Feuer சந்தேகம் எழுப்பினார்.  பின்னர் அவர் 1976-ல் தனது கருத்தை மேலும் திருத்தி:

“The ‘Darwin–Marx Correspondence’: A Correction and Revision” என்ற ஆய்வுக்கட்டுரையை அதே இதழின் அடுத்த தொகுதியில் ( Vol. 33, No. 4, 1976, pp. 383–394) வெளியிட்டனர். 

இதைத்தொடர்ந்து மார்கரெட் ஃபே என்ற அறிஞர் 1978-ல் Journal of the History of Ideas இதழில் “Did Marx Offer to Dedicate Capital to Darwin? A Reassessment of the Evidence” என்ற தலைப்பில் ஆய்வை வெளியிட்டார் (Volume 39, Issue 1, pp. 133–146). 

Ralph Colp Jr. உள்ளிட்ட பிற ஆய்வாளர்களும் Darwin–Aveling–Marx தொடர்புகளை ஆராய்ந்தனர். குறிப்பாக 1982இல் ஒரு ஒட்டுமொத்தத் தொகுப்பாக நடந்த சம்பவங்களை, மூவருக்கும் இடையிலான தொடர்புகளுடன் விளக்கியது. 

இப்படித்தான், 1880இல் டார்வின் எழுதிய மறுப்புக் கடிதம் மார்க்சுக்கு அல்ல; ஏவெலிங்-க்கு எழுதப்பட்டது என்ற உண்மை உறுதியடைந்த விதத்தைப் அடுத்தடுத்த ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. 

படம் உரிமை: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகம்

இந்தக் குழப்பம் தொடங்கியது முதல் தீர்ந்தது வரையிலான ஆய்வுலகப் ஆவணங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போமானால், 

ஆண்டுஆய்வாளர் / ஆதாரம்ஆய்வுக்கட்டுரையின் தலைப்புஇதழ் / தொகுதி / பக்கங்கள்முக்கியத்துவம்
1931Pod Znamenem Marxizma«Письмо Чарльза Дарвина Карлу Марксу» (Letter of Charles Darwin to Karl Marx)Под знаменем марксизма (Under the Banner of Marxism), No. 1–2, pp. 203–20413 October 1880 தேதியிட்ட Darwin-ன் கடிதத்தை Marx-க்கு எழுதப்பட்டதாக தவறாக வெளியிட்டது.
1975Lewis S. Feuer“Is the ‘Darwin–Marx Correspondence’ Authentic?”Annals of Science, Vol. 32, No. 1, 1975, pp. 1–12Darwin–Marx correspondence என முன்வைக்கப்பட்ட கடிதத்தின் உண்மைத்தன்மையை முதன்முதலில் முறையாகக் கேள்விக்குட்படுத்திய முக்கிய ஆய்வு.
1976Lewis S. Feuer“The ‘Darwin–Marx Correspondence’: A Correction and Revision”Annals of Science, Vol. 33, No. 4, 1976, pp. 383–3941975 ஆய்வில் முன்வைத்த கருத்துகளை மேலும் திருத்தி, புதிய ஆவண ஆதாரங்களுடன் விவாதத்தை விரிவுபடுத்தியது.
1976Lewis S. Feuer & P. Thomas Carroll“Further Evidence That Karl Marx Was Not the Recipient of Charles Darwin’s Letter Dated 13 October 1880”Annals of Science, Vol. 33, 1976, pp. 385–38713 October 1880 கடிதத்தின் பெறுநர் Karl Marx அல்ல என்பதற்கான கூடுதல் ஆதாரங்களை முன்வைத்தது.
1976Ralph Colp Jr.“The Contacts of Charles Darwin with Edward Aveling and Karl Marx”Annals of Science, Vol. 33, 1976, pp. 387–394Darwin–Aveling–Marx இடையிலான தொடர்புகளை ஆராய்ந்து, 1880 கடிதத்தின் உண்மையான பின்னணியை விளக்கியது.
1978Margaret A. Fay“Did Marx Offer to Dedicate Capital to Darwin? A Reassessment of the Evidence”Journal of the History of Ideas, Vol. 39, No. 1, 1978, pp. 133–146Marx தனது Capital நூலை Darwin-க்கு அர்ப்பணிக்க முன்வந்தார் என்ற கூற்றை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்த முக்கிய ஆய்வு.
1978P. Thomas Carroll“Correction to Margaret A. Fay’s Article”Journal of the History of Ideas, Vol. 39, 1978, pp. 675–676Fay-ன் ஆய்வில் உள்ள ஒரு குறிப்பிட்ட அம்சத்தைத் திருத்தும் scholarly correction.
1982Ralph Colp Jr.“The Myth of the Darwin-Marx Letter”History of Political Economy, Vol. 14, No. 4, 1982, pp. 461–482Darwin–Marx கடிதம் தொடர்பான முழு வரலாறு, 1931 ரஷ்ய வெளியீடு, பின்னர் ஏற்பட்ட தவறான அடையாளம் மற்றும் அதன் scholarly reassessment ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தது.
இன்றுDarwin Correspondence Project“To E. B. Aveling, 13 October 1880” — Letter no. DCP-LETT-12757Darwin Correspondence Project; archival source: International Institute of Social History, Amsterdam, Karl Marx / Friedrich Engels Papers, D. 1014தற்போதைய அதிகாரப்பூர்வ catalog-ல் கடிதத்தின் பெறுநர் Edward B. Aveling என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; Karl Marx அல்ல.

முதன்மை ஆவணங்கள் சொல்வது என்ன?

தேதிஆவணம்யார் → யாருக்குஎன்ன நடந்தது
1873Das Kapital பிரதியின் பரிசளிப்புMarx → Darwinமார்க்ஸ் தனது நூலை டார்வினுக்கு அனுப்பினார்
1 அக்டோபர் 1873Letter 9080Darwin → MarxCapital அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்
12 அக்டோபர் 1880Letter 12754Aveling → Darwinதனது படைப்பை டார்வினுக்கு அர்ப்பணிக்க அனுமதி கேட்டார்
13 அக்டோபர் 1880Letter 12757Darwin → Avelingஅந்த dedication-ஐ ஏற்க மறுத்தார்
1881The Student’s DarwinAvelingடார்வினின் சிந்தனைகள் குறித்த நூல் வெளியானது

இத்துடன் வேடிக்கையாக ஒரு செய்தியும் பேசப்படுவதுண்டு. மார்க்ஸ் அனுப்பிய நூலை டார்வின் முழுதாக படிக்கவில்லை என்று. 

தேடுவதென்று வந்தபிறகு மிச்சமென்ன மீதியென்ன? தேடிவிடலாம். 

டார்வின்-ன் வசம் இருந்த Das Kapital பிரதியின் பெரும்பாலான பக்கங்கள் இன்னும் பிரிக்கப்படாத நிலையில் இருப்பதாக English Heritage 2024-ல் தெரிவித்தது. பழைய புத்தக அச்சிடும் முறையில், அச்சிடப்பட்ட தாள்கள் ஒட்டப்பட்ட நிலையில் இருக்கும்; வாசகர் அவற்றை வெட்டித் திறந்தால்தான் அடுத்தடுத்த பக்கங்களைப் படிக்க முடியும். அந்தப் பிரதியில் பெரும்பாலான பக்கங்கள் இன்னும் uncut நிலையில் இருப்பதால், டார்வின் அந்த நூலை முழுமையாகப் படித்திருக்க வாய்ப்பில்லை என்று English Heritage கூறுகிறது. 

அந்தப் பிரதி இன்றும் டார்வின் தனது வாழ்க்கையின் முக்கியமான காலத்தைக் கழித்த Down House-ல் பார்வையாளர்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழியைப் படிக்க தன் தந்தை சிரமப்பட்டார் என்று டார்வின் மகன் பிபிசிக்கு பேட்டி அளித்ததும் கவனிக்கத் தக்கது.  இந்த வாதம், பேச்சுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிந்தாலும் பொதுவெளியில் பகிருமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ ஆரோக்கியமானதோ அல்ல என்பது என் எண்ணம். 

ஏனெனில் ஒரு தவறான தகவல் ஒருமுறை ஒரு முக்கியமான நூல் அல்லது மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுவிட்டால், பின்னர் அதை மேற்கோள் காட்டும் பலரும் அதையே மீண்டும் பயன்படுத்தலாம்.

1931-ல் வெளியான, ஒரு, ரஷ்ய மொழிபெயர்ப்பில் நடந்த பிழை, அடுத்த 100 ஆண்டுகளுக்கு அறிவுலக மேதைகளின் நட்பை குறைமதிப்புக்கு ஆளாக்கிவிட்டது. 

இதனை இப்போது இவ்வளவு விரிவாக எழுத வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழலாம்.

பல ஆண்டுகளாக நிலவிய தவறான செய்தி, உண்மை விளக்கப்பட்டும், உரிய பரவலை அடையாமல் இருக்கிறதே என்ற வேதனையில்தான் இதனை இவ்வளவு நுணுகி தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த செய்தியை (டார்வின் மறுத்த  மார்க்ஸ் நூல் – மூலதனம்) பலரும் மேடைகளில் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் மூலக் கடிதத்தைப் பார்க்க எண்ணியதில்லை. அண்மையில், ஒரு நிகழ்வுக்காக உரை தயார் செய்யும்போது, இந்தச் சம்பவத்தை மேற்கோள் காட்ட எண்ணினேன். 

அதற்காக மூலக் கடிதத்தைத் தேட எண்ணியதில் தொடங்கியதுதான் இந்தத் தேடல். என்னைவிட  மிகச் சிறப்பாக மார்க்ஸையும் டார்வினையும் படித்த, கற்ற அறிஞர்கள் பலரும் உண்டு என்பதையும் அறிவேன். இந்தச் செய்தியை முன்பே தெளிவுற அறிந்தவர்கள் இருக்கக் கூடும். எனினும், போதாமை காரணமாகவே இந்தக் கட்டுரையை இத்தனை நீளமாக எழுதியுள்ளேன்.  வாசக நண்பர்கள் இதுவரை வாசித்தற்கே தனி நன்றி. 

ஆவணத் தொகுப்பு — காலவரிசை

  • 1873 — கார்ல் மார்க்ஸ், Das Kapital இரண்டாம் ஜெர்மன் பதிப்பின் முதல் தொகுதியை சார்லஸ் டார்வினுக்கு அனுப்பினார். அந்தப் பிரதியில் டார்வினைத் தனது “sincere admirer” என்று குறிப்பிட்டார். அந்தப் பிரதி இன்றும் டார்வின்-ன் Down House தொடர்பான சேகரிப்பில் பாதுகாக்கப்படுகிறது.
  • 1 அக்டோபர் 1873 — டார்வின் மார்க்ஸுக்கு நேரடியாக நன்றி தெரிவித்தார். Capital நூலை அனுப்பியதற்காக நன்றி கூறி, அவர்களின் ஆய்வுகள் வெவ்வேறானவை என்றாலும் அறிவின் விரிவாக்கத்தை இருவரும் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
  • 12 அக்டோபர் 1880 — எட்வர்டு ஏவெலிங், தனது டார்வின் தொடர்பான படைப்பை அவருக்கு அர்ப்பணிக்க அனுமதி கேட்டார்.
  • 13 அக்டோபர் 1880 — டார்வின் அந்த dedication-ஐ ஏற்க மறுத்தார். மதத்திற்கு எதிரான நேரடி தாக்குதல்களுடன் தனது பெயர் இணைக்கப்படுவது குறித்தும், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் வேதனை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
  • பின்னர் — அந்த 1880 கடிதம் தவறாக கார்ல் மார்க்ஸுக்கு எழுதப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டது.
  • 1970கள் — ஆவணங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டபோது எட்வர்டு ஏவெலிங்தான் உண்மையான பெறுநர் என்பது நிறுவப்பட்டது. Margaret Fay உள்ளிட்ட ஆய்வாளர்கள் இந்தக் கூற்றை மறுபரிசீலனை செய்தனர்.

ஆதாரங்கள்

  1. “To Karl Marx, 1 October 1873” — Charles Darwin, Darwin Correspondence Project (Letter 9080). 1873-ல் மார்க்ஸ் அனுப்பிய Capital நூலுக்குத் டார்வின் நேரடியாக எழுதிய நன்றி கடிதம். அசல் ஆவணத்தின் repository: International Institute of Social History, Amsterdam.
  2. “To E. B. Aveling, 13 October 1880” — Darwin Correspondence Project (Letter 12757). பிரபலமான “மறுப்புக் கடிதம்”; பெறுநர் E. B. Aveling என இன்று தெளிவாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு. 1931-ல் Marx எனத் தவறாக அடையாளப்படுத்தப்பட்ட வரலாற்றையும், பின்னர் Aveling சரியான பெறுநராக மீண்டும் நிறுவப்பட்டதையும் footnote விளக்குகிறது.
  3. “Edward Aveling to Charles Darwin, 12 October 1880” — Darwin Correspondence Project (Letter 12754). Darwin-ன் மறுப்புக்கு முந்தைய நாள் ஏவெலிங் எழுதிய கடிதம்.
  4. “Darwin’s unsolicited gift from Marx put on display at Down House” — English Heritage, 22 February 2024. மார்க்ஸ் அனுப்பிய Das Kapital பிரதியின் physical history, கையெழுத்து, uncut pages, conservation மற்றும் Down House-ல் காட்சி குறித்த விவரங்கள்.
  5. “Darwin in letters, 1880: Sensitivity and worms” — Darwin Correspondence Project. ஏவெலிங்-ன் dedication கோரிக்கை, டார்வின் ஏன் மறுத்தார் என்பதற்கான பின்னணி.
  6. Margaret A. Fay, “Did Marx Offer to Dedicate Capital to Darwin? A Reassessment of the Evidence,” Journal of the History of Ideas, Vol. 39, No. 1 (1978), pp. 133–146.
  7. Terence Ball, “Marx and Darwin,” 1979. Marx Capital-ஐ Darwin-க்கு அர்ப்பணிக்க விரும்பியதாக இருந்த பழைய கருதுகோள் தவறானது என்றும், அந்தக் கடிதத்தின் உண்மையான correspondent Edward Aveling என்றும் குறிப்பிடும் ஆய்வு.

இணைப்புகள்: 

பின்னிணைப்பு 1

To Karl Marx   1 October 1873

Down, | Beckenham, Kent.

Oct 1. 73

Dear Sir

I thank you for the honour which you have done me by sending me your great work on Capital;1 & I heartily wish that I was more worthy to receive it, by understanding more of the deep & important subject of political economy. Though our studies have been so different, I believe that we both earnestly desire the extension of knowledge, & that this in the long run is sure to add to the happiness of mankind.

I remain Dear Sir | Yours faithfully | Charles Darwin

பின்னிணைப்பு 2 – 

Letter From E. B. Aveling   12 October 1880

Royal Polytechnic. | W.

12.10.80

Dear Sir,

Many months ago I ventured to send you the earlier numbers of a series of articles on your works. Of these you were good enough to express your approval.1 The Magazine wherein they appeared came to an untimely end and I have since its decease rewritten the articles & published them together with many others, their successors in the National Reformer.2 The works hitherto dealt with are the Voyage, Volcanic Islands, Geology of S. America, Orchids, Climbing Plants, Insectivorous Plants. I purpose after a study of the Forms of Flowers & Cross & self-fertn. dealing with the Cirripedia & finally with the series commencing with the Origin & ending at present with the Emotions.3

My friends Mrs. Annie Besant and Charles Bradlaugh, M.P. contemplate publishing under the title of the International Library of Science & Freethought a series of works either by great scientific and freethinking men or upon their labors. The first of the series will be a translation of Dr L. Büchner’s “An dem Geistes leben der Thiere” by Mrs. Besant.4 To this translatn. Dr. Büchner has given full assent. A translatn. of some work from the pen of Ernst Häckel by myself is also designed5 and other arrangements in regard to French & Italian works are pending. We desire to make the second volume of the series my work upon your writings and teachings.6 To you, Sir, therefore I again write to know if such a plan will meet with your approval and have the distinct advantage of your personal sanction. We desire from you as from Dr. Büchner and Professor Häckel the illustrious support of your consent. As it is long since I last wrote, I remind you that the volume we desire to produce is designed (1) to give students of your writings a condensed analysis thereof (2) to give those who have not time to read your productions a brief account of your discoveries and ideas.

Further I purpose, again subject to your approval, to honor my work and myself by dedicating the former to you. If you approve of this my wish & of the general plan of our second publicatn., I need hardly say to you how honored we should be were you to see fit to give us the immense support of a few words stating that approval. This would without doubt aid us very greatly in our endeavor to reach large numbers of those who are yet but little acquainted with the thought-work of the 19th century, work with which your name must be for ever associated so closely. I forward herewith a little pamphlet of Dr. Büchner’s already translated into English by Mrs. Besant7 & if it will not be troubling you too greatly I should be very glad to send to you the proof-sheets of my work as they are issued.

With the hope that the help of your approval may be ours |

 I am | yours faithfully | Edward B. Aveling | D.Sc.Lond.

பின்னிணைப்பு – 3

Letter To E. B. Aveling on 13 October 1880

Down, | Beckenham, Kent. | (Railway Station | Orpington. S.E.R.)

Oct. 13th 1880

Private

Dear Sir

I am much obliged for your kind letter & the enclosure.—2 The publication in any form of your remarks on my writings really requires no consent on my part, & it would be ridiculous in me to give consent to what requires none.— I shd. prefer the Part or Volume not to be dedicated to me (though I thank you for the intended honour) as this implies to a certain extent my approval of the general publication, about which I know nothing.—3 Moreover though I am a strong advocate for free thought on all subjects, yet it appears to me (whether rightly or wrongly) that direct arguments against christianity & theism produce hardly any effect on the public; & freedom of thought is best promoted by the gradual illumination of men’s minds, which follows from the advance of science. It has, therefore, been always my object to avoid writing on religion, & I have confined myself to science. I may, however, have been unduly biassed by the pain which it would give some members of my family, if I aided in any way direct attacks on religion.—

I am sorry to refuse you any request, but I am old & have very little strength, & looking over proof-sheets (as I know by present experience) fatigues me much.—4

I remain Dear Sir | Yours faithfully | Ch. Darwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *