பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டது முதலே, சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இதில், புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தை கள தகவல்களுடன் தொடங்கி வைத்திருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.
இதுகுறித்து, முழுமையான ஊடக விசாரணை, நம் தளம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பக்கம் அடுத்தடுத்து புதுப்பிக்கப்படும்.
நடந்தது என்ன?
பெரியார் அறிவுலகத்துக்குச் சென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கிருந்த நூல்கள் குறித்து எழுதிய கட்டுரையில், திடுக்கிடும் தகவல்களை எழுதி இருந்தார். பொய்யான, அலட்சியமான, தவறான தகவல்களை, AI போல மொழிநடையில் நூல்களாக வெளியிட்டுள்ளது அகல்விளக்கு பதிப்பகம் என்று ஒரு அடையாளம் தெரியாத பதிப்பகம்.
1800 புத்தகங்கள் இந்த பதிப்பகத்தில் மட்டும் வாங்கப்பட்டுள்ள நிலையில், தோராயமாக ஒரு நூலின் விலை 1000 ரூபாய்க்கு மேல் உள்ளது. உதாரணமாக, நாலடியார் நூலின் விலை 1400 ரூபாய்.
அதுமட்டுமன்றி, கீழடியில் நந்தி சிலை, 1947இல் முத்துவேல் சுப்பையா ஐயர் என்பவர் தமிழ்நாட்டின் முதல்வர் என்றும் 1957 இல் கருணாநிதி முதல்வர் என்றும் தகவல்கள் அந்நூல்களில் மேலோட்டமாக படிக்கும்போதே கிடைத்துள்ளன. (இவை அத்தனையும் பொய்யான தகவல்கள் தான். வாசகர்கள் குழம்ப வேண்டாம்)
மேலும் நாலடியார் என்பார் ஒரு கவிஞர். மதுரைக்காஞ்சி எழுதியவர் ஒரு அரசர் என முற்றிலும் பொறுப்பற்ற தகவல்கள் இருந்தன.
விலை, பொய்கள், தரமின்மை
இந்தக் கட்டுரைக்குப் பின் எழுந்த வாத விவாதங்களின் மையப்பொருளாக மாறி நிற்கிறது, யார் ஆட்சியில் நடந்தது இது என்ற கேள்வி. ஆனால், இது ஒரு ஊழல் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எந்தக் கட்சிக்கும் இல்லை.
ஒருவருக்கொருவர் கைகாட்டும் வேலையை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ளட்டும். என்ன நடந்தது என்ற விவரத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் வேலை நம்முடையது. எனவே, ஊடக விசாரணையைத் தொடங்கினோம்.
இவர்கள் தான் காரணம் – கைகாட்டும் தவெக
2025இல், பெரியார் அறிவுலகம் உட்பட 5 நூலகங்களுக்கும் நூல்கள் வாங்க தேர்வுக்குழு அமைக்கப்பட்ட அரசாணையை (முதல் பக்கம் மட்டும்) பகிர்ந்து, திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட ஊழல் இது என்று சொல்ல முன்வந்தார், தமிழ்நாடு அரசின் IID நிர்வாகி பிரசன்னா.
பின், பட்டியல் ஒன்றைப் பகிர்ந்து (இணைப்பு கீழே) இவர்கள் காரணம் என்று பதிவிட்டார்.
கோவை மட்டுமல்ல
இதுகுறித்து, நன்செய் பதிப்பக பதிப்பாளர் தம்பி அவர்கள் வெளியிட்ட பதிவில், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன. அவர் தெரிவித்ததாவது,
இத்தகைய முறைகேடுகள் வெவ்வேறு வடிவங்களில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருபவைதான். தீர்வுதான் இல்லை.
அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 1,800 நூல்கள் பெரியார் அறிவுலக நூலகத்திற்கு மட்டுமே அனுப்பப்படவில்லை. திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்ட நூலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்ட நூலகத்தில் 60 பண்டல் பெட்டி நூல்கள், பிரிக்கப்படாமலேயே, அகல்விளக்கு பதிப்பகம் என்ற பெயர் அட்டையிலேயே அச்சிடப்பட்ட நிலையில் இன்னும் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள மாவட்ட நூலகங்களில், முறையான விசாரணை முடியும் வரை அந்த நூல்கள் வாசகர்களின் பயன்பாட்டிற்காகக் காட்சிக்கு வைக்கப்படக் கூடாது.
இந்த விவகாரம் குறித்து நூலகத் துறை விரிவான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தத் துறையில் இலஞ்சம் கொடுத்து நூலக ஆணை பெறுவதற்கான சூழல் ஒழிந்துவிட்டதாக நினைத்த நேரத்தில் போலியான புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.