கிழக்கு கம்சட்கா பகுதியில் ஷிவெலுச் எரிமலை வெடித்து சிதறியதன் விளைவாக ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலில் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் திரும்ப பெறப்பட்டு கொண்டது.
ரஷ்யாவின் கிழக்கில் கம்சட்கா பகுதியில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரியதாகவும், மிகவும் ஆக்டிவாகவும் இருப்பது ஷிவெலுச் எரிமலை. இது கடல் மட்டத்தில் இருந்து 3,283 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குரில் – கம்சட்கா மற்றும் அலுடியன் ஐலேண்ட் ஆர்க்ஸ் ஆகியவை ஒன்றிணையும் பகுதியில் காணப்படுகிறது.
கம்சட்கா கடலோரப் பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. பெட்ரோபவ்லோவ்ஸ்கி – கம்சட்ஸ்கி பகுதியின் கிழே 102 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பில் இருந்து 29 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் பாதிப்பு பெரிதாக இல்லை என்பதை உணர்ந்து சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் ரஷ்ய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இயற்கை பேரிடர் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தற்போது அவசர கால மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், இதர பேரிடர் குழுவினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.