நூலாயணம்

புத்தகம் சொல்லுங்க… நானும் படிக்கிறேன் – நூலாயணம் தொடர் அறிமுகம்

  • November 1, 2024
  • 0

அன்புள்ள வாசகர்களே! நம் நூலாயணம் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. புத்தக விமர்சனத் தொடர் ஒன்றும் தமிழ்ச்சூழலுக்கு புதியது கிடையாது. ஆனால்,...

புத்தகம் சொல்லுங்க… நானும் படிக்கிறேன் – நூலாயணம் தொடர் அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே! நம் நூலாயணம் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. புத்தக விமர்சனத் தொடர் ஒன்றும் தமிழ்ச்சூழலுக்கு புதியது கிடையாது. ஆனால், விமர்சனமும் அறிமுகமும் ஒருசேர இடம்பெறும் தொடராக நூலாயணம் தொடர் இருக்கப்போகிறது.

உயிரில்லை என்றபோதும் நம்மோடு உரையாடி உறவுகொள்ளும் தன்மை புத்தகங்களுக்கே உண்டான தனிச்சிறப்பு. அவற்றில் நமக்கான புத்தகங்கள் எவை நம் புத்தகங்கள் எவை என்பவன்வெல்லாம் மெல்ல மெல்ல வாசிப்பின் வழியாக வந்துசேரும் புரிதல்கள்.

புத்தகத்தேர்வு என்னும் அரிய கலைக்கு அச்சாரமாக இருப்பது, புத்தக உறவு. விரும்பிப்படித்த ஒரு புத்தகத்தின் துணைநூல் பட்டியலை தோண்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டாலே அந்த உறவும் தொடங்கிவிடும். இன்னும் சில நூல்களுக்கு இதைவிடச் சிறப்பான உத்தி ஒன்று உண்டு. ஒரு நூலைப் படிக்க விரும்புகிறீர்கள் என்றால், அந்தப் புத்தகம் படித்தவரோடு பழகுதல் என்பது ஆகச்சிறந்த டெக்னிக். (தலையணைகளாக இருக்கும் பெரிய புத்தகங்களுக்கு இந்த டெக்னிக் பொருந்தும் எ.கா., நள்ளிரவில் சுதந்திரம், ஞானகங்கை, இந்து இந்தி இந்தியா, ஆர்.எஸ்.எஸ். அபாயம் உள்ளிட்டவை)

இதையும் படிங்க:
மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா? எப்படி?
ஏன் penpointnews.in உருவாகிறது?

அச்சடித்த புத்தகங்களை அடுக்கி வைத்து படிப்பதென்பது பழையமுறை. இன்று அப்படி அல்ல. புத்தகங்கள் பன்மடங்கு பெருகிவிட்டன. மின் நூல்களாகவும், மின் நூலகங்களாகவும் புதிய புத்தகங்களின் வரவும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. அரிய புத்தகங்கள், மறுபதிப்பு காணாத புத்தகங்கள் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சில நேரங்களில் பதிப்பகங்கள் தேர்வுக்குப் பின்னே, ஆசிரியர்களின் தேர்வுக்குப் பின்னே, புத்தகங்களின் தலைப்பைக் கொண்டுதான் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. உண்மையில் அது நேர்மாறாகத்தான் இருக்க வேண்டும். இதனாலேயே புத்தகங்களின் தேர்வு அவசியமாகிறது.

எந்த ஒரு நூலையும் யாரையும் கட்டாயப்படுத்தி படிக்க வைக்க முடியாது என்பதில் 100% நம்பிக்கை நமக்கு உண்டு. அதே சமயம், உங்களுக்கான புத்தகம் இன்னும் உங்களை வந்தடையாமல் இருக்கலாம் என்பதிலும் அதே சதவீத உடன்பாடுதான் நமக்கு.

அதே சமயம், முறையான அறிமுகங்களின் மூலம், புத்தகத்தேர்வின் சிரமம் நிச்சயமாக குறையும். இது நமக்கான புத்தகங்களை நாமே தேர்வு செய்ய உதவும். வாசக உலகில் வாசிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பகிர்வும் முக்கியம். வாசித்ததைப் பகிர்வோம். வாசிப்பை பரப்புவோம்.