TVK Vijay: தவெக கொள்கை அறிமுகக் கூட்டமா இந்த மாநாடு? பாடலில் விட்டதை உரையில் கவர் செய்த விஜய்
October 28, 2024
0
அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி, கொள்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன. உறுதிமொழி, கொள்கைகள்
அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் உறுதிமொழி, கொள்கைகள் மற்றும் கொள்கை விளக்கப் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன.
உறுதிமொழி, கொள்கைகள் ஆகியவை வழக்கமானவை தான். அதேபோல கட்சிக்கு பாடல் என்பதும் வழக்கமானதுதான். ஆனால் கட்சியின் கொள்கைப்பாடல் என்பது புதுவிதமானது. அப்படி என்ன கொள்கையை இந்தப் பாடல் விளக்குகிறது என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
வாகை வாகை வாகை வெற்றித் தமிழ் வாகை யானை யானை யானை ரெட்டைப் போர் யானை- என்று பள்ளிக்குழந்தைக்கும் எளிதில் மனதில் நிற்கும்படியான கொஞ்சம் தமாஷான வகையில் அமைக்கப்பட்டுள்ளது கொள்கைப் பாடல். பிரபல ராப் பாடகரான அறிவு இந்தப் பாடலை எழுதியுள்ள நிலையில், விஜயின் குரலிலேயே உணரும்படியாக பாடப்பட்டும் உள்ளது.
வெற்றி வெற்றி என்று தொடங்கும் இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளதன்படி மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் தான் தங்களுடையது என்று வெளிப்படுத்தும் இந்தப் பாடல் சில கேள்விகளுக்கு பதில் தரவில்லை.
என்னதான் பதில்? கொள்கைத் தலைவர்களாக தவெக ஏற்றுக்கொண்டுள்ள ஐவரும் விஜயை எந்தெந்த வழிகளில் வழிநடத்துவர் என்பதை விளக்கும் விதமான காட்சிகளும் அப்பாடலில் இடம்பெற்றிருந்தன. எனினும், கொள்கை ரீதியாக ஆதரவு எதிர்ப்பு ஆகியவற்றுக்கான தெளிவு அவற்றால் கிடைக்கவில்லை.
கல்வியை குறிக்க காமராசர், அரசியல் சாசனத்தைக் குறிக்க அம்பேத்கர், பகுத்தறிவைக் குறிக்க பெரியார், வீரத்தைக் (!) குறிக்கும் விதமாக வேலு நாச்சியார், – பாலினபேதமற்று – தளராத போர் குணத்தைக் குறிக்கும் விதமாக கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவங்கள் வரைகலையால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவர்கள் மட்டும் ஏன்? அப்படியானால் கடவுள் மறுப்பு, மொழிப்போர், ஈழத் தமிழர் விவகாரம், சாதி ஒழிப்பு, சூழலியல் ஆகிய தமிழ்நாட்டின் பிரதான அரசியல் பொருண்மைகளில் தவெகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
அவற்றை விளக்க கட்சித் தலைவர் விஜய் உரையாற்ற வேண்டியிருந்தது. சமூக நீதி தான் தங்கள் கொள்கை என்றால், எதிரிகள் யார் என்பதை விளக்கிப் பேசிய விஜய், “மக்களை மதம், சாதி, இனம், மொழி, ஏழை, பணக்காரன் என்று பிரிக்கும் பிளவுவாத சக்திகளும் ஊழல் மலிந்த நிர்வாகமும் தான் நமது எதிரிகள். அவைதான் நம் இரு எதிரிகள்” என்று பேசினார்.
பெரியார் குறித்து பேசியது என்ன?. “பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார். ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுவோம். அதாவது, ஒவ்வொரு தனி மனிதரின் அவரவர் விரும்பும் கடவுளை வழிபடலாம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேவேளை, பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்” – நடிகர் விஜய்.
கொள்கை செயல்திட்டம் உள்ளிட்டவற்றைக் குறித்து ஏதும் பேசாமல் நான் வந்துவிட்டேன் என்கிற அறிவிப்பையும் கடவுள் மறுப்பின்மை, மதவெறி எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு ஆகியவைதான் தங்கள் கோட்பாடுகள் என்று வாட்சப் பாணியில் ஒரு ஆவேசமான உரையை நிகழ்த்தியிருக்கிறார்.
அதுபோக நான் மாற்று சக்தியில்லை, புள்ளிவிவரங்களோடு பேசப்போவதில்லை, அவர்களே இவர்களே என்ற மேடை முறைமை இல்லை, திராவிட மாடல் என்ற பெயரில் நடக்கும் ஊழலாட்சிக்கு எதிர்ப்பு என மேம்போக்கான அரசியல் பேச்சாக தெரியும் விஜயின் இந்த பேச்சு ரசிகர்களின் விசிலைப் பெற்றுத்தரலாம். பொதுமக்களின் வாக்குகளைப் பெற்றுத்தருமா என்பதை இன்னும் சில கூட்டங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.