கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாக, அத்தடுப்பூசியின் உற்பத்தியாளரான ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்ததையடுத்து தொடங்கிய சலசலப்புகள் மெல்ல மெல்ல பொய்ச்செய்திகளாக மாறி வருகின்றன.
கோவிஷீல்டு போட்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கரைத்த நீர் பருக வேண்டும் என்றும் பப்பாளி கரைசல் குடிக்க வேண்டும் என்றும் இணையத்தில் அறிவுரைகள் உலவி வருகின்றன.
முதலில் நாம் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இதில் உண்டு. இந்த விவகாரம் தொடர்பாக நம்மோடு பேசிய மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா, இது கோவிஷீல்டு தடுப்பூசி வந்தபோதே பேசப்பட்ட பழைய கதை என்று தெளிவுபடுத்தியதோடு, மக்கள் மொத்தமும் அஞ்சி நடுங்குவதற்கு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார். அதே சமயம், உடலில் எந்தவிதமான அசௌகரியம் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசித்து அதன்பிறகே மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எப்படி தொடங்கியது இந்த விவகாரம்:
2024இல் இது மீண்டும் தொடங்க காரணம், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட வழக்குதான். பிரிட்டனில் மட்டும் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதன் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக 51 வழக்குகள் விசாரணையில் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 100 மில்லியன் பவுண்ட் நிவாரணம் கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் முதல் புகார்தாரரான ஜேமி ஸ்காட் தரப்பில், “கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு ஜேமிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் இதனை மறுத்து வாதிட்டு வந்தாலும் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் மட்டும் கோவிஷீல்டு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதலை ( TTS – Thrombosis with Thrombocytopenia Syndrome) பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இது ஏன் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.