உலகம் சிறப்பு கட்டுரைகள்

ஏன் penpointnews.in உருவாகிறது?

  • December 8, 2023
  • 0

போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளை ஊடகங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கும் நிலையில் penpointnews.in உருவாக வேண்டிய அவசியம் என்ன?” என்ற உங்கள் கேள்விகளின் நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏன் penpointnews.in உருவாகிறது?

நட்புக்குரிய வாசகர்களே! Penpointnews.in உங்களை நன்றியுடன் வணங்குகிறது.

“செய்தித் தளங்கள் இரைந்து கிடக்கும் தமிழ்ச்சூழலில் இன்னுமொரு இணையதளம் எதற்கு? போதுமான அளவுக்கு, இன்னும் சொல்லப்போனால் போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளை ஊடகங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கும் நிலையில் penpointnews.in உருவாக வேண்டிய அவசியம் என்ன?” என்ற உங்கள் கேள்விகளின் நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனை முன்னிறுத்தி கேள்வி எழுப்பவும், கேள்வி கேட்கும் விதமாக மக்களை ஆற்றுப்படுத்துவதுமே ஒரு முறையான ஊடகத்தின் முதன்மையான பணி. அதுபோக, புலம் எதுவாயினும் ஆதாரங்களோடு தகவல் சொல்லுதலே இதழியலின் இன்றியமையாத அடிப்படை. ஆதாரங்களற்ற எந்த ஒரு வரியும் இணைய வசதி இல்லாத ஸ்மார்ட்போன் போன்றவைதான்.

“அட, எல்லா ஊடகங்களும் இப்படித்தான் சொல்லித் தொடங்குகின்றன. போகப்போகத்தான் எல்லாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிறது” என்ற உங்கள் உள்மன ஆதங்கம் எங்களுக்கு கேட்கிறது.

Penpoint ஏன் தடம் மாறாது?

ஆம். தொடங்கப்படும்போது இப்படியான எண்ணத்தோடு தொடங்கியிருக்கலாம். ஆனால், Online Marketing, Digital Media Competency, Algorithmic alignment, Business requirement, Organization structure and limitations, Ideological barriers, known and unknown bias and artificial urgency உள்ளிட்ட காரணிகள் வேகமாக ஒரு தலைப்பில் சில வரிகளை வெளியிட்டு விட வேண்டும் என்ற போட்டியை இணைய ஊடகங்களுக்கு உருவாக்கி விட்டன. இந்தப் போட்டி, நிறுவனங்களுக்கிடையிலான தொழில்போட்டியின் இணைய வடிவம். அதாவது, செய்தியின் தகவல்கள் முழுமையாக கிடைக்காத போதும், கூகுள் நியூஸ் பட்டியலில் முதலில் இடம்பிடித்தால்தான் பலருக்கும் இந்தச் செய்தி நம் நிறுவனத்தின் தளத்திலிருந்து முதலில் பரவும். அப்படி பரவினால்தான் அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் (pageviews) பெற முடியும் என்ற போட்டி அது. இதன் விளைவாகவே, அரைகுறை தகவல்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டு பிறகு சேர்த்து (அ) மாற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணமும் விதைக்கப்பட்டு விட்டது.

எனில், செய்தியை செய்தியாக மட்டுமே பார்க்கும் குறைந்தபட்ச அறமும் குறைந்துவிட்டது கண்கூடாக தெரிகிறது. இப்படியான சூழலில், நான் போட்டிக்கு வரவில்லை உண்மை சொல்ல வந்திருக்கிறேன் என்று ஏதாவதொரு செய்தி ஊடகம் வருமா என்று எதிர்பார்த்தோம். எனவேதான் நாமே இதை உருவாக்கியிருக்கிறோம்.

பென் பாய்ண்ட் தளம் உங்களுக்கு இந்த 3 வாக்குறுதிகளை அளிக்கும்.

  1. தனியார் நிறுவனங்களையோ தனிமனித பிரபலங்களையோ முன்னிறுத்தும் செய்திகளை penpointnews.in தளம் ஒருபோதும் வெளியிடாது.
  2. நீங்கள் நேரடியாக சோதித்தறியவும் நம்பவும் ஏற்ற வகையில் முறையான ஆதாரங்களை அடிக்குறிப்புகளாகக் கொண்ட கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும். (உணவு, மருத்துவம் உள்ளிட்ட செய்தியானலும் பிரத்யேகமாக துறை சார் நிபுணரின் கருத்தாக மட்டுமே இருக்கும். தகவல் யாரிடம்/எப்படி உறுதி செய்யப்பட்டது என்ற விவரமும் இடம்பெறும்)
  3. அறமற்ற / உண்மையல்லாத / உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ஒருபோதும் வெளியிடாது. தவறும் பட்சத்தில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது 8870812507 என்ற வாட்சப் எண் வழியே நேரடியாக நீங்கள் எங்களை கண்டிக்கலாம். உங்கள் குற்றச்சாட்டு/ புகார் உண்மையெனில் முகப்புப் பக்க கட்டுரையில் மன்னிப்பு வெளியிடப்படும்.

நிச்சயமாக இங்கு வியாபாரம் கிடையாது. எந்தத் தொகைக்கும் / அன்பளிப்புக்கும் செய்திகளை வெளியிடும் எண்ணம் கிடையாது. இதனால் செய்தித்தளத்துக்கு பொருளாதார வளர்ச்சி இருக்காது என்பதை எங்கள் குழு நன்கறிந்தே இருக்கிறது. அறம் மட்டுமே முதன்மையாக இயங்கும் குழுவுக்கு பொருளாதார வளர்ச்சி இரண்டாம் பட்சம்தான்.

பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம், கள நிலவர செய்திகளுக்கான பயணச்செலவுகள்,இன்னபிற பரமாரிப்பு செலவுகள் என எல்லா தளங்களையும் போலவே இங்கும் செலவினங்கள் உண்டு.

ஆயினும் Trending, Keyword and SEO ஆகிய முறைமைகளை அறத்தோடு கையாள முடியும் என்பதில் நமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

உணவு, உடல்நலம், வெள்ளித்திரை, சின்னத்திரை உள்ளிட்ட தலைப்புகளையும் penpointnews.in கையாளும். ஆனால், ஆதாரமற்ற அனுமானமான எந்த ஒரு தகவலையும் எழுதாது.

உண்மைகளுக்கு ஒருபோதும் பக்கச்சார்பில்லை. நமக்கும் அப்படியே. பாரபட்சமற்று, வாசகர்களாகிய நீங்கள் இருக்கும் நம்பிக்கை ஒன்றே போதுமானது. திடீர் திடீரென வெடிக்கவைக்கப்படும் பிரேக்கிங் செய்திகளோடு நாம் போட்டி போடப்போவதில்லை. மாறாக, நிதானமாக நேரமெடுத்து உண்மையை / முழு நிலவரத்தை விளக்கப்போகிறோம்.

மொத்தத்தில் Manufacturing the Consent என்ற தொழில்முறை உத்திக்கு penpointnews.in இல் இடமில்லை. இது அறம் உலவும் தளம்.

நீங்கள் விரும்பியபடி, உங்கள் செல்போன் கதவுகளைத் தட்டும் எந்த ஒரு செய்தியையும் நீங்கள் படிக்கலாம். எந்த ஒரு நாளிதழ், வார இதழ், தொலைக்காட்சிகளும் இன்னபிற இத்யாதி வலைக்காட்சிகளும் என எந்த இடத்திலும் செய்திகளை பார்க்கலாம். ஆனால், இதில் உண்மை உண்டா என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் penpointnews.in வரலாம்.

நீங்கள் சந்தேகிக்கும் அல்லது படிக்க விரும்பும் உண்மை, வெளியிடப்படவில்லை என்றால் தாரளமாக எங்களுக்கு அனுப்புங்கள். செய்திகளை சரிபார்க்கும் எங்கள் திறன், உங்களுக்கு நிச்சயம் உதவும்.

மெய்ப்பொருள் காண்பதோடு, மலர்தலும் கூம்பலும் இல்லாததே செய்தி. அதை தேடிப்பிடிக்கவும் படிக்கவும் வாசகர்களைப் பழக்குவதே எங்கள் நோக்கம்.

அன்புடன்
Penpointnews.in செய்திக்குழு 🙏