ஆண்டவனுக்கே மனைவி… மதங்கடந்த புராணங்களும் கூத்தாண்டவர் திருவிழாவும் – முழு விவரங்கள்
April 24, 2024
0
நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமான கூவாகம் திருவிழா குறித்த முழுமையான கலாசார மற்றும் சமூகப் புரிதலை "Unveiling Koovagam" என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார் ஆய்வாளர் ஜெஃப் ராய்.
Share:
உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் அரவானிடம் இருந்து தாலிகட்டிக் கொள்ளும் வைபவத்தில் பெருந்திரளான திருநங்கைகள் பங்கேற்க, அந்த கிராமமே விழாக்கோலம் பூணுவது ஆண்டுதோறும் நடைபெறுவதுண்டு. சமூகத்தில் கட்டுடைத்த கலகக்குரல்களாக பார்க்கப்படும் திருநர் சமூக மக்களின் அத்தியாவசியமான நம்பிக்கைகளுள் ஒன்றாக பார்க்கப்படும் கூவாகம் திருவிழா குறித்து எளிய நடையில் விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.
பின்னணி என்ன? சமூகத்தில் உடலளவிலும், உணர்வளவிலும் பல தடைகளை சந்தித்து வரும் திருநர் சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் முக்கிய திருவிழாவாகப் பார்க்கப்படுவது கூத்தாண்டவர் கோயில் திருவிழா. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகத்தில் உள்ளது இந்தக் கூத்தாண்டவர் கோயில்.
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் இன்னுயிரை துறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அர்ஜுனனின் மகனான அரவானைப் பலி கொடுத்தால், பாண்டவர்களுக்கு வெற்றி உறுதியாகும் என்று கூறப்பட்டது. இதை அரவானும் ஏற்றுக் கொள்ள சித்திரை மாதத்தில் வைத்து அவனைப் பலியிட்டு, இறைவனுக்குப் படைத்தனர் பாண்டவர்கள். சிறு வயதிலேயே அரவான் பலியிடப்பட்டு உயிர்த்தியாகம் செய்த நிலையில், அவனையே கணவனாக பாவித்து, திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம், சித்திரைத் திருவிழாவின்போது கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மதங்கள் கடந்த திருநர் கொண்டாட்டங்கள் “இந்து புராணங்களில் மட்டுமன்றி தெற்காசியா முழுதுமுள்ள வளமான இஸ்லாமிய இலக்கியங்களிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய புராணங்களில் மூலோபாய அரசியல் முடிவுகளில் திருநர்கள் முக்கியப் பங்காற்றியதன் நினைவாகவும் விழாக்கள் கொண்டாடும் வழக்கம் உண்டு.” நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமான கூவாகம் திருவிழா குறித்த முழுமையான கலாசார மற்றும் சமூகப் புரிதலை “Unveiling Koovagam” என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார் ஆய்வாளர் ஜெஃப் ராய்.
கூவாகம் விழா: ஆரம்பத்தில் மிகச் சிறிய விழாவாக நடந்து வந்த இந்தத் திருவிழா, தற்போது பிரமாண்ட அளவில் கொண்டாட்டங்களோடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகள் கூவாகத்தில் வந்து கூடுவார்கள். அவர்களுக்கு அழகிப் போட்டி உட்பட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். உற்சாகமும் உணர்ச்சிகளும் நிறைந்த திருவிழாவாக கூத்தாண்டவர் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதிலும் குறிப்பாக, அரவானிடம் இருந்து திருநங்கைகள் தாலி ஏற்றுக் கொள்ளுதல், அரவான் தேரோட்டம், தாலி அறுக்கும் வைபவம் போன்றவை முக்கிய நிகழ்ச்சிகளாக நடைபெறும்.
2024 விழா எப்படி நடந்தது? அதன்படி. இவ்வாண்டு கடந்த 9-ம் தேதி கூத்தாண்டவர் கோயில் திருவிழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக இன்று (24 ஏப்ரல் 2024) தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் வளையல் பூ புத்தாடை அணிந்து தங்களை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்துக் அரவணை கணவனாக ஏற்றுக் கொண்டு பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். அதன் பிறகு இரவு முழுவதும் இவர்கள் கும்மியடித்து ஆடி பாடி மகிழ்வார்கள். இதனைத் தொடர்ந்து நாளை காலை அரவான் கண் திறத்தல் மற்றும் திருத்தேரோட்டம் நடைபெறும்.
இந்த விழாவிற்காக காவல்துறை சார்பில் கிராமம் முழுவதும் 130 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.