கங்கனா ரணாவத் அறை விவகாரமும் தமிழ்நாடும்: வீரமா? முட்டாள் தனமா?
- June 11, 2024
- 0
கோவை ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால் என கங்கனா ரணாவத் விவகாரத்தில் தமிழ் இளசுகளை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா திராவிட இயக்கம்?
கோவை ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால் என கங்கனா ரணாவத் விவகாரத்தில் தமிழ் இளசுகளை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா திராவிட இயக்கம்?
நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கணா ரணாவத் கடந்த 6 ஆம் தேதி சண்டிகார் விமான நிலையத்தில் துணை ரானுவப்படையைச்சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரால் அறையப்பட்டார். எந்தவிதத்திலும் ஏற்புடைய செயல் அல்ல. ஆனால் அதைவிட மோசம், தமிழ்நாட்டில் அதை அணுகும் விதம் தான்.
பின்னணி என்ன?
டெல்லியில் விவசாயிகள் கடந்த 2020ம் ஆண்டு போராட்டம் நடத்திய போது நடிகை கங்கனா ரனாவத் தனது சோசியல் மீடியாவில், வயதான பெண் 100 ரூபாய்க்காக போராட்டத்தில் அமர்ந்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உடனே அந்த பதிவை கங்கனா நீக்கிவிட்டார்.
அத்துடன், “போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தீவிரவாதிகள் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயிகள் இல்லை என்றும், அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிப்பவர்கள்” என்றும் கங்கனா சோசியல் மீடியாவில் குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவையும் பின்னர் கங்கனா நீக்கிவிட்டார்.
அறைந்தது ஏன்? நடந்தது என்ன?
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி சண்டிகார் விமான நிலையத்துக்கு வந்த நடிகையும் எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தை பாதுகாப்பு பணியில் இருந்த குல்தீப் கவுர் என்ற பெண் அறைந்தார். இதுகுறித்து கங்கணா தனது எக்ஸ் பக்கத்தில் கானொலி ஒன்றையும் வெளியிட்டார்.
‘விவசாயிகள் போராட்டத்தை குறித்து கங்கனா கொச்சைப்படுத்தி பேசியது’தான் இதற்கான காரணம் என்றும் குல்தீப் கவுர் தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டத்தை வெறும் 100 ரூபாய்க்காக கூடிய கூட்டம் என்று பேசிய கங்கனா, 100 ரூபாய் கொடுத்தால் அவர் போய் போராட்டத்தில் உட்காருவாரா” என்றும் குல்விந்தர் கவுர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, குல்விந்தர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
பெரியார் மண் – புதிய பூதம்
வன்முறை எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. குல்தீப் கவுர் நடவடிக்கை கண்டனத்துக்குரியதுதான். ஆனால், சமூக ஊடகங்களில் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டு வருவதுதான் வேதனை. மிகக்குறிப்பாக, பஞ்சாப் மொத்தமும் குல்தீப்புக்கு தலைவணங்குவது போல வடிவமைக்கப்பட்ட மீம்ஸ்கள் வைரலாகி வந்தன. பொதுவெளியில் இனி ஆங்காங்கே இப்படி சம்பவங்கள் நடப்பதற்கு அச்சாரமிடவில்லையா இந்த ஊக்குவிப்பு பதிவுகள். இந்த புதிய பூதம் தான் இந்த விவகாரத்தை இன்னும் இன்னும் அச்சுறுத்தலாக்குகிறது. தமிழ்நாட்டில் இது அணுகப்படும் விதம் இன்னும் மோசம்.
இதனினும் முட்டாள்தனமான, குல்விந்தருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரத்தை பரிசாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. கோவை ராமகிருஷ்ணனின் இந்த வன்முறைக்கு துணை போகும் செயல் கடுமையான கண்டனங்களுக்குரியது. பென்பாய்ண்ட் நேரடியாகவே இந்த விவகாரத்தில் கோவை ராமகிருஷ்ணனின் போக்கை கண்டிக்கிறது.
அத்துடன், இது தொடர்பாக பேசிய தபெதிக நிர்வாகி, “குல்விந்தர் கவுரின் வீட்டு முகவரிக்கு அந்த மோதிரத்தை அனுப்பி வைப்போம். தங்க மோதிரத்தை கொரியர் நிறுவனம் ஏற்கவில்லை என்றால், எங்கள் உறுப்பினர் ஒருவரை ரயிலிலோ அல்லது விமானத்திலோ நேரில் அனுப்பி, பெரியார் குறித்த சில புத்தகங்களுடன் மோதிரத்தை ஒப்படைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருக்கும்போது குல்விந்தர் அப்படி நடந்து கொண்டது தவறுதான். அத்துடன், வெளியிடப்பட்ட காரணங்களின் அடிப்படையில் பார்த்தாலே, இது கங்கனாவின் கருத்துகளால் பாதிக்கப்பட்ட ஒரு தனிநபரின் ஆவேசம் என்றே கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? அதுவும் கோவை ராமகிருஷ்ணனுக்கு இதில் என்ன இருக்கிறது?
பாஜக எம்.பி.யை அடித்துவிட்டார் என்ற எண்ணத்தில் புளகாங்கிதம் அடைகிறாரா? பொதுவெளிப் பரவல்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. அதை அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில், உறுதி செய்யும் விதமாகவும் பேசியிருக்கிறார் மூத்த இதழியலாளர் நக்கீரன் கோபால்.
அவர் பேசியதாவது, “2 நாள் முன்னாடி ஒரு நல்ல விஷயம் நடந்தது. ஒரு எம்.பி.க்கு அறை விழுந்தது. உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அது மத்தியில் ஆட்சி அமைக்கப்போகும் அந்த ஆட்சியாளருக்கு விழுந்த அறை. இதுக்கும் மேல ஏதாவதுண்ணா, இப்படித்தான் அறைவோம் என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணை அறைந்து சொன்னது நாள் அது.” இந்தப் பேச்சும் கண்டிக்கத்தக்கது தான். பெண்பாய்ண்ட் திரு நக்கீரன் கோபால் அவர்களை இந்த பொறுப்பற்ற பேச்சுக்காக வன்மையாகவே கண்டிக்க கடமைப்பட்டுள்ளது.
பன்னெடுங்காலமாக பாபர் மசூதி இடிப்பை கண்டித்துக் கொண்டே. குஜராத் கலவரத்தை கண்டித்துக் கொண்டே இன்னபிற இத்யாதி கலவரங்களுக்கெல்லாம் காரணமாக அமைந்த பூரணம் என்று பாஜகவைச் சொல்லி வந்த அதே வாய், ஒரு வன்முறையை ஊக்குவிப்பதையும் அதனை விதந்தோதுவதையும் என்னவென்று சொல்வது?
அறிவு இயக்கம் என்று சொல்லப்பட்ட பகுத்தறிவு இயக்கத்தை இந்த ஒரு அறை புளகாங்கிதப்பட வைக்கிறதென்றால், பகுத்தறிவாளர்கள் தங்கள் தங்கள் பகுத்தறிவின் தெளிவை பகுத்தறிந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளதாகவே பொருள்.
– குட்டிக்குத்தூசி