மே1: உழைப்பாளர் தினத்துக்கு முன்னோடி தமிழ்நாடா? எப்படி?
May 1, 2024
0
1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்" என்று
மே தினம் ஆண்டு தோறும் மே 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது தெரியும். ஆனால், இந்தியாவில் அதற்கான வித்து, ஒரு தமிழரால் சென்னையிலிருந்து தொடங்கப்பட்டது என்பது தெரியுமா? ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான வரலாறு அது. அதனை சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறது இந்தக் கட்டுரை. சரி… ஆரம்பிக்கலாமா?
மே தினம் உருவான கதை: கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம். நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. இதை எதிர்த்து அவ்வப்போது வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் நடக்கும்.
குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் இதில் பிரபலமானது. அதேபோல, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வரிசையில் 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும் ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களின் மைல் கற்கள்.
1889ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்று பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அன்று உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலின் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. (மே தினம். அறிஞர் அண்ணா,1975)
தமிழ்நாடும் தொழிலாளர்களும் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில்தான் மே தினம் அனுசரிக்கப்பட்டது என்பது நாம் கவனிக்க வேண்டிய அம்சம். அதற்கு முன்னார் தொழிலாளர் அமைப்பு என்ற எண்ணம் தொடங்கிய இடத்தையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
1918ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’தான் இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பு,” என்கிறது டி.வீரராகவன் எழுதிய ‘மேக்கிங் ஆஃப் மெட்ராஸ் ஒர்கிங் கிளாஸ்’ என்ற ஆய்வு நூல். அப்படிப் பார்த்தால், 1918 முதலே தொழிலாளர் கூட்டமைப்புகள் உருவாகியிருந்ததை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அடுத்த 6 மாதங்களுக்குள் பல்வேறு ஆலைகளிலும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகத் தொடங்கின. இதில் திருவிக, நடேச முதலியார் (நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவர்), சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட மெட்ராஸ் மாகாணத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பலரும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை புரிந்தனர். ஆனால், 1925ஆம் ஆண்டு, அமைப்பு ரீதியாக இருந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக இயங்கத் தொடங்கியது.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்: காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும், கம்யூனிச சிந்தனைகளில் பேரார்வம் கொண்டிருந்த சிங்காரவேலர்தான் இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வளர்ச்சியில் மெட்ராஸ் மாகாணத்தில் பெரும்பங்கு வகித்தவர் என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாமலர்.
மே தினத்தை உழைப்பாளர் தினமாக கொண்டாடத் தொடங்கியவரும் இவர்தான்.
1923ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதல்முறையாக மே தினம் கொண்டாட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் சிங்காரவேலர். அதற்கு முன்னதாகவே 1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். ” உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாகவே சென்னையில் மே தினம் கொண்டாட முடிவு செய்தார்.
இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தலைதூக்கத் தொடங்கிய சமயத்தில் அதன் நிறுவனத்தலைவர்களில் ஒருவராக இருந்த சிங்காரவேலர்தான் இந்த மே தினக் கூட்டத்துக்கான மூளையாக செயல்பட்டார் என்கிறது ‘சிங்காரவேலர் – தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்ற ஆய்வு நூல்.
இன்றைய மெரீனா கடற்கரை பகுதியில் சிங்காரவேலர் தலைமையிலும் திருவான்மியூர் கடற்கரையில் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையிலும் என இரண்டூ இடங்களில் மே தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, கல்கத்தாவுக்கு தந்தி ஒன்றும் அனுப்பப்பட்டது. அந்த தந்தியில், ‘சென்னையில் மே தினத்தில் லேபர் கிசான் கட்சி தொடங்கப்பட்டது. தோழர் சிங்காரவேலு தலைமையில். மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. கட்சியின் அகிம்சை வழிமுறை குறித்து தலைவர் விளக்கினார். பொருளாதார நிவாரணம் கோரப்பட்டது. தொழிலாளர் விடுதலைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தேவை என வலியுறுத்தப்பட்டது’ என்று தகவல் இடம் பெற்றிருந்ததாக 1923ஆம் ஆண்டு மே 2-ம் தேதி வெளியான ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆண்டுதோறும் மே 1 உழைப்பாளர் தினம் என்பதை அறிந்திருக்கும் நாம், முதல் மே தினம் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு சென்னையில்தான் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது என்பதையும் அறிவோமாக.