02/07/2026
News ஆசிரியர் தேர்வுகள் சினிமா தமிழ்நாடு

Director Bhagyaraj: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் காலமானார்

  • June 27, 2026
  • 0

பாக்யராஜின் திரைநாயகன் சாதாரண மனிதன்; ஆனால் அவன் சிந்தனை கூர்மையானது. அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் கலந்த அந்த பாத்திர வடிவமைப்பு, அவரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக்கியது.

Director Bhagyaraj: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் காலமானார்

திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் இயக்குநர் பாக்யாராஜ் இன்று (27.06.2026) மாரடைப்பால் காலமானார்.

தமிழ் சினிமாவுக்கு இது போதாதகாலம் என்று தான் சொல்ல வேண்டும். பாரதிராஜா, பாக்யராஜ் என தொடர்ந்து பெரும் ஆளுமைகள் அடுத்தடுத்து காலமாகியுள்ளனர். தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி கே. பாக்யராஜ் காலமானதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் திரைக்கதை மொழியை மக்களிடம் மிக எளிதாகவும் நெருக்கமாகவும் கொண்டு சென்ற இயக்குநர், நடிகர், வசனகர்த்தா கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மயக்கநிலையில் கொண்டு செல்லப்பட்ட அவர், மருத்துவர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1953 ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் பிறந்த பாக்யராஜ், தமிழ்த் திரையுலகில் ஒரே நேரத்தில் பல முகங்களை தாங்கிய கலைஞராக திகழ்ந்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பத்திரிகையாளர் என அவரது பயணம் அரை நூற்றாண்டை கடந்தது.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களின் வழியாக திரையுலகின் அடிப்படைகளை கற்றார். பின்னர் புதிய வார்ப்புகள் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுவர் இல்லாத சித்திரங்கள் அவரது இயக்குநர் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா போன்ற படங்கள் அவரது பெயரை தமிழ்ச் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லிகளின் வரிசையில் நிலைநிறுத்தின. குறிப்பாக, அன்றாட மனிதர்களின் ஆசைகள், குறைகள், நகைச்சுவை, குடும்ப உறவுகள் ஆகியவற்றை கலந்துரையாடும் விதத்தில் அவரது திரைக்கதைகள் தனி பாணியை உருவாக்கின.

பாக்யராஜின் திரைநாயகன் சாதாரண மனிதன்; ஆனால் அவன் சிந்தனை கூர்மையானது. அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் கலந்த அந்த பாத்திர வடிவமைப்பு, அவரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக்கியது. அவரது வசனங்களில் நகைச்சுவை இருந்தது; அதே நேரத்தில் சமூகத்தின் சிறிய முரண்பாடுகளையும் கவனிக்கச் செய்யும் கூர்மையும் இருந்தது.

2026 ஜனவரியில் அவர் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, மீண்டும் இயக்கத்துக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்திருந்தார். 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததோடு, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

பூர்ணிமா பாக்யராஜ், மகள் சரண்யா, மகன் சாந்தனு உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த ரசிகர்களுக்கும் இந்த மறைவு பெரும் இழப்பு. பாக்யராஜ் மறைந்தாலும், தமிழ்ச் சினிமாவில் “திரைக்கதை தான் படத்தின் முதுகெலும்பு” என்பதை நிரூபித்த அவரது படைப்புகள் நீண்ட காலம் பேசிக்கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *