மதுரை மாணவி டூ முதல்வரின் தனிச் செயலர்: யார் இந்த லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்?
- May 11, 2026
- 0
தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக விளங்கும் ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ், முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் முக்கிய நிர்வாக மாற்றங்களில் ஒன்றாக, ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சமூகநலன் மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் தொடர்பான அரசுத் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் நியமனம் ஏன் இவ்வளவு பேசுபொருளாகிறது. யார் இவர்?
1978 டிசம்பர் 10 அன்று பிறந்த ஜி. லட்சுமி பிரியா, தமிழ்நாடு கேடரின் 2006 ஆம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.இ. மற்றும் எம்.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். 28 வயதில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று நிர்வாகத் துறையில் தனது பயணத்தை தொடங்கினார்.
லட்சுமி பிரியா, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்தார். தனது பணிக்காலத்தில், சமூக முன்னேற்றம் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற “TN Beat Expo 2025” கண்காட்சியில் பேசிய அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கு இந்த கண்காட்சி முக்கிய தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். 1500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை அங்கு காட்சிப்படுத்தியிருந்ததாகவும், தொழில் வளர்ச்சி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனது நிர்வாக வாழ்க்கையில் லட்சுமி பிரியா பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மாவட்ட ஆட்சியர், ஆணையர், இணை ஆணையர், இணைச் செயலாளர், திட்ட இயக்குநர் மற்றும் துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.
அரசுத் திட்டங்களை துல்லியமாக செயல்படுத்தும் திறன் மற்றும் சமூகநல நடவடிக்கைகளில் கொண்ட ஈடுபாடு காரணமாகவே, முதல்வரின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமி பிரியா, சமூகநலத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற பின்தங்கிய சமூகங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள், அரசுத் திட்டங்களின் கண்காணிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றுள்ள இவர், நிர்வாக திறன் மற்றும் சமூக அக்கறையால் தமிழக நிர்வாக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க அதிகாரியாக பார்க்கப்படுகிறார்.