இந்திய இதழியலின் தந்தை யார்? வரலாறு வரலாறாகவே இருக்கட்டுமே!
ஒலி மொழியாக உருவம் பெரும் முன்பே செய்தி சொல்லும் பழக்கம் பிறந்துவிட்டது. மொழியின் பிறப்புக்கும் மூத்த செயல்பாடான இதழியலை, இந்தியாவில் வடிவமைத்த முன்னோடிகள் பலர். ஆனால் அதில் இதழியலின் தந்தை என யாரை அழைப்பது? தங்கள் விருப்பங்களுக்கேற்ப இணையத்தில் பலரும் இதழியலின் தந்தை என்று பல்வேறு பெயர்களை எழுதி வருகின்றனர்.
உண்மை
அங்குமில்லை
இங்குமில்லை
வாதப் பிரதிவாதங்களுக்கிடையில்
சலனமற்று
ஓடிக்கொண்டிருக்கிறது. என்பது கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய ஒரு கவிதையின் சாரம்.
அப்படித்தான், ‘இந்திய இதழியலின் தந்தை’ விவகாரத்தில் சத்தமின்றிக் கிடக்கிறது ஹிக்கியின் பெயர்.
இதற்கிடையில் இந்திய இதழியலின் தந்தை சுப்ரமணிய பாரதியார்தான் என்கிறது ஒரு தரப்பு. ராமானந்த சட்டர்ஜிதான் இதழியலின் தந்தை என்கிறது மற்றுமொரு தரப்பு.
இந்திய மண்ணில் மக்களுக்கான இதழியல் என்று சிந்தித்தால் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் பெங்கால் கெசட் தான் முதலிடம் பெறும். இது குறித்து வரலாற்றில் போதுமான தகவல்கள் முன்பு தொகுக்கப்பட்டதில்லை.
ஆனால், 2018ஆம் ஆண்டுக்குப் பின் நிலைமையை மாற்றினார் அமெரிக்க ஊடகவியலாளரும் எழுத்தாளாருமான ஆண்ட்ரூ ஒட்டிஸ். 6 ஆண்டுகால தொடர் ஆராய்ச்சி மற்றும் பயணங்களின் வழியாக இதழியல் உலக வரலாற்றில் ஒரு மைல்கல் ஆவணத்தை வழங்கியிருக்கிறார் அவர். ஹிக்கி குறித்து முன்பில்லாத அளவுக்கு ஏராளமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது அவரது “ Hicky’s Bengal Gazette: The Untold Story of India’s First Newspaper ” என்ற அவரது நூல்.
அந்த வகையில் வரலாற்றில் இந்திய மண்ணில் முதல் செய்தித்தாள் என்ற பெருமை ஹிக்கி தொடங்கிய ‘பெங்கால் கெசட்’ செய்தித்தாளுக்கே உண்டு. காலவாரியாகப் பார்த்தால் 200 ஆண்டுகளுக்கு முன்பு 1780லேயே தொடங்கப்பட்ட செய்தித்தாள் அது.
தமிழில் இதழியல் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்களில் ஹிக்கியின் பெங்காள் கெசட் குறித்த போதுமான தகவல்கள் இல்லை என்றபோதும், குறைந்தது 3 பக்கங்களுக்கு மிகாமல் மேலோட்டமாகவேனும் சொல்லும் அளவுக்கு தகவல்கள் உள்ளன. அதற்கு மேல் விரிவான தகவல்கள் சொல்லப்படாமல் இல்லை. அவை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
1780இல் ஒரு செய்தித்தாளைத் தொடங்கி, மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்று நடத்தினார் ஹிக்கி. மக்களுக்காக என்றாலே, ஆட்சியாளர்களுக்கு எதிர்தான் போல. பெங்கால் கெசட்டும் ஆட்சியாளர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தத் தொடங்கவே, அதிகாரம் ஒடுக்கத் தொடங்கிற்று.
அஞ்சல் சேவையை ரத்து செய்வது, திடீர் சோதனைகள் கைது நடவடிக்கை என தொடர்ந்து நெருக்கடிக்குள்ளானபோதும் தொடர்ந்து பத்திரிகையை நடத்தி வந்தார்.
ஒரு புள்ளியில், குண்டர்களுடன் நுழைந்து அச்சகத்தை அடித்து நொறுக்கி, கைது செய்யப்படுகிறார் ஹிக்கி. மிகுந்த பக்கச்சார்புடன் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஹிக்கிக்கு சிறைதண்டனை வழங்கப்படுகிறது.
இருந்தும் ஓயவில்லை. சிறைக்குள் இருந்தபடி தொடர்கிறது இதழியல். அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வரை அனைவரையும் விமர்சித்தும் கேலிச்சித்திரங்களோடும் பத்திரிகை வெளியாகிறது.
இதற்கு மேலும் பொறுக்க முடியாத மாகாண ஆளுநர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் இவர்களைப் போலவே ஹிக்கியின் இதழியலால் அம்பலப்பட்டு ஆத்திரத்திலிருக்கும் பாதிரியார் என எதிர்ப்புகள் இணைய, உச்சகட்டமாக ஒரு முடிவு எட்டப்பட்டது.
“பெங்கால் கெசட் இதழுக்குத் தடை. அச்சகத்தையும் கம்பெனி அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ளும்” என்று அறிவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அச்சகத்தின் அனைத்துப் பொருட்களும் மிகக்குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டு இதழ் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் இதழ் தொடங்க முயற்சி செய்தார். ஆனால், பொருளாதாரம் பொருந்தவில்லை. பின் வறுமையில் வாடி, தன்னை எதிர்த்தவர்களிடமே பொருள் கேட்டு மன்றாடும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆளில்லாமல் இறந்து கிடந்தார் அகஸ்டஸ் ஹிக்கி எனும் இதழியல் பிதாமகன்.
எல்லோரையும் போலவே பொருள் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா வந்தவர்தான். அச்சுக்கோர்க்கும் உதவியாளராகத்தான் பணிபுரிந்து வந்தார். ஆனால், சூழல் அவரைச் செய்தியாளராக மாற்றியது. அதிலும் துணிகர இதழியலுக்கு பாதை அமைத்த பெருந்தகையாக வரலாற்றில் யாரும் மறுக்க முடியாத அறத்துடன் இந்தியாவின் முதல் முழுநேர இதழியல் தொழிலை நடத்திக் காட்டியவர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கிதான்.
இதற்கிடையில் பாரதியார் தான் இதழியலின் தந்தை என்பது ஒரு தவறான புரிதல். இந்து நாளேட்டைத் தொடங்கிய ஜி. சுப்ரமணிய ஐயர் பெயரும் பாரதியாரின் இயற்பெயரான சி.சுப்ரமணிய பாரதி பெயரும் (பாரதியின் தந்தைபெயர் சின்னச்சாமி ஐயர்) குழப்பப்படுவதால் வரும் சிக்கல்தான். ஜி.சுப்ரமணிய ஐயர் பிறக்கும் முன்பாகவே ஹிக்கியின் பெங்கால் கெசட் ஏறக்குறைய 70 ஆண்டுகால முன்னோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்துசுவாமி ஐயரின் நீதிமன்ற நியமனத்தை எதிர்த்த ஆங்கிலோ-இந்திய பத்திரிகைகளால் வெகுண்டெழுந்து நமக்கென (இந்தியர்களுக்கென) ஒரு இதழ் வேண்டும் என்று தொடங்கிய ஜி.சுப்ரமணிய ஐயர் இந்திய இதழியல் வரலாற்றில் ஒருபோதும் மறக்கவோ மறுக்கவோ முடியாதவர் என்பதில் மாற்றமில்லை .
ராமானந்த் சட்டர்ஜி இதழியல் துறையில் ஆற்றிய பணிகளுக்காக பெரிதும் அறியப்படுபவர். குறிப்பாக India in Bondage- Her Right to freedom நூலை எழுதியதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுதந்திரப் போராட்டத்தின் இலக்கிய பங்களிப்பு என்று சொல்லலாம். ஆனால், இவர் பிறப்பதற்கு ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் அதிகாரத்தை எதிர்த்துக் குரலெழுப்பும் மக்கள் நாளேடாக இயங்கிய பெருமை ஹிக்கியின் பெங்கால் கெசட்டையே சாரும்.
சுருக்கமாகப் பார்த்தால்,
ஹிக்கியின் பெங்கால் கெசட் – 1780
ஜி.சுப்ரமணிய ஐயர் பிறப்பு – 1855
தி.இந்து நாளிதழ் பிறப்பு – 1904
ராமனந்த் சட்டர்ஜி பிறப்பு – 1943
அன்பின் அடிப்படையில் யாரும் யாரையும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால், ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாறு அமைய வேண்டும். இந்தியர் ஒருவர்தான் இந்திய இதழியலின் தந்தை என்று அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். நம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாத போதுதான் வரலாறு வரலாறாகவே இருக்கும்.