ஆசிரியர் தேர்வுகள் இந்தியா சிறப்பு கட்டுரைகள்

இணையத்தை கலக்கும் ‘கஜ காமினி நடை’ –

  • May 24, 2024
  • 0

இணையத்தில் வைரலாகும் காஜா காமினி நடை என்றால் என்ன? அதன் பின்னணி என்ன?

இணையத்தை கலக்கும் ‘கஜ காமினி நடை’ –

அண்மையில் ஒரு வடநாட்டுத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு காட்சி இன்ஸ்டாகிராமில் தொற்றிப் பரவி வருகிறதாம். இவை எதுவும் கேள்விப்பட்டிராத என்னிடமும் அந்தச் செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. அந்தச் செய்தி மூலம் சில இலக்கிய வழக்குகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

இலக்கிய வழக்கை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் திரையிசைப்பாடல்களின் பங்கு பெரிது.  உவமைகளும் உருவகங்களும் கவிஞர்களுக்கு இயல்பான நறுமணப் பொருள்கள். அவற்றைச் சரியான இடங்களில் எடுத்தாண்டு இலக்கியச் சுவையைக் கூட்டுவார்கள்.

இவற்றில் ஒவ்வொரு மொழியின், பண்பாட்டின், இலக்கிய மரபின் தாக்கம் இருப்பதில் வியப்பில்லை.  ஆனால், நமக்குப் பழக்கமற்ற மரபுகள் வேறொரு மொழியில் அழகியலாகக் கொண்டாடப்படுவது வியப்பளிக்கும்.

Gaja Kamini walk

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் கம்பனின் காவியச் சுவையை எடுத்தாள்வதில் வல்லவர்.  பின் வரும் பாடலில் அப்படி ஓர் உவமை வந்திருக்கும்.

தலைவன் தலைவியை நோக்கிப் பாடுகிறான்:

மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது

தலைவி தன் பங்குக்குத் தலைவனைப் பாடுகிறாள்:

தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது

தலைவனின் நடையைச் சின்ன யானையின் நடையோடு ஒப்பிடுகிறாள் தலைவி. பள்ளியில் கம்பனைப் படித்தபோது இதே உவமை வந்தது.  பள்ளியாசிரியர்கள் இதுபோன்ற காதல் பாடல்களை மேலெழுந்தவாரியாகக் கடந்து விடுவார்கள்.  சரி, கம்பன் என்ன சொன்னான்?

ஓதிமம் ஒதுங்க, கண்ட
     உத்தமன், உழையள் ஆகும்
சீதை தன் நடையை நோக்கி, சிறியது ஓர்
     முறுவல் செய்தான்;
மாது அவள் தானும், ஆண்டு வந்து,
     நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர்
     முறுவல் பூத்தாள்.

இராமனும் சீதையும் கோதாவிரி ஆற்றங்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது இராமன் தங்களைப் பார்த்து விலகிய அன்னப்பறவையைப் பார்க்கிறான். உடனே சீதையின் நடை நினைவுக்கு வர, புன்முறுவல் பூக்கிறான்.

அப்போது ஆற்றில் நீர்பருகித் திரும்பிச் செல்லும் யானையைப் பார்க்கும் சீதைக்கு இராமனின் நடை நினைவுக்கு வருகிறது. அவளும் புதுமுறுவல் ஒன்று பூக்கிறாள்.

அவ்வளவுதான். அன்னத்தின் நடையைச் சீதையின் நடையோடு ஒப்பிட்டு, அன்னமே வெட்கி விலகியதாக எண்ணி இராமன் புன்முறுவலிக்கிறான்.

சீதையோ, இராமனின் நடை முன்பு தன் நடை தோற்றது என்று யானை விலகிச் சென்றது என்றெண்ணித் தனக்குள்ளே உவகை கொண்டு ஒரு புதுமுறுவல் பூக்கிறாள்.

“அன்ன நடை” என்ற சொல் நமக்கும் பழக்கமான சொல்தான்.

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?

என்று கண்ணதாசன் கொண்டாடிய நடை அது. பெண்களின் நடையை அன்னத்தின் நடையோடு ஒப்பிடும் அழகியல் மரபு தமிழில் இயல்பானது.  கால்கள் இரண்டும் பின்னிப்பின்னி நடப்பதை அன்னநடையாகக் கொண்டாடியவர்கள் தமிழ்ப்புலவர்கள்.

சரி, இதற்கும் வடநாட்டு நெடுந்தொடருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

வருகிறேன்.

“கச காமினி நடை” (‘Gaja Gamini Walk’) என்றொரு நடை ஈராமாண்டி (‘Heeramandi’) என்ற நெடுந்தொடரில்  ஆதித்தி ராவ் ஐதாரி (Aditi Rao Hydari) என்ற நடிகையின் நடனத்தின் மூலம்  இன்சுடாகிராமில் தொற்றிப் பரவிக்கொண்டிருக்கிறதாம்.

அதில் யானை போன்ற நடையை அழகான பெண்ணின் நடைக்கு ஒப்பிட்டு அதுவே ஆண்களைக் கவரும் என்ற சமக்கிருத இலக்கிய மரபை விளக்குகிறார்கள்.

என்னது, ஆனையின் நடையைப் பெண்களின் நடையோடு ஒப்பிடுவதா என்று கொஞ்சம் அதிர்ந்து விட்டேன்!

அதுதான் சொன்னேன் அல்லவா?  ஒவ்வொரு மொழிக்கும் அழகியல் மரபு வெவ்வேறாக இருந்தால் அது நம்மை வியக்க வைக்கும்.

யானையின் நடையில் இராமனின் நடையைப் பார்த்தாள் சீதை என்றான் தமிழ்மரபின் கம்பன். நமக்குப் பெண்களின் அன்ன நடை அழகு. வடமொழியில் ஆனைநடையைப் பெண்களின் பின்னழகுக்கு ஒப்பிட்டு அதுவே ஆண்களை ஈர்க்கும் என்று “காமினி” என்றே அழைத்திருக்கிறார்கள்.

கட்டுரையாளர் : மணிவண்ணன்