தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல இடங்களில் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை கவனமுடனும், எச்சரிக்கையுடனும் திட்டமிட டி.ஜி.பி சங்கர் ஜிவால் காவல் துறைக்கு அறிவுறுத்தி உள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்ட கட்டுப்பாடு, வழிமுறைகள் குறித்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது.
புதிய, பதட்டமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கூடாது. கடந்த காலங்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் தான் அனுமதி வழங்க வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள், கொடிகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என அறியுறுத்தப்பட்டு உள்ளது.
நீர் நிலைகளில் கரைக்கும் முன், சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருக்கும் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை பொருட்களை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.