தலையங்கம் – தேர்தலில் வெறுப்பு பேச்சுகளை நிறுத்த என்ன தேவை? – Penpointnews
- May 15, 2024
- 0
வெறுப்பு பேச்சு வாக்காக மாறுகிற சமூகம் ஆபத்தின் அடையாளம்...
வெறுப்பு பேச்சு வாக்காக மாறுகிற சமூகம் ஆபத்தின் அடையாளம்...
இந்தியாவில் இந்தமுறை நடந்துகொண்டிருக்கும் தேர்தல் வெறும் மக்களவைத் தேர்தல் அல்ல. இது நேரடியாக மதவாதத்துக்கு எதிரான மக்களாட்சிப் போராக மாறி வருகிறது. அனல் பறக்கும் தேர்தல் களத்தின் பிரதான பேசுபொருட்களாக மத அடிப்படையிலான அணுகுமுறைகள் முன்வைக்கப்படுகின்றன.
நேரடியாக பிரதமர் இதை தன் பிரசார உரைகள் மூலம் தெரிவித்தும் விட்டார். அடுத்த கட்டமாக பாஜக அடிப்பொடிகள் அதே தொனியில் அதே செய்தியை பேசவும் தொடங்கிவிட்டனர்.
ஆடுற மாட்டை ஆடியும் பாடுற மாட்டை பாடியும் தான் கறக்க வேண்டும் என்றால், இந்த தேர்தலில் வெறுப்பு பேச்சை அப்படி அவ்வளவு எளிதாக கடக்க கூடாது. சொல்லப்போனால், முதலில் அது திறமை அல்ல நடிப்பு என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.
தொடக்கத்தில் தங்களை ஜனநாயக சக்திகள் என்று நிறுவிக்கொள்ள இரு தரப்பும் (NDA கூட்டணி & INDIA கூட்டணி) போட்டி போட்டுக்கொண்டிருந்த நிலையில், அந்தப் போட்டியிலிருந்து விலகி, வழக்கம் போல தனக்கு தெரிந்த விளையாட்டை ஆடி வெல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.
இதைப் புரிந்துகொள்ள நாம் தொடங்கவேண்டிய இடம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. மிகச்சரியாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வந்தபிறகு பிரதமர் நரேந்திர மோதி (மோதி என்பதே அவரது பெயருடன் வரும் சாதி. மோடி அல்ல) “இது முஸ்லிம் லீக் அறிக்கை போல உள்ளது” என்று பேசினார். அங்கிருந்துதான் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களும் இந்த கோணத்தில் பேசத் தொடங்கினர்.
இந்து – முஸ்லிம் வெறுப்புணர்வை விதைத்து விளைவிக்கப்படும் வாக்கு அறுவடைதான் நமக்கான ஈவு என்பதை பாஜக தெளிவாக புரிந்து வைத்துள்ளது. எல்லோருக்குமான சமூகம் என்பது கோல்வாக்கரின் கொள்கை வழி மட்டுமே உருவாகும் என்று நம்பும் அக்கட்சி அதனை ஊட்டவும் ஊக்குவிக்கவும் முயற்சிப்பதை அக்கட்சியின் தவறு என்று சொல்ல முடியுமா என்ன?
அதே சமயம், இதை சரியென்றும் தவறென்றும் முடிவு செய்ய வேண்டிய மக்களுக்கு எது சரி எது தவறு என்பதை எளிய மொழியில் எடுத்து வைக்க தவறியது யார்?
பிரதமரும் ஏதோ ‘தவறுதலாக அல்லது மிக கவனமாக ஒருமுறை’ பேசிவிட்டார் என்று நினைக்கவும் இதில் இடமில்லை. காரணம், மீண்டும் மீண்டும் இதை வீராவேசத்துடன் கையில் எடுத்து முஸ்லிம் வெறுப்பை பேசுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி. தேர்தல் ஆணையமும் சப்த நாடியும் ஒடுங்கிப்போய் சததமின்றிக் கிடக்கிறது. வெறுப்பு பேச்சுகள் கண்காணிக்கப் படாமல் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மிகத்தீவிரமாக மாவட்டங்கள் தோறும் கண்காணிப்பு வேலைகள் நடைபெறுகின்றன. மிகச்சிறிய தளமான நாமே (Penpointnews.in) தேர்தல் ஆணையத்தின் பொய் செய்திகள் கண்காணிப்பு குழுவின் வளையத்துக்குள் தான் உள்ளோம். அப்படியிருக்க, வெறுப்பு பேச்சுகள் ஒடுக்கப்பட இன்னும் பெரிய தொழில்நுட்பம் எல்லாம் தேவையில்லை. தைரியமான செயலாற்றல் மிக்க தேர்தல் ஆணையம் தான் தேவையாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் வெறுப்பு பேச்சு விளைபொருள் தருகிறது என்றால், இங்கு மாற்றப்பட வேண்டியது என்ன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.