13/07/2026
News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு தலையங்கம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – முதல்முறையாக அரசு விழாவில் கட்சியினருக்கு அழைப்பு

  • June 9, 2026
  • 0

காவல்துறை நிகழ்ச்சியில் கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை. அதென்ன 1200 பேருக்கு மட்டும் அழைப்பு என்று கேள்விகள் எழுந்துள்ளன.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை –  முதல்முறையாக அரசு விழாவில் கட்சியினருக்கு அழைப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்க விழாவில், அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறி, தவெக கட்சியினர் 1200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசு விழாவில் பொதுமக்கள் அழைக்கப்படாமல் கட்சி நிர்வாகிகளை மட்டும் அழைப்பது முறையற்ற நடைமுறை என்று இந்த விவகராம் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தவிர்த்து மற்றவர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் போன்ற முதல்வர்கள் போலீசார் நிகழ்ச்சியில் தனது தொண்டர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை.

பொதுமக்கள் கலந்துகொள்ளும் விதமான நிகழ்வுகள் என்றால் அதற்கென ஏற்பாடுகள் செய்யப்படும். அப்படியில்லாமல், கட்சி நிர்வாகிகளை மட்டும் அரசு தரப்பில் அழைப்பது இதுவரை நடந்ததில்லை. இது சார்பற்ற அரசாளுகைக்கு பொருத்தமற்றது. மேலும், அரசு நிர்வாகத்தில் கட்சி அரசியலைக் கலக்கும் என்பதால் தவிர்ப்பது வழக்கம்.

ஆனால் செவ்வாய்க்கிழமை நாளை மாலை 5 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திங்கப் பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 1200 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளது.

இது போன்ற விழாவில் கட்சித் தொண்டர்களை அனுமதிக்க வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை முதல்வர் தரப்பு ஏற்க மறுத்து விட்டதாக பெயர் வெளியிட விரும்பாத தலைமைச் செயலக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“நாளை நடைபெறும் விழாவில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அப்போது முதல்வருக்கு மரியாதை செலுத்தும் இந்த அணிவகுப்பில், கட்சியினர் விசில் அடித்து ஆரவாரம் செய்தால்? அப்படி அவர்கள் ஆரவாரம் செய்யும் சமயத்தில் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் காவலர்களுக்கு விழா நேர்த்தியை ஒழுங்கு செய்வதும் சிரமமாகி விடும். மேலும் போலீசார் நிகழ்ச்சியில் கட்சியினர் உற்சாகத்தில் செய்யும் ஒவ்வொரு வேளையும் போலீசாருக்கு மிகுந்த சிரமத்தை தரும்”

எனவே மற்ற முதல்வர்கள் போன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் காவல்துறை நிகழ்ச்சியில், கட்சித் தொண்டர்களை கலந்து கொள்ள வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.