மேயரா? எம்எல்ஏவா? பதில் சொல்லும் ‘Order of Precedence’ பட்டியல்
- June 5, 2026
- 0
மாநகர மேயர் மற்றும் எம்எல்ஏ யாருக்கு முதன்மை மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற பதிலை வழங்குவது ‘Order of Precedence’ பட்டியல்.
மாநகர மேயர் மற்றும் எம்எல்ஏ யாருக்கு முதன்மை மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற பதிலை வழங்குவது ‘Order of Precedence’ பட்டியல்.
சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பல்லவி இடையே, நிகழ்வுகளில் வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பாக எழுந்த விவாதம், அரசு விழாக்களில் யாருக்கு அதிக மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வியை மீண்டும் பொதுவெளியில் கொண்டு வந்துள்ளது.
மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவா, அல்லது மாநகராட்சியின் முதல் குடிநபராகக் கருதப்படும் மேயரா என்ற விவாதத்திற்கு பதிலை புரோட்டோகால் விதிகளே வழங்குகின்றன.
அதிகாரப்பூர்வ ‘Order of Precedence’ பட்டியலின்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமன்றத்திற்கு அனுப்பும் அரசியலமைப்புச் சட்டப் பிரதிநிதிகள். மேயர் ஒரு முக்கிய உள்ளாட்சி நிர்வாகத் தலைவராக இருந்தாலும், புரோட்டோகால் வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் சடங்கு நிகழ்வுகளில் இருக்கை ஒதுக்கீடு, பெயர் அறிவிப்பு, வரவேற்பு மற்றும் மரியாதை வழங்கும் வரிசையில் எம்எல்ஏக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட நிகழ்வு மாநகராட்சியின் நேரடி நிகழ்ச்சி என்பதால், பிரிட்டிஷ் இந்தியா காலத்திலிருந்து மேயருக்கே முதலிடமும் முதன்மை அங்கீகாரமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் காட்சிகளைப் பார்க்கையில், இருவருக்குமே தனக்கான முன்னுரிமை குறித்த கவனம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அனுபவசாலியான மேயர் பிரியா கூடுதல் புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டியவர். அத்துடன், இருதரப்பு புரிதல் தான் இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு.
மற்றபடி யார்யாருக்கு அடுத்த நிலையில் யார் என்பதை விளக்கும் order of precedence அல்லது table of precedence பட்டியல்தான் இதற்கு அதிகாரப்பூர்வ பதில்.
Order of Precedence என்றால் என்ன?
அரசு விழாக்கள், தேசிய தின நிகழ்வுகள், பதவியேற்பு விழாக்கள், அதிகாரப்பூர்வ வரவேற்புகள் மற்றும் உயர்மட்ட சடங்கு நிகழ்வுகளில் யாருக்கு எந்த அளவிலான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரப்பூர்வ பட்டியலே ‘Order of Precedence’. இது அதிகாரத்தின் அளவுகோல் அல்ல; நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மட்டுமே நிர்ணயிக்கிறது.
பட்டியலில் முதலிடத்தில் குடியரசுத் தலைவர் உள்ளார். அவரைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநர் இடம்பெறுகின்றனர். பின்னர் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், இந்திய தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் வருகின்றனர்.
பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு தனி முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களவை துணைத் தலைவர், துணை முதலமைச்சர், மத்திய இணை அமைச்சர்கள், சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் உயர்ந்த இடங்களில் இடம்பெறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பட்டியலில் தனித்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் தலைமைச் செயலாளர், ராணுவ உயரதிகாரிகள், பொது சேவை ஆணையத் தலைவர், காவல்துறை தலைமை இயக்குநர், அரசின் செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.
மேயர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, காவல் துறை அதிகாரிகள் மற்றும் துறைத்தலைவர்கள் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுக்கு மேலான இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே மேடையில் பல்வேறு உயர்பதவி அதிகாரிகள் பங்கேற்கும் சூழலில் இருக்கை ஒதுக்கீடு, உரையாற்றும் வரிசை, தேசிய கீத நிகழ்வு மற்றும் மரியாதை செலுத்தும் நடைமுறைகளில் குழப்பம் ஏற்படாமல் இருக்க இந்த பட்டியல் உதவுகிறது. குடியரசு தினம், சுதந்திர தினம், அரசு விருது வழங்கும் விழாக்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் இந்த புரோட்டோகால் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அரசியல் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், அரசு நிகழ்வுகளின் ஒழுங்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முன்னுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர்–எம்எல்ஏ விவாதம் போன்ற நிகழ்வுகள் எழும்போதெல்லாம், இறுதியில் தீர்மானிப்பது தனிநபர்களின் அரசியல் செல்வாக்கு அல்ல; அதிகாரப்பூர்வ புரோட்டோகால் விதிகள்தான் என்பதையும் இந்த பட்டியல் நினைவூட்டுகிறது.