மதச்சார்பற்ற ‘பி(மு)ற்போக்கு’ கூட்டணி
- April 1, 2026
- 0
பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
பாஜகவோடு சேரவில்லை என்பதாலேயே இது முற்போக்கான கொள்கைக் கூட்டணி ஆகிவிடாது. அப்படியானால் எது கூட்டணிக்கான கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

மதவாத, சாதியவாதத்துக்கு எதிரான கொள்கைக் கூட்டணி என்று திமுக தலைமையிலான 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை யாராவது சொன்னால், அவர்கள் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்றுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
முன்பில்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் திட்டமிட்ட வாக்குச்சிதறல்களும் அணிசேர்ப்பு நடவடிக்கைகளும் கைகோர்த்துள்ளன.
போட்டி என்று பார்க்கப்போனால்,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற(!) முற்போக்கு(🤣) கூட்டணி, அதிமுக தலைமையில் என்று சொல்லப்படும் தேசிய ஜனநாயகக்(!) கூட்டணி, தனித்துக் களம் காணும் நாம் தமிழர், முதல்முறை களம் காணும் தவெக தலைமையிலான கூட்டணி என நான்கு முதன்மையான மொத்த வாக்கு வங்கிப் பிரிவுகளும்
சிறு கூட்டணிகள் என்று பார்க்கப்போனால், ராமதாஸ் தரப்பு பாமகவும் சசிகலாவும் அமைத்த கூட்டணி, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் அமைத்த கூட்டணி, யாருமே அழைக்காததால் தனித்து போட்டியிட முடிவெடுத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என சில்லறை வாக்கு வங்கிப் பிரிவுகளாக, கண்டபடி கலைந்து கிடக்கிறது களம்.
இதில் மீண்டும் ஆட்சியமைப்போம் என்ற உறுதியுடன் கூடிய மமதையில் கொஞ்சம் மெத்தனமாகவே இருக்கிறது, திமுக தன் கூட்டணி கட்சிகளைக் கையாளும் முறை.

எந்த விதத்தில் கொள்கை கூட்டணி?
காங்கிரசு ஆடிய பொறுப்பற்ற இரட்டை விளையாட்டால், தேமுதிகவையும் சேர்த்துக் கொண்டது திமுக. கடந்த தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்டு ஒன்றும் வெல்லாத தேமுதிகவுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து சிரித்த முகத்துடன் இணைத்துக் கொண்டது எந்த விதத்திலும் பாராட்டுக்குரியது அல்ல. தேர்தல் வெற்றிதான் காரணம் என்றால், எந்த விதத்தில் இது கொள்கைக் கூட்டணி?
அதே சமயம், சிவப்புத் தோழர்களின் சீட்டுகளில் குறைத்தது கண்டனத்துக்குரியது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் இடங்களைக் குறைத்தது ஜனநாயக சக்திகளின் மீது திமுக தலைமை வைத்திருக்கும் மதிப்பீட்டையே வெளிப்படுத்துகிறது.
சிறுபான்மை மதங்களுக்கு அரணாக இருக்கிறது திமுக என்ற சொல்லுக்கேற்ப மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் தலா இரண்டு இடங்கள், எஸ் டி பி ஐ கட்சிக்கு ஒரு இடம் என வழங்கியது கவனிக்கத்தக்கதுதான். ஆனால், விசிகவுக்கு சீட்டைக் குறைக்கும் எண்ணத்தில் ஆழம் பார்த்ததை என்ன சொல்ல?
கடந்த முறை தான் பெற்ற 6 தொகுதிகளில் 4 வெற்றிகளை ஈட்டி, நாடாளுமன்றத் தேர்தலிலும் இரண்டுக்கு இரண்டும் வெற்றி பெற்று வேகமாக வளரும் விசிகவுக்கு இடம் வழங்குவது, அரசியல் கணக்குகளைத் தாண்டி அடிப்படை ஜனநாயக பொறுப்பு இல்லையா?

கலவர கட்சிக்கும் தொகுதி
பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில், திமுக விசிகவை ஒரு தலித் கட்சி என்ற அளவில் வெறும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறதா என்ற கேள்விகள் எழுந்தன. அப்படியல்ல ஆனால் அப்படித்தான் என்று தன் அடுத்தடுத்த நாட்களில் உறுதி செய்தது திமுக. கேட்டால் கொள்கைக் கூட்டணி என்று பெயரிடுவர்.
சமூகநீதிக்கு சற்றும் பொருத்தமில்லாத கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு இடமளித்தது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. ஆனால், அதைவிட அநியாயம், சாதியை முன்னிட்டு கலவரம் செய்யும் தமிழர் தேசம் என்ற கட்சிக்கும் அதன் சாதிவெறி பிடித்த தலைவரான கே.கே.செல்வகுமாருக்கு கூட்டணியில் இடமளித்தது.
சாதியவாதிகள் நிறைந்த, சமூகநீதிக்கு துளியும் தொடர்பற்ற சாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு இதை முற்போக்கு கூட்டணி என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஒருவேளை இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்துவிட்டால் அடுத்த தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டீர்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தல் வெற்றிக்காக இந்த முறை முற்போக்கை கைவிட்டது போல அடுத்த முறை மதச்சார்பின்மை கொள்கையையும் கைவிடுவீர்கள்.
மொத்தத்தில், இந்தத் தேர்தலிலேயே இது முற்போக்கு கூட்டணி இல்லை. பிற்போக்கு கூட்டணிதான்.
பாஜகவுடன் சேரவில்லை என்பதாலேயே திமுக இதைக் கொள்கைக் கூட்டணி என்று சொல்லுமானால், இனி எது கொள்கை என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயம். அதுவரை, இது மதச்சார்பற்ற பிற்போக்கு கூட்டணி தான்…