தமிழ்நாட்டின் புதிய டிஜிபி: யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்
- May 29, 2026
- 0
தமிழ்நாட்டு காவல்துறையை தலைமை தாங்கப்போகும் பஞ்சாப் சிங்கம். யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்
தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்.
பஞ்சாபில் தொடங்கிய பயணம், தமிழ்நாட்டின் தலைமைப்பொறுப்பு வரை வந்த கதை என்ன?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் ஐபிஎஸ், 1972-ம் ஆண்டு பிறந்தவர்.
தந்தையை போலவே, சட்டம் பயின்ற அவர், தன்னுடைய 22-ம் வயதில் 1994-ம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியானார்.
தேனி எஸ்பி-யாக இவர் பணியாற்றி, பின்னர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, 2001-ம் ஆண்டு சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
சென்னையில் பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால், பின், போக்குவரத்து பிரிவில் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அயல்பணியாக 10 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பல மாநிலங்களில் பணியாற்றினார்.
அயல்பணி முடித்து மீண்டும் சென்னைக்கு மாறுதலாகி, ஐஜி-யாக சிபிசிஐடி-யில் பணியாற்றினார்.
அடுத்து மதுரை கமிஷனர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றினார்.
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில் சென்ற காலக்கட்டத்தில், போலீஸ் கமிஷனர் பொறுப்பையும் கவனித்துவந்தார். பின்னர், டிஜிபி அலுவலகத்தில் (operation) செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி-யாகப் பணியாற்றிவந்தார். பின் கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
பணமதிப்பிழப்பு சமயத்தில், சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 5.78 கோடி ரூபாய் மேற்கூரை துளையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. சவாலான இந்த வழக்கை, மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி போலீஸ் சிறப்பாக கையாண்டு குற்றவாளிகளைப் பிடித்தது. தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது அந்த சமயத்தில் பேசுபொருளானது.
சேலம் ரயில் கொள்ளை வழக்கு,
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை சிறுசேரியில் பணியாற்றிய பெண் இன்ஜினீயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு ஆகியவற்றில் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான டீம் சிறப்பாகச் செயல்பட்டது.
தமிழ்நாடு முழுதும் பரவலாக பணியாற்றிய அனுபவமும் தொழில்நுட்பம் சாரா அணுகுமுறையும் கொண்ட இவர்தான், தற்போது தமிழ்நாட்டின் காவல்துறை இயக்குநராகவும் படைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.