ஆங்கிலத்தில் கையெழுத்தா? சந்தேகம் எழுப்பிய ஷர்மிளா குடும்பம்; பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் – நடந்ததும் நடப்பதும்
- April 24, 2024
- 0
பள்ளிக்கரணை ஆணவ கொலை விவகாரத்தில் நடந்த சந்தேக சம்பவங்கள் என்ன...
பள்ளிக்கரணை ஆணவ கொலை விவகாரத்தில் நடந்த சந்தேக சம்பவங்கள் என்ன...
பள்ளிக்கரணை ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்… பிரவீனின் சகோதரி கோரிக்கையால் பூதாகாரமாகும் விவகாரம்
தலைநகரை உலுக்கிய பள்ளிக்கரணை ஆணவக் கொலை சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவரின் சகோதரி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் பூதாகாரமாகியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 8 மணி அளவில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அவர் உயிரிழந்து கிடந்தது, அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், அவர், ஆறு மாதங்களுக்கு முன் ஷர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதும், அவர் பட்டியலினத்தவர் என்பதால் அது பிடிக்காத ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை ஆணவப் படுகொலை செய்ததும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில், ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் என்ற குட்டி அப்பு என்பவர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை
இந்நிலையில், காவல்துறையின் விசாரணையும் ஒருதலைபட்சமாக இருந்ததாக குற்றம்சாட்டி, அதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீனின் மனைவி ஷர்மிளா, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தாலும், அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, சிகிச்சை பெற்று வந்த அவர், ஏப்ரல் 22-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷர்மிளாவின் தற்கொலைக் கடிதம்
இதற்கிடையில் அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதமும் வெளியானது. தற்கொலைக் கடிதத்தில், தன்னையும் தன் கணவரையும் வாழ விடாமல் செய்தது துரை, சரளா, நரேஷ், தினேஷ் ஆகிய நான்கு பேர்தான் என்று குறிப்பிட்ட அவர், என் தற்கொலைக்குக் காரணமும் இவர்கள் தான் என்று பட்டியலிட்டுள்ளார். இதில் ஏற்கனவே தினேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.
ஷர்மிளாவின் உடலை வாங்க மறுப்பு
தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஷர்மிளாவின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். மேலும், அவ்விடத்திற்கு வந்த பிரவீனின் குடும்பத்தினர், ஷர்மிளாவின் தற்கொலைக் கடிதத்தின்படி, அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை, அவரது உடலை வாங்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில், பிரவீனின் சகோதரி கலையரசி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆணவ படுகொலை செய்யப்பட்ட பிரவீன் மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட அவரது மனைவி ஷர்மிளா வழக்குகளை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதுவரை ஷர்மிளாவின் உடலை வாங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
போலீசாரின் முதல் தகவலறிக்கையில் பிரவீனின் தந்தை ஆங்கிலத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுவது பொய் என்று கூறிய கலையரசி, அவருக்கு ஆங்கிலமே தெரியாது என்றும் கூறினார்.
தற்போது ஆர்டிஓ விசாரணைக்குக் கோரியுள்ளதாகவும் கூறிய அவர், அது முடிந்த பின்னர் ஷர்மிளாவின் உடலை தங்கள் வீட்டிற்கே கொண்டு செல்வோம் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.