குட் டச், பேட் டச் விழிப்புணர்வு ஏற்படுத்த,பேசும் பொம்மைகளை உருவாக்கி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
பெண் பொம்மைகளின் உடல் பாகங்களை தொடும்போது குட் டச், பேட் டச், என தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் விளக்கம் கூறி பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொம்மைகள்
புதுச்சேரி முத்திரையர் பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேனிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் இயற்பியல் செய்முறையாக பேசும் பொம்மைகளை உருவாக்கியுள்ளனர். பள்ளி மாணவிகள் போல் ஷர்ட் அணிந்தும், சேலை அணிந்தும் உள்ள இந்த பெண் பொம்மைகளுக்கு ஜாரா என பெயரிடடுள்ளனர்.
சென்சார் கொண்டு தயாரித்த இந்த பேசும் பொம்மையானது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஜாரா பொம்மையானது குட் டச், பேட் டச் பற்றி தமிழ், ஆங்கிலம், இந்தியில் சொல்கிறது.பள்ளியில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஜாரா பொம்மைகள் குறித்து இன்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் தொடங்கி வைத்தார்.
பொம்மையின் உடல் பாகங்களை தொட்டால் தொடாதே என மும்மொழிகளிலும் சொல்கிறது. இதனை அனைத்து மாணவிகளும் பொம்மையை தொட்டு பார்த்து குட் டச், பேட் டச் எது என விளக்கங்கள் தெரிந்து கொண்டனர்.
பொம்மைகளை உருவாக்கிய மாணவ, மாணவிகள் கூறுகையில்,..
“பிளஸ்2 படிக்கிறோம். குழந்தைகளுக்கு போக்சோ விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜாரா பொம்மைகளை உருவாக்கினோம். பொம்மைகள் தயாரிக்கும் அச்சு தயாரித்து விட்டோம். தேவைப்படுவோருக்கு எத்தனை பொம்மைகள் வேண்டுமானாலும் நாங்கள் தயாரித்து தர முடியும்.
படிப்புடன், புதிய படைப்புகளை உருவாக்கும் தைரியமும் உருவாகியுள்ளது. அத்துடன் சமூக விழிப்புணர்வுடன் கூடிய உருவாக்கத்தை செய்வது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்” என்றனர்.
பொம்மை தயாரிக்க வழிகாட்டிய பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம், “பொம்மைகளுக்கு நாங்கள் காப்பிரைட் உருவாக்கவில்லை. இது முதல் முயற்சி. வரும் வாரங்களில் அரசு அனுமதி பெற்று அருகிலுள்ள பள்ளிகளிலும் செயல்முறை காட்டவுள்ளோம்.
தேவைப்படுவோருக்கு பொம்மைகளையும் உருவாக்கி தருவோம். அதன் செயல்முறையையும் சொல்லி தருவோம். பொம்மை உருவாக்க பல பள்ளி ஆசிரியர்கள் உதவினார்கள், பொம்மைகளின் குரல் தர, வடிவமைக்க என பல விதங்களிலும் உதவியது ஊக்கம் தந்தது” என்றார்.