சத்தமில்லாமல் சாதித்த தமிழ்நாடு: எல்லோருக்கும் மருந்து சாத்தியமானது எப்படி?
- October 11, 2025
- 0
மொத்த இந்தியாவும் மருந்து தட்டுப்பாட்டால் போராடிக் கொண்டிருந்த போது, தான் மட்டும் பாதிக்கப்படாமல் தனித்து நின்றது தமிழ்நாடு. எப்படி?
மொத்த இந்தியாவும் மருந்து தட்டுப்பாட்டால் போராடிக் கொண்டிருந்த போது, தான் மட்டும் பாதிக்கப்படாமல் தனித்து நின்றது தமிழ்நாடு. எப்படி?
உள்நுழையும் முன்:
இந்தச் செய்தி மறுபதிப்பு செய்யப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள சில அதிகாரிகள் பணி மாறுதலாகியுள்ள போதும் கட்டமைப்பு அப்படியே தொடர்வதை நம் தளம் நேரடியாக இப்போதும் உறுதி செய்த பிறகே வாசகர்களுக்காக வழங்கியுள்ளது.

40 நாளுக்கும் மேலாக போராட்டம்
எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருந்துகளை இலவசமாக வழங்கி வந்த அரசு மையங்களில் தட்டுப்பாடு நிலவுவதால் தங்களுக்கு சரிவர மருந்துகள் கிடைக்கவில்லை என்று டெல்லியில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்பு 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்தது. நாடு முழுக்க தட்டுப்பாடு இருந்தது என்றால் தமிழ்நாட்டில் நிலை என்ன?
ஏ.ஆர்.டி மருந்துகள் என்றால் என்ன?
எச்.ஐ.வி./எய்ட்ஸ் பாதிப்பு உள்ள ஒரு நபரின் உடலில் எச்.ஐ.வி. வைரஸ் மேலும் மேலும் பெருகுவதைத் தடுத்து, வாழ்நாளை நீட்டிக்க உதவும் மருந்துதான் ஏ.ஆர்.டி (AntiRetroViral) மருந்துகள்.
இந்த மருந்துகளை 2004ஆம் ஆண்டு முதல் அரசு இலவசமாக பயனாளர்களுக்கு வழங்கி வந்தது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் 2021ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியாவில் 24லட்சம் பேர் எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இதில், 15லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு வழங்கும் மருந்துகளைச் சார்ந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் தட்டுப்பாடு நிலவுவதால் தங்களுக்கு மருந்துகள் கிடைக்கவில்லை என்று இந்த நீண்ட போராட்டம் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.
என் சாவு மௌனமாக இருக்கக்கூடாது: யார் இந்த ஃபாத்திமா?
சான்றிதழ்கள் ரத்து: பேராயுதமா? பேருக்கு அறிவிப்பா?
இதுகுறித்து நம்முடன் பேசிய டெல்லி போராட்டக்குழுவின் தலைவர் ஹரி சங்கர் சிங், “நாடு முழுக்க தட்டுப்பாடு இருந்ததால் போராடினோம். ஏறக்குறைய எல்லா மாநிலங்களும் தட்டுப்பாட்டையும் குறிப்பிட்டு ஆதரவையும் தெரிவித்தன. தமிழ்நாட்டிலிருந்தும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவுக்குரல் வந்துள்ளது.” என்றார்.
ஏன் தமிழ்நாடு இந்த மருந்து தட்டுப்பாட்டு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடவில்லை. எனில் தமிழ்நாட்டில் நிலைமை என்ன?
தமிழ்நாட்டில் நிலை என்ன?
தமிழ்நாட்டில் ஏ.ஆர்..டி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா என்பதை அறிந்து கொள்ள முயற்சித்தோம்.
எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அப்படியான தட்டுப்பாடு ஏதும் இந்த முகாமுக்கு இல்லை” என்று பதிலளித்தனர்.
மதுரை மாவட்டத்தில் எச்.ஐ.வி. நோயாளிகளுக்கு இயங்கி வரும் இல்லத்தில் பேசியபோது, “தட்டுப்பாடு ஏதும் இல்லை. மருந்துக்குறைபாடு வரும் என்றால் அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்து விடுகிறார்கள்” என்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, “எங்கள் பகுதியிலோ மாவட்டத்திலோ மருந்து தட்டுப்பாடு இல்லை. அதுபோக குழந்தைகளுகான ஆரோக்கிய உணவு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் மருந்துத் தொகுதி மாற்றப்படுவதுண்டு. அதுவும் அடிக்கடி நிகழ்வது அல்ல.” என்று தெரிவித்தார் அந்த மையத்தின் நிர்வாகி.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எச்.ஐ.வி. தொண்டு நிறுவனம் ஒன்றுடன் பேசியபோது, “மருந்துகளுக்கு அப்படியான தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆனால், மருந்துகளின் தொகுப்பு (Regimen) மாற்றப்படுவதுண்டு. ஆனால், அது புதிய நடைமுறை அல்ல” என்று தெரிவித்தனர்.
மேலும் சென்னை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இதே போன்ற பதில்களே கிடைத்தன.
மருந்துகளை இருப்பு வைப்பது தொடர்பாக நம்முடன் பேசிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “மருந்துகளை மாவட்டந்தோறும் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருந்துக்கிடங்குகள் உள்ளன. அத்தியாவசியமான மருந்துகளை அந்தந்த மாவட்டங்களில் இருப்பு வைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 6 மாவட்டங்களிலும் கூட மருந்து கிடங்குகளமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல, இது கடைசிப் பயனாளர் வரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பது வியப்பூட்டீயது.
“தட்டுப்பாடு நிலவுவதும் அது குறித்த போராட்டம் டெல்லியில் நடைபெறுவதும் எங்கள் குழுவுக்கு நன்கு தெரியும். ஆனால், தமிழ்நாட்டில் இந்த சிக்கல் அதற்கு முன்பே சரிசெய்யப்பட்டுவிட்டது” என்கிறார் ஏ.ஆர்.டி. பயனாளரும் பாஸிடிவ் விமன் நெட்வொர்க் என்ற சென்னை ஹெச்.ஐ.வி. நோயாளிகள் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளருமான கௌசல்யா பெரியசாமி.
எப்படி சரிசெய்யப்படுகிறது?
“எந்த ஒரு மருந்துக்கு தட்டுப்பாடு வரும் என்றாலும் எங்கள் நண்பர்கள் கூட்டமைப்பு மூலமாக தகவல் கிடைத்துவிடும். அதை மாநில சுகாதாரத்துறை செயலர் உதவியுடன், மாநில அரசின் நிதியில் கொள்முதல் செய்து சரிசெய்வார்கள்.
அதற்காக, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் செயற்குழுவில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில் மருந்து தட்டுப்பாடு வரும் (இந்திய அரசு நிதியில் வாங்குவதானால் நேரமாகும்) என்றால், மாநில நிதியில் அதை கொள்முதல் செய்து தர அரசு முன்வர வேண்டும்.
இதை அரசும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் எங்களோடு நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். இதனால், எச்.ஐ.வி. மருந்து விவகாரங்களை உடனடியாக கையாள முடிகிறது. எனவேதான் டெல்லி போராட்டத்தில் நாங்கள் ஈடுபடவில்லை.” என்கிறார் கௌசல்யா.
அதேசமயம், “அதற்காக தமிழ்நாட்டில் எல்லாம் சிறப்பு என்று பொருளில்லை. ஏராளமான சிக்கல்கள் இன்னும் இருக்கின்றன” என்றும் குறிப்பிடுகிறார் அவர்.
‘டொலிட்னாவிர்’ என்ற ஒரே ஒரு மருந்துக்காக மட்டுமே டெல்லியில் போராட்டம் நடந்தது. ஆனால், நோயாளிகளின் உடல்நிலைக்கேற்ப மாற்று மருந்துகள் தேவை என்ற எங்கள் (தமிழ்நாடு எய்ட்ஸ் நோயாளிகள்) கோரிக்கை இன்னும் கோரிக்கையாகவே தொடர்கிறது. அதற்காக உலகளாவிய அமைப்புகளின் நிதியுதவி வேண்டும். சாதாரண எய்ட்ஸ் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோயாளிகள் என அனைவருக்கும் ஒரே மருந்துதான் தரப்படுகிறது. மாற்று மருந்துகள் வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்கிறார் கௌசல்யா.
ஏ.ஆர்.டி. பயனாளர்கள் கூட்டமைப்பும், மாநில செயற்குழுவும் கோரிக்கை, தீர்மானங்களை நிறைவேற்றலாம். ஆனால், இந்திய அரசு தேசிய கொள்முதல் மூலம் வழங்கும் மருந்தை மாநில அரசு திடீரென்று எப்படி மாற்றிக்கொள்ள முடியும்? கொள்முதலை எப்படிக் கையாள்கிறது என்ற கேள்விக்கும் விடை தெரிய வேண்டும்.
தமிழ்நாட்டின் ஒப்பந்த முறை
இதற்காக தமிழ்நாடு மாநில மருந்துக் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் (TNMSC) நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப்பை தொடர்பு கொண்டு பேசினோம். மருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்த வடிவமைப்பில் மற்ற மாநிலங்களுடன் எப்படி வேறுபடுகிறது தமிழ்நாடு என்று விவரித்தார் அவர்.
மருந்துக்கு தட்டுப்பாடு வந்துவிட்டால் அந்தந்த மாநிலங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் (NACO), மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்களுக்கு கடிதம் வாயிலாக அறிவிக்கும். அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மருந்துகளைக் கொள்முதல் செய்து தரும்படி, எங்களிடம் (TNMSC) TANSACS கோரிக்கை கடிதம் அனுப்பும்.
அதைத் தொடர்ந்து, ஒப்பந்தத்துக்கான டெண்டர் விடுக்கப்பட்டு குறைந்தபட்ச விலை கோருபவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படும். ஆனால், இந்த ஒப்பந்தமானது கொள்ளளவு அடிப்படையிலானது அல்ல (Quantity Based Contract), விலை அடிப்படையிலானது (Price Based Contract).
அதாவது, ஓராண்டு ஒப்பந்த காலம் முழுக்க (மருந்துகளைப் பொறுத்து ஒப்பந்த காலம் மாறுகிறது. எய்ட்ஸ் மருந்துகளுக்கு ஓராண்டு), ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட அதே விலையில் மருந்துகளை எத்தனை தவணை கேட்டாலும் வழங்க வேண்டும் என்பதுதான் ‘விலை அடிப்படையிலான ஒப்பந்தம்’.
ஒருவேளை, மருந்து தட்டுப்பாடு வந்தால், அறிவிக்கப்பட்டது முதல் டெண்டர் முடிவடையும் வரை குறைந்தது 45 நாட்கள் ஆகிவிடும். இந்த இடைப்பட்ட காலத்துக்கான மருந்துகளை ஒப்பந்த விலையில் முன்கூட்டியே வாங்கிக்கொள்ளும்படி TANSACSக்கு பதிலனுப்புவோம்.
அவர்களும் அவர்களது நிதி வரம்புக்குட்பட்டு (25 லட்ச ரூபாய் வரை என்று தெரிவித்தார்) அந்த மருந்துகளை உடனடியாக வாங்கி பயன்படுத்துவர்.
இப்படியாக இந்த மருந்து தட்டுப்பாடுகள் கையாளப்படுகின்றன. மாவட்ட அளவிலும் கூட (தேசிய வழங்கல் இல்லாவிட்டால்) தேவைக்கேற்ப மருந்துகளை கொள்முதல் செய்துகொள்ள நிதி, நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு நிர்வாக ரீதியில் இப்படி கையாளப்படுகிறது. ஆனால், அவ்வப்போது மருந்துகளின் ரெஜிமெண்ட் மாற்றப்படுவதால் பயனாளிகளுக்கு உளவியல் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை மருந்தியல் மற்றும் உளவியல் ரீதியில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ரெஜிமென்ட் என்றால் என்ன?
குறிப்பிட்ட கால அளவுக்கு, ஒரு குறிப்பிட்ட நோய் சிகிச்சைக்கான மருந்துகளை என்ன அளவில், என்ன கால இடவெளியில், எந்த வரிசையில் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறுக்கும் செயல்திட்டத்துக்கு ரெஜிமென் என்று பெயர்.
தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவும் அல்லது மருத்துவ ரிதியில் நன்றாக வேலை செய்கிறது என்பதற்காகவோ ஒரு மருந்து மாற்றப்படும்போது ரெஜிமென் மீளாய்வு செய்து தேவை இருப்பின் மாற்றப்பட வேண்டும். ஆனால், அதை முறைப்படுத்துவதில் இன்னும் தமிழ்நாடு அரசுக்கு சிக்கல் இருக்கிறது என்றே தோன்றுகிறது என்கிறார் ஆனந்த இல்லத்தின் பொறுப்பாளர் முத்துப்பாண்டியன்.
மொத்த இந்தியாவும் மருந்து தட்டுப்பாட்டால் தலைநகர வீதிகளில் போராடிக்கொண்டிருந்தபோது திட்டமிட்ட கட்டமைப்பாலும் தொடர் ஆய்வுகளாலும் தான் மட்டும் பாதிக்கப்படாமல் தனித்து நின்றது தமிழ்நாடு.
விமர்சனங்கள் அவசியம் தான். ஆனால், உண்மையாக இருக்க வேண்டும்.