News ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள்

நான்காம் தமிழ்ச்சங்கம்: தமிழுக்கு உயிரூட்டிய தமிழன்… யார் இந்த பாண்டித்துரை?

  • December 2, 2025
  • 0

பாண்டித்துரை தேவர் எனும் பழந்தமிழ் பல்கலைக்கழகம் புகழுடம்பு எய்திய தினம் இன்று. யாரிந்த பாண்டித்துரை என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

Share:
நான்காம் தமிழ்ச்சங்கம்: தமிழுக்கு உயிரூட்டிய தமிழன்… யார் இந்த பாண்டித்துரை?



தமிழ் செய்து வயிறு வளர்க்க ஆயிரமாயிரம் வித்துவான்களும் சாஸ்திரிகளும் இருந்தபோது, தமிழ் வளர்க்க வேண்டியதன் அவசியமும் அறச்சீற்றமும் உணர்ந்து நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் உருவாக்கியவர் இவர். சொல்வ்பதற்கு கதைகள் ஏராளம். சிலவற்றை இப்போது பார்க்கலாம். சரி ஆரம்பிக்கலாமா.

படிக்க வந்த உங்களுக்குப் பரிசு:


தமிழில் உள்ள நூல்கள் பலவற்றிலிருந்து 1லட்சத்து 33ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை/ செய்யுள்களைப் படித்து அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை/ செய்யுள்களைத் தொகுத்து “பன்னூற்றிரட்டு” (பல்நூல் திரட்டு) என்று பாண்டித்துரை தொகுப்பித்த நூலும் இந்தக் கட்டுரையைப் படிக்க வந்த உங்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது.  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் மின்நூலாக்கத்தால் பாதுகாக்கப்பட்ட இந்த நூலை இந்த இணைப்பைச் சொடுக்கி மின்நூலாக பெற்றுக் கொள்ள முடியும். 

நூலைப் பெற: https://rmrl.in/en/dl/books/ebook?id=5621

இராமநாதபுரத்து அரசவைக் கொலு மண்டபமும், பாண்டித்துரைத் தேவரின் ‘சோமசுந்தர விலாச மாளிகை’யும் இனிய தமிழ்ப் புலவர்களும், சிறந்த தமிழறிஞர்களும் நிறைந்திருக்கும் கலை இலக்கிய கூடமாகத் திகழ்ந்தது.
ஒருமுறை பாண்டித்துரைத் தேவர் மதுரைக்கு வந்துள்ளதை அறிந்து, தமிழன்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தனர். பத்து நாட்களுக்கு, திருக்குறள் பற்றிய தொடர் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென அவரை விரும்பிக் கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றார் பாண்டித்துரைத் தேவர். தமது கையில் எந்த நூலும் அப்போது எடுத்துவரவில்லை. எனவே, திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய இரண்டு நூல்களைக் கொண்டு வந்து தருமாறு அவர்களிடம் கேட்டார். திருக்குறளும், கம்பராமாயணமும் அங்கு எவரிடமும் இல்லை என்பதை அறிந்து திடுக்கிட்டார். ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் திருக்குறளும், கம்பராமாயணமும் இல்லாது போயினவா’ என்று மிகுந்த வேதனையடைந்தார். பின்னர், புது மண்டபத்திற்கு ஒருவரை அனுப்பி, அங்கும் தேடித்தேடித் திருக்குறள் நூலை வாங்கி வரச் செய்தார்; அதன் பின்னர், பத்து நாட்கள் தொடர் சொற்பொழிவாற்றினார்.
“தமிழ் நூல்களைப் பெற்றிராத தமிழர்கள், மதுரையில் மட்டுமன்று, தமிழ் நாடெங்கும் வாழ்ந்து வருகின்றனரே! அந்தியர் ஆட்சி, ஆங்கில மொழி மீது மோகத்தையும், தாய்த் தமிழ் மீது தாழ்ச்சியையும், தமிழர்கள் கொள்ள வைத்துள்ளதே? மொழிப்பற்றின்றிப் பாழ்பட்டுள்ள தமிழர்களுக்குப் பைந்தமிழுணர்வை நாம் ஊட்ட வேண்டாமா? எனத் தம் தமையனார் மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.
அதைச் செவிமடுத்த, மன்னர் பாஸ்கர சேதுபதி, “அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?” என வினவினார். “தமிழுக்கு உயிர்ப் பூட்டவும், தமிழ் உணர்வுக்கு உரமூட்டவும் வேண்டும். தமிழ்ச் சங்கம் ஒன்றை மதுரையில் உருவாக்க வேண்டும்” என உறுதிபடக் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழ்க் கல்லூரி உருவாக்குதல் – சுவடிகள், நூல்கள் தொகுத்தல் – வெளியிடுதல் – பிறமொழி நூல்களை மொழிபெயர்த்துப் பதிப்பித்தல் – முறையாகத் தமிழ்த் தேர்வு நடத்துதல் – தமிழாராய்தல் – புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அரங்கேற்றுதல், இதழொன்று நடத்துதல் முதலிய உயரிய குறிக்கோள்களைக் கொண்டு, தமிழ்ச் சங்கம், தொடங்க முடிவு செய்தார். அதன்படி, மதுரையில் 14.09.1901 ஆம் நாள், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தலைமையில், மன்னர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், தமிழறிஞர்களும், தமிழன்பர்களும் குழுமியிருக்க தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றது.
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியை அடுத்திருந்த கட்டிடங்களில், ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’, ‘நூல் ஆராய்ச்சி சாலை’, ‘பாண்டியன் புத்தக சாலை’ முதலிய அமைப்புகள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற்றன.
தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவிற்கு, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா, இரா. இராகவய்யங்கார், பரிதிமாற் கலைஞர், சோழவந்தான் அரசஞ் சண்முகனார் முதலிய தமிழறிஞர் பலர் தமிழகமெங்குமிருந்து வருகை தந்தனர். பாண்டித்துரைத் தேவரை ‘பைந்தமிழ்க் காவலர்’ எனப் புகழ்ந்து போற்றினார். தமிழ்ச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்துக் கருத்துரைகள் வழங்கினர். இதுவே, முத்தமிழ் வளர்த்த மதுரையில் உருவான நான்காம் தமிழ்ச் சங்கமாகும்!
தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கேயே தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உண்டி உறையுள் அளித்து படிக்க வைத்தார் மன்னர்! தேர்வு நடத்திப் புலவர் பட்டம் வழங்கித் தமிழ் அறிஞர்களாகவும் தமிழாசிரியர்களாகவும், தமிழகத்திற்கு அளித்து மகிழ்ந்தார் பாண்டித்துரைத் தேவர்.
யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைக் கொண்டு, ‘திருக்குறள் பரிமேலழகர் உரை’, ‘திருக்கோவையார் உரை,’ ‘சேது புராணம்’ முதலிய பழந்தமிழ் நூல்கள் பலவற்றை ஏட்டுச்சுவடிகளிலிருந்து முதன் முதலில் அச்சில் பதிப்பித்தார். ‘தமிழ்த் தாத்தா’, உ. வே. சா, ‘புறநானூறு’, ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ‘மணிமேகலை’ போன்ற அரிய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க உதவி செய்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார், கலைக்களஞ்சிய அகராதிக்கான செய்திகளைச் சேர்த்து வைத்திருந்தார். அச்செய்திகளைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிடப் பொருளுதவி செய்தார்.
தேவாரத் திருமுறைப் பதிப்புகளையும், சிவஞான சுவாமி பிரபந்தத் திரட்டு நூலையும், சிவசமவாதவுரை மறுப்பு’ என்ற நூலையும், தகுதிவாய்ந்த பெரும்புலவர்களைக் கொண்டு வெளியிட்டார்.
‘பன்னூற்றிரட்டு’, ‘சைவ மஞ்ஞரி’ முதலிய நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார்.
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாருக்குப் பின்னர், அவரைப் போலவே, பாண்டித்துரைத் தேவர் இயற்றிய ‘காவடிச் சிந்து’ மிகவும் புகழ் வாய்ந்த நூலாகும்.
தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக, ‘ஞானாமிர்தம்’, ‘வில்லி பாரதம்’, யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் ‘தமிழகராதி’ முதலிய நூல்கள் வெயியிடப்பட்டன.
பாண்டித்துரைத் தேவர் நாவன்மை பெற்றுச் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினார். தமிழ் நூல்கள் பலவற்றை முயன்று பதிப்பித்துள்ளார். தாமே பல நூல்களைப் படைத்தளித்துள்ளார். துமிழ் வளர்ச்சிக்காக நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டதுடன், சிறந்த நாட்டுப் பற்றாளராகவும், விடுதலை உணர்வு கொண்டவராகவும் விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி. யின் சுதேசிக் கப்பல் குழுமத்திற்கு ஒன்றைரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்த வள்ளல் ஆவார்.
தமிழை வளர்க்கும் பொருட்டு அமைப்பு ஒன்று தேவை என உணர்ந்து மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார். 1901-ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கம் சார்பில் செந்தமிழ் என்னும் இதழும் வெளியிடப்பட்டது. ‘செந்தமிழ்க் கலாசாலை’ என்ற தமிழ்க் கல்லூரி, பாண்டியன் நூலகம், தமிழ் ஆய்வு மையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.வள்ளல் பாண்டித்துரை டிசம்பர் 2, 1911-இல் காலமானார்.

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும் வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ளும் வகையிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள“செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கில்” பாண்டித்துரையார் குறித்த செய்திகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.