வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து இன்று (ஆகஸ்ட் 13 ) சென்னை, சேப்பாக்கம் தோட்டக்கலைத்துறை இயக்குநரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்து மாவட்ட வாரியாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்த அனைத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கீரைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தோட்டக்கலைத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து தோட்டக்கலைப் பண்ணைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய ரக பழச் செடிகளை நடவு செய்யவும் வலியுறுத்தினார்.