News தமிழ்நாடு

ஓசூர் ஏர்போர்ட்: இந்திய விமான நிலைய ஆணையம் கொடுத்த சிக்னல்!

  • July 27, 2024
  • 0

கொங்கு மண்டலத்தில் மிகவும் முக்கியமான தொழில் மண்டலமாக திகழும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணைய ஒப்புதலின் அடிப்படையில் சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வு

ஓசூர் ஏர்போர்ட்: இந்திய விமான நிலைய ஆணையம் கொடுத்த சிக்னல்!

கொங்கு மண்டலத்தில் மிகவும் முக்கியமான தொழில் மண்டலமாக திகழும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணைய ஒப்புதலின் அடிப்படையில் சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வு தொடங்கவுள்ளது. இது அடுத்தகட்ட படிநிலையை நோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூர் சர்வதேச விமான நிலையம். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கால் தடம் பதித்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஏற்றுமதி வர்த்தகம் மிகவும் சிறப்பான முறையில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக அரசு ஓசூர் சர்வதேச விமான நிலைய அறிவிப்பை வெளியிட்டது.

​ஓசூரில் குவியும் புதிய முதலீடுகள்
இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ”ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற இலக்கை நோக்கிய பயணம் விரைவுபடுத்தப்படும். தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தொழில் தரக் குறியீட்டில் தமிழ்நாடு புதிய வரலாறு படைக்கும் என்கின்றனர்.

கர்நாடகா அரசு கொடுக்கும் சிக்கல்
இந்நிலையில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் வருவதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஓசூருக்கு அருகிலுள்ள பெங்களூருவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. எனவே அருகிலேயே மற்றொரு சர்வதேச விமான நிலையமா? என்று கர்நாடகா அரசு கேள்வி எழுப்புகிறது. ஏற்கனவே சிவில் ஏவியேஷன் அமைச்சகத்துடன் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் போட்டு கொண்ட ஒப்பந்தத்தின் படி, 150 கிலோமீட்டர் ஆரத்தில் எந்த ஒரு புதிய விமான வரக்கூடாது.

விமான நிலைய ஆணையம் ஒப்புதல்
இதைச் சுட்டிக் காட்டி டெல்லியில் மல்லுகட்டி வருகிறது கர்நாடகா. ஆனால் எப்படியும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் கொண்டு வந்தே தீருவோம் என்று தமிழ்நாடு அரசு கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தான் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு ஓசூர் சர்வதேச விமான நிலையம் தொடர்பாக கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில் சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4 இடங்கள் – அதிகாரிகள் ஆய்வு

தற்போது 4 இடங்களை மாநில அரசு தேர்வு செய்து வைத்திருக்கிறது. இவற்றை விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வர். இதற்கிடையில் ஓசூரில் உள்ள விமான நிலையத்தை தன் வசம் வைத்திருக்கும் ஏர் ஸ்டிரிப் வைத்துள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர்கள் மூலம் சர்வதேச விமான நிலையம் கட்டமைக்க காய் நகர்த்தி வருகின்றனர்.