ஆளுநர் ரவியின் இப்போதைய வேலை என்ன?
- October 18, 2025
- 0
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை. அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டும் காலம் தாழ்த்தியும் வந்த விவகாரத்தில், கடந்த அன்று வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறையின் மீது மேலும் வலுவான நம்பிக்கை உருவாகியுள்ளது உண்மைதான்.
அரசியல் ரீதியாகப் பார்க்கப்போனால், ‘ஆளுநருக்கு அதிகாரமில்லை’ என்றதும் ‘காலம்தாழ்த்தும் ஆளுநருக்குப்பதிலாக உச்சநீதிமன்றமே ஒப்புதல்’ அளித்ததும் இந்திய வரலாற்றில் – குறிப்பாக திராவிட இயக்க அரசியல் சாதனைகளுள் – மாபெரும் மைல்கல் தான்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர்நியமன அதிகாரம் கிடையாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் காலக்கெடுவுக்குள் கிடைத்தாக வேண்டும். தனக்கென சுயாதீன தனி அதிகாரம் ஏதுமில்லை.
அப்படியானால், இன்னும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால், ‘என்ன செய்கிறார்’ என்பது கவனிக்க வேண்டியதாகிறது.
இந்துத்துவத்தின் அடிப்படையான ராமபக்தியை தமிழ்நாட்டில் விதைத்துவிட்டால், பாஜக தமிழ்நாட்டுக்குள் தன் கால்களை மிக வலிமையாகப் பதிக்க முடியும். அரசியல் கட்சியாக தமிழ்நாட்டுக்குள் அதைச் செய்ய முடியாத நிலையில் 3 படிநிலைகள் மூலம் இந்தக் காரியத்தை செய்து முடிக்க திட்டம்.
முதலாவது, சைவ, வைணவ இலக்கியவாதிகளைக் குறிவைத்து ராமனை முன்னிறுத்தும் ஆன்மிக இலக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசவைத்தல்.
இரண்டாவதாக, இலக்கியத்தின் போர்வையில் பேசுவது, பேசவைப்பதன் மூலம் ராமன், ராமநவமி, ராமாயணம் ஆகியவற்றைச் சுற்றியே செய்திகளையும் அறிவாளிகளையும் பேச வைத்தல். இதற்காக தெரிந்தே சர்ச்சைக்குரியவற்றைச் செய்தல், (கல்லூரியில் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னது அதன் பகுதிதான்).
மூன்றாவது, உருவாக்கப்பட்ட ராமபக்தியின் விளைவாக, சர்ச்சை அலைகளைப் பயன்படுத்தி, பூத் வாரியாக ராம தொண்டர்களை உருவாக்குதல்.
பார்வைக்கு:
உலகெங்கும் இருக்கும் கம்பன் கழகங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் ராமன் பெயரிலான அரசியலுக்கு வலுசேர்க்கும் முயற்சியை கடந்த 3 ஆண்டுகளாக செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
சின்ன சின்ன ஊர்களில் நடக்கும் விழாக்கள் தான் குறி. ஆளுநரே விழாவுக்கு வருகிறார் என்ற டாம்பீகத்தைப் பயன்படுத்தி, பெரும்பணம் செலவு செய்யப்படும். அவ்விளம்பரங்கள் மூலம் ஊர்களுக்குள் உள்ளூர் பாஜக பிரமுகர்கள் செல்வாக்கானவர்கள் என்ற தோற்றம் உருவாக்கப்படும்.
பின் அந்த பாஜக பிரமுகர்கள் பூத் அளவில் மக்களிடம் நெருங்கிப் பேசுவர். இதன் மூலம் அதிகார மையத்துக்கு நெருக்கமாகிறோம் என்பது போன்ற மாயத்தோற்றம் மக்களிடம் உருவாக்கப்படுகிறது.

எப்படி உள்ளே வந்தார் ஆளுநர்?
இராமேஸ்வரம் கம்பன் கழகம், தனது கம்பன் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஆளுநரையும், அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் அழைத்தது. அங்கு இன்ன பிற கம்பன் கழக நிர்வாகிகளுடன் ஒரு கூடுகையை நடத்தினார் ஆளுநர். இதன் பின்னணியில் ராமபக்தியும் இந்துத்துவாவும் இருப்பதை ஒப்புக்கொண்ட நபர்களின் கூட்டம் தான் அது. அதே சமயம், தமிழ்நாட்டில் நம் வேலைத்திட்டம் என்ன என்பதில் இலக்கியம் தவிர் அகூட்டு நோக்கம் ஏதும் இருந்ததில்லை அவர்களுக்கு.
ஆளுநர் சந்திப்புக் கூட்டத்துக்குப் பின் வேகமெடுத்தன வேலைகள். சின்ன சின்ன அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைக்கிறதே என்ற நிம்மதி. கொஞ்சம் பெரிய அமைப்புகளுக்கு, பிற பகுதிகளின் கழகங்களில், மரியாதை கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி. அவ்வளவுதான். இரண்டையும் கோத்துப் பார்த்தால் வேலைத்திட்டம் தயார். தமிழ்நாட்டுக்குள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொது மேடைகளிலும் செய்ய வேண்டியது என்ன என்ற திட்டங்களை தனித்தனியே வசதிக்கேற்ப வகுத்துக்கொண்டன. அதே பணிதான். ஆனால், இந்த முறை நோக்கத்தில் மாற்றம். பரப்ப வேண்டியது கம்பராமாயணம் என்னும் இலக்கியத்தை எல்ல. ராமனை(!), ராமபக்தியை. இதுதான் கருப்பொருள்.
எங்கிருந்து தொடங்கின கம்பன் கழகங்கள்? எளிய அறிமுகம்:
1939இல் தொடங்கிய கம்பன் கழகம் என்ற அமைப்பு 2015 வரை ஒரு முறைப்படுத்தப்படாத இலக்கியக் குழுமம். ஆகப்பெரும் தமிழிலக்கிய ஆளுமைகள் சா. கணேசன், கி.வா.ஜ, டி.கே.சி., ரா.பி.சேதுப்பிள்ளை, அ.ச.ஞா., திரு.வி.க. மு.மு.இஸ்மாயில், ஃபரூக் மரைக்காயர் என தமிழ் அறிஞர்கள் பலரும் இயங்கி வந்த குழுமம்.
2015க்குப் பின்னர், வள்ளி முத்தையா தலைமையில் இலக்கியச்சுடர் த.ராமலிங்கம், வழக்கறிஞர் மாணிக்கவேலு ஆகியோர் துணைத் தலைவர்களாக இருந்தபோதுதான் அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. நீதியரசர் மு.மு.இஸ்மாயில் திறம்பட பணியாற்றிய காலகட்டங்களில் இலக்கிய அமைப்பாக கம்பன் கழகம் இருந்தது என்று பெரியோர் சொல்வதுண்டு.

இப்போது என்ன நடக்கிறது?
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலராக இருந்த லேட் சம்பத்குமார், புதுச்சேரி கம்பன் கழக செயலர் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர்
இதற்கு துணையாக, இலக்கியம் என்ற வசதியான போர்வைக்குள் ஒளிந்து கொள்கின்றனர். மிக கவனமாக, போட்டியானாலும் விழாக்களானாலும் தலைப்புகள் ராமபக்தியை மட்டுமே குறிவைத்து தரப்படுகின்றன. தேசிய, சர்வதேசிய அளவிலான கூட்டணியை இதில் பார்க்க முடிகிறது. உதாரணமாக சில நிகழ்வுகள். அவற்றை விளம்பரம் செய்யும்போதே ஆளுநரை தமிழ் உணர்வாளராக காட்ட முயலும் முயற்சிகளை கவனிக்க முடியும்.
நிகழ்வு 1
மஸ்கட் திருக்குறள் பாசறை, இராமேஸ்வரம் கம்பன் கழகம் இணைந்து,
புதுக்கோட்டைக் கம்பன் கழகம், கோவில்பட்டிக் கம்பன் கழகம் மற்றும் புதுடில்லிக் கம்பன் கழகம் துணையுடன்,
தமிழ் ஜனம் தொலைக்காட்சி நம்மோடு இணைகிறது!
தொடங்கி வைப்பவர்: தமிழை, தமிழர்களை, தமிழின் தொன்மையை, மரபை, நெறியை, மறையை நேசிப்பவரான மேதகு தமிழக ஆளுநர், திருவாளர் ஆர். என் இரவி அவர்கள்!
நிகழ்வு 2
உத்தர பிரதேச அரசு நடத்திய அகில உலக ராமாயண மாநாடு இராமேஸ்வரத்தில் நடத்தப்பட்டது. இராமேஸ்வரம் கம்பன் கழகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

நிகழ்வு 3: படிக்காதே; ஓது:
‘படிக்காதே பாராயணம் செய்’, ‘உணராதே ஓது’ என்ற நிலைக்கு நகர்த்துவதுதான் ‘அறிவைக்கெடுத்து வாசித்தல்’ என்பதன் அடுத்த படிநிலை. அதைச்செய்யவும் தொடங்கி விட்டார்கள் இப்போது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் தஞ்சாவூரில் இயங்கி வரும் தென்னக பண்பாட்டுக்கழகமும் இராமேஸ்வரம் கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் கம்ப ராமாயணம் பாராயண நிகழ்வு 28.01.2025 செவ்வாய்க்கிழமை நாளை காலை 9.30மணிக்கு இராமேஸ்வரத்தில் உள்ள இராமகிருஷ்ண மடத்தில் “கம்பன்விழா 2025” என நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் தாங்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் என்று விளம்பரமும் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் இலக்கிய மேடைப்பேச்சாளர்கள் அனைவரையும் கம்பராமாயணம் என்ற இலக்கியத்தின் மூலம் ஒன்றிணைப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது.
கம்பன் கழகங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் அன்று (22.12.2024) காலை புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 45க்கும் மேற்பட்ட கம்பன் கழகங்கள் கலந்து கொண்டன. இதில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதில் கம்பன் கழகங்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்துவதற்காக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் தலைவராக புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர் தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரன், செயலாளராக இராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், துணைத் தலைவராக கள்ளிப்பட்டி கம்பன் கழகத் தலைவர் காகுத்.கார்த்திகேயன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் 100% இந்துத்துவ, ராமபக்தி சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், இந்தக் குழுவை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் வலிமையான ஒரு வலைப்பின்னலை உருவாக்கி அதன்மூலம் பாஜகவுக்கு துணை சேர்ப்பது தான் திட்டம்.
இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் பங்குனி அத்த நட்சத்திர நாளைக் குறிவைத்து, நாட்டரசன் கோட்டையில் ‘இறைபணி’ செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

இலக்கியப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு தன் ராமபக்தி சித்தாந்தத்தை பரப்புகிறார் ஆளுநர். அதை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்குப் பரப்பும் விதமாக ஒரு வலைப்பின்னலை உருவாக்கி, பாஜகவுக்கான பேச்சாளர் குழுக்களை தயார் செய்து வருகிறார் ஆளுநர்.
இளம் தலைமுறைப் பிள்ளைகள் கேள்வி கேட்டால், இவர்களிடம் பதில் இல்லை. ஆனால், எப்படி வேண்டுமானாலும் பேசிப் பழகிய சில ‘பட்டிமண்டப பேச்சாளர்கள்’ இவர்களது அம்புகளாகப் பயன்படுவர். இதற்கான இந்திய அரசுத் தரப்பின் பிரதிநிதியாக நடுவிலிருந்து செய்துவருகிறார் ஆளுநர் என்பதே நம் தெளிபு.