தமிழ்நாடு

வாராரு அழகரு வாராரு… பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்

  • April 23, 2024
  • 0

கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார்.

வாராரு அழகரு வாராரு… பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஓர் அங்கமான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று ( ஏப்ரல் 23 ) நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மாலை 4 மணியளவில் திருமாலிருஞ்சோலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரைக்குப் புறப்பட்டார்.

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதில், சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடிக்கு ஏப்ரல் 22-ம் தேதி காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தார். இதற்கிடையில், அழகர்கோயிலில் இருந்து வீரராகவப் பெருமாள் கோவில் வரை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 480-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, பொதுமக்களின் வரவேற்பை அழகர் பெற்றுக் கொண்டார்.

பின்னர், இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியபோது, திருவில்லிப்புத்தூரிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளின் திருமாலையைச்சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 23) அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோவிலின் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார்.

வைகையாற்றுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ‘கோவிந்தா’ முழக்கத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். பெண்கள் சர்க்கரை தீபம் காட்டினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் அழகருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் இறங்கி, கொண்டாட்டமாய் வழிபட்டனர்.

பக்தர்கள் அதிகமாக திரண்டதால், அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவல்துறையினர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், சுமார் 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.