தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
200-க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியைத் தவிர்த்து, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது நடவடிக்கைகளுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, “காவிரி ஆற்றுத் தண்ணீர் வராத காரணத்தால் தமிழக விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரும் காலங்களில் பெரும் பஞ்சம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கோடான கோடி மக்கள் இருக்கின்றனர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐந்தாண்டு பொற்கால ஆட்சியில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயம் செழித்தது. ஆனால், ஆட்சி மாற்றத்தால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் விஜய் அவர்கள் காவிரி பிரச்சனைக்காக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை; ஒரு சிறு குரல் கூடக் கொடுக்கவில்லை.
நாளையே சட்டமன்றக் கூட்டம் கூடவுள்ள நிலையில், கடந்த மூன்று மாத காலமாக விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர் நம்முடைய இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே. இந்திய அளவிலே நாக்பூரில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்காகக் கூடக் குரல் கொடுத்து, ஜனநாயகத்தைக் காக்கும் பெரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.
நேற்று தஞ்சையில் நடந்த பிரம்மாண்ட கூட்டம் த.வெ.க ஆட்சிக்குச் சாவுமணி அடித்துவிட்டது. நேற்றோடு அந்த கட்சியின் ஆட்சி முடிந்துவிட்டது. விவசாயிகள் அத்தனை பேரும் இன்றைக்கு வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள். இந்த 3 மாத காலத்தில் ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை, எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஆட்சித் திறனற்ற அரசு தமிழ்நாட்டில் இப்போதுதான் உருவாகியுள்ளது..
உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ளது 100 சதவீதம் வடிகட்டிய பொய் வழக்கு. எந்த அவதூறும் பேசாத ஒருவரின் மீது பொய்யான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவையும் மீறித் தஞ்சை காவல் துறை கைது நடவடிக்கை என அதிகாரம் துஷ்பிரயோகம் செய்கிறது. வருங்காலத் தமிழகத்தை நிர்வகிக்க இருக்கின்ற உதயநிதி ஸ்டாலினுக்கே இந்த நிலை என்றால் சாதாரணத் தொண்டனின் நிலை என்ன?
தி.மு.க என்பது தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட எஃகுக் கோட்டை. இந்த எஃகுக் கோட்டையை உளி வைத்து அடித்தாலும் ஒரு துளியைக் கூடப் பேர்க்க முடியாது. எமர்ஜென்சியையே சந்தித்து ஓராண்டு காலம் சிறையில் இருந்து 40 ஆண்டுகள் உழைத்து முதலமைச்சரானவர் மு.க.ஸ்டாலின். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் எல்லாம் இன்றைக்கு ஆட்டம் போடுகின்றன.
சட்டமன்றத்தில் தி.மு.க-வின் குரல் ஒலிக்கக் கூடாது என்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் குரல்வளையை நெரிக்கப் பார்க்கிறார்கள். ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் இந்த ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்றார்.