அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: ஜோ பைடன் கொடுத்த சிக்னல்.
July 25, 2024
0
உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு சுவாரஸிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி வேட்பாளர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ்க்கு வழி பிறந்திருக்கிறது. இந்த சூழலில்
உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு சுவாரஸிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி வேட்பாளர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ்க்கு வழி பிறந்திருக்கிறது. இந்த சூழலில் ஜோ பைடன் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றியது பெரும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி இடையில் நேரடி போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. மறுபுறம் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே ரேஸில் இருந்து விலகி கொள்வதாக ஜோ பைடன் கூறிவிட்டார். இது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியது. ஒருபுறம் டொனால்ட் ட்ரம்ப் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம் சொந்த கட்சிக்குள் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஜோ பைடன் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின.
மேலும் டொனால்ட் ட்ரம்ப் உடன் நேருக்கு நேர் நடந்த விவாத நிகழ்ச்சியில் கருத்துகளை சரியான முறையில் எடுத்து வைக்க முடியவில்லை. கட்சி கொள்கைகள், அரசியல் செயல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வைப்பதில் கோட்டை விட்டு விட்டார் என விமர்சனங்கள் குவிந்தன. விஷயம் இப்படி சென்று கொண்டிருக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பலரும் ஜோ பைடன் வெளியேற வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தான் அதிபர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இன்று நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதில், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுதான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்த ஒரே வழி. அமெரிக்காவை பொறுத்தவரை சிறந்த அம்சம் என்னவெனில் அரசர்களும், சர்வாதிகாரிகளும் ஆள முடியாது. மக்கள் தான் ஆட்சி செய்ய முடியும்.
ஏனெனில் அவர்கள் கைகளில் தான் அதிகாரம் இருக்கிறது. அமெரிக்காவின் பலமே உங்களிடம் தான் உள்ளது. அதை மறந்துவிடாதீர்கள் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இவரது விலகலை அடுத்து கமலா ஹாரிஸ்க்கு அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருக்கு ஜனநாயக கட்சிக்குள் பெருவாரியான ஆதரவு கிடைத்து வருவது கவனிக்கத்தக்கது.