சென்னை பள்ளிகளில் பிரஞ்சு மொழி கற்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் நிறுவனம் இடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் கையெழுத்தானது. இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக, 9, 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் நான்கு தொகுதியினரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படும் என்றும் அதன்பின் எல்லாப் பள்ளிகளிலும் அம்மொழியைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிட்டீஸ் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின்கீழ், மேம்படுத்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பிரெஞ்சு மொழியைப் பயிற்றுவிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக் கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பள்ளிகளில் ஏறத்தாழ 120,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.