15/07/2026
தமிழ்நாடு

தவெக அரசு ரீல் மாறி ரியல் உலகத்திற்கு வர வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

  • July 15, 2026
  • 0

தவெக அரசு ரீல் மாறி ரியல் உலகத்திற்கு வர வேண்டும்என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடல் ….வீடு புகுந்து அடிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு…… விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

தவெக அரசு ரீல் மாறி ரியல் உலகத்திற்கு வர வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

தவெக அரசு ரீல் மாறி ரியல் உலகத்திற்கு வர வேண்டும்
என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடல் ….வீடு புகுந்து அடிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு……

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கோயில்கள் எல்லாம் எந்த அளவிற்கு முன்னோர்களால் பேரரசர்களால் மக்களால் பாதுகாக்கப்பட்டது. அதற்கு என்று நிலங்கள் இருந்தது. அந்த நில வருமானம் கோயிலுக்கு அலங்காரத்திற்கும் திருவிழாக்களுக்கு மக்களுக்கும் உதவியாக இருந்தது. உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாமல் தான் வழிபடுகின்ற இறைவனுக்கு இவ்வளவு தானங்களை செய்தது நாடு தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

ஆனால் இன்று காலம் காலமாக தமிழ்நாட்டில் கோயில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என்பது வேதனையான விஷயம். கோயில் சொத்துக்கள் மக்களுக்கு பலன் தரும் அளவுக்கு தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு பேர் அதை பயன்படுத்தினாலும் நிறைவாக கோயிலுக்கானது.

ஆனால் இங்கே கரூர் பழநி கோயில் சொத்துக்கள் அதிக அளவுக்கு கோயிலுக்கு இல்லாமல் அது சூறையாடப்பட்டு கொண்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதனால் தமிழக அரசு கரூரில் உள்ள கோயில் நிலங்கள் கோயிலுக்கான நிலங்கள்‌. அதற்கு என தனி பிரிவு ஏற்படுத்தி தீர விசாரிக்கப்பட வேண்டும்.

எந்த வகையிலும் கோயில் சொத்துக்கள் அபகரிக்கப்படக்கூடாது என்பதில் எல்லோரும் தெளிவாக இருக்க வேண்டும் என்பது இது ஒரு தாழ்மையான கருத்து. அதே போல் பழனியில் 100 கோடி மதிப்பிலான பழனியாண்டவரின் சொத்துக்கள் இரண்டு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பழனி ஆண்டியாக இருந்தாலும் அவர் அனைவருக்கும் மிக மிக செல்வத்தை கொடுத்து வருகிறார். அவரோட சொத்தை சுரண்டும் அளவுக்கு நிகழ்வுகள் நடைபெறுவது ஒத்துக் கொள்ள முடியாது.

தமிழக அரசு ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு நிலங்கள் இருக்கிறது. எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அதற்கான சொத்துக்கள் எவ்வளவு. எந்த அளவிற்கு அரசாங்கம் அதை பாதுகாக்கிறது என்பதை முழுமையான அறிக்கையாக தயார் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும்.

அருகே உள்ள திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஒவ்வொரு இந்துவின் உணர்வும் கோயில் தூணில் விளக்கேற்ற வேண்டும் என்பது. கடந்த ஆட்சியில் மத வேற்றுமை காரணமாக பூரண சந்திரன் போன்ற உயிர் நீத்த பிறகும் விளக்கேற்ற முடியாமல் உள்ளது. இதே நிலை இந்த ஆட்சியில் தொடரக்கூடாது. கடந்த ஆட்சியை மக்கள் நிராகரித்ததற்கு காரணம் இந்து விரோத போக்கு தான். இந்த ஆட்சி இந்து விரோத போக்கை கைவிட்டு இந்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் உச்ச நீதிமன்றம் சென்றது தவறானது. கட்சிகள் இந்து இயக்கங்கள் அமைப்புகள் என்று எடுத்துக் கொள்ளாமல் திருப்பரங்குன்றத்தில் எல்லோரும் சாமானிய மக்கள்தான் போராடினார்கள். இந்த அரசு இந்து கோயில்கள் மீதும் இந்து மத உணர்வு மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்து என்று சொன்னால் தமிழ்நாட்டில் தவறான புரிதல் உள்ளது. மற்ற மதத்தைச் சார்ந்தவன் என்றால் மதச்சார்பற்றவன். இந்து என்று சொன்னால் மத சார்பு உடையவராக மாறிவிடுகிறோம். அப்படி இல்லாமல் இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இந்துவாக வலியுறுத்துகிறேன்.

அதேபோல் பல தமிழ்நாட்டில் பல தவறுகள் நடந்துள்ளது அரசாங்க மருத்துவமனைக்கு தானம் கொடுப்பதற்கு மொபைல் செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இதை பாராட்டினாலும் ஒரே நாளில் மூன்று கோடி ரூபாய் கிடைத்தாலும் அது எந்த அளவுக்கு மக்களுக்கு மருத்துவ உதவியாக சென்று சேருகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தொண்டை அறுவை சிகிச்சை செய்தவர், திருச்சியில் அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செவிலியர் உயிரிழந்துள்ளார். விளம்பரத்திற்காக மட்டும் அல்லாமல் முழுமையாக மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்கும் அரசாக மாற வேண்டும்.

அதேபோல் கல்குவாரியில் 60,000 கோடியில் ஆரம்பித்து ஒரு லட்சம் கோடி வரையிலான மக்களுக்கான வரி பணம் சுரண்டப்பட்டது தெரிய வந்துள்ளது. அந்த வழக்கு என்ன ஆயிற்று தண்டனை கிடைத்ததா என்று தெரியவில்லை மூடப்பட்ட குவாரிகள் காவிரி படுகையில் திறக்கப்படுகிறது என்பது சுற்றுச்சூழலை பாதிக்க கூடியது. முதல்வர் விஜய் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தவெக அரசு வேகம் எடுத்து மக்களுக்கான பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். நியாயமாக சென்று ஆய்வு நடத்தினால் தவறில்லை. அதை ரீல்ஸ் எடுத்து பரிகசிக்கக்கூடிய வகையில் செய்யாமல் தீவிரமான மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்க வேண்டும். ரீல் மாறி ரியல் உலகத்திற்கு வர வேண்டும். காமராஜர் மக்களுக்காக அதிகம் சிந்தித்தார். அவருக்கு விழா எடுக்கிறோம். மக்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் கரூருக்கு சென்றார். வசனம் பேசினாரே தவிர மக்களை இன்னும் அவர் சந்திக்கவில்லை. நேற்றைய தினம் முதல்வர் விஜயிடம் புகார் கொடுக்க சென்ற பெண் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்க்கப்பட வேண்டும். புகார் கொடுக்க அதிக கூட்டம் வந்தால் சரியாக நிர்வகித்து பொதுமக்களை பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயமாக நமது கொள்கை. இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் பலர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். குதிரை பேரமா வேற பேரமா என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பேரம் நடக்கிறது நிர்மல் குமார் ராஜினாமா செய்தால் பேரம் கிடையாது வாங்கினால்தான் பேரம் என்று புதுவிதமான கருத்தை கூறுகிறார். அவ்வளவு தியாகிகளா ராஜினாமா செய்தவர்கள்.

வந்த உடனே மக்களுக்காக தியாகம் செய்வதற்கு ஏதாவது ஒரு நியாயமான கோரிக்கை இன்றி லாபமின்றி ராஜினாமா செய்ய மாட்டார்கள். இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நடைமுறைகள் இருக்கிறது. இதுதான் உதாரணம் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் என்பதற்கு.

உறுதித் தன்மை இல்லாத சூழ்நிலையை அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும். 2029 இல் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பதை நான் சொல்ல முடியாது பாராளுமன்றத்தில் இயற்றப் போகும் சட்டம் சொல்லும். நியாயப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை என்பது இன்றைய அரசியல் சூழல் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

டிடிவி தினகரன் சொல்வதும் எடப்பாடி பழனிச்சாமி சொல்வதும் வேறு ஆக இருக்கிறது. மக்களுக்காக சொல்ல வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கிறது ரேஷன் கடைகள் முறைப்படுத்தப்பட வேண்டும். 10,000 கோடி செலவிடப்படக்கூடிய ரேஷன் கடைகள் அங்குள்ள ரேஷன் ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் இவர்கள் எல்லாம் சரியாக கவனிக்கப்பட வேண்டும்.

வீடு புகுந்து அடிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கஞ்சா கைது செய்யப்பட்ட ஒருவர் லாக்கப் மரணம் அடைந்துள்ளார். விஜய் அவர்கள் விமர்சித்தது என்பதற்காக ஒரு மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் தேர்வு செய்துள்ளார்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் சரியாக நிர்வகிக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன்.

50 நாட்களில் நான்கு லாக்கப் மரணங்கள் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. இதை உடனே முதல்வர் கவனிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *