அரசியல் தமிழ்நாடு

அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை

  • March 20, 2024
  • 0

அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்கவில்லை. தலித் மக்கள் ஓட்டுகளும் கிடைக்கவில்லை. சுற்றிச் சுற்றி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் பாமகவுக்கு அதிமுக கூட்டணியால் நன்மை இல்லை

Share:
அதிமுக-பாமக கூட்டணி அமையாதது ஏன்? கவனிக்க வேண்டியவை

அதிமுக கூட்டணியை பாமக புறக்கணித்தது ஏன் என்பது இப்போது வரை பலருக்கும் கேள்வியாகவே இருக்கும் நிலையில், இதில் கவனிக்க வேண்டிய அம்சங்களை பட்டியலிடுகிரது இந்தக் கட்டுரை

பாஜக கூட்டணியை மீண்டும் உறுதி செய்து, சேலத்தில் நடைபெற்று வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக பொதுக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாசும் அன்புமணியும் மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இன்று காலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான அதே வேகத்தில், சேலத்திற்கு ராமதாசும் அன்புமணியும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். எல்லாம் மின்னல் வேகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதன் மூலம் பாஜக தலைமையில் 3வது அணி ஒன்று புதியதாக உதயமாகி உள்ளது.

இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்குமா என்பது கேள்விக் குறிதான். அது பாஜகவுக்கும் பழம் தின்று கொட்டை போட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் தெரியும்.

ஆனால், 2026இல் பாஜக தலைமையில் ஒரு கூட்டணிக்கு இப்போதே அஸ்திவாரம் போட்டுள்ளன இந்த இரண்டு கட்சிகளும்.

அதிமுக கூட்டணிக்குள் பாமக வரும் எனப் பலரும் கூறி வந்தனர். ஆனால், பாமக இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே தென்பட்டது. காரணம், ஒன்று உள்ளது. அது என்ன என்கிறீர்களா?

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக சிஏஏ சட்டத்தை பாஜக நடைமுறைப்படுத்தியது. அது குறித்து முன்பு 9 ஆண்டுகளாக பாஜக கூட்டணியிலிருந்து வந்த அதிமுக கூட கருத்துச் சொன்னது.

ஆனால், மருத்துவர் ராமதாஸ் வாய் திறக்கவே இல்லை. அவர் மவுனமாக இருக்கும் போது அவர் பாஜக கூட்டணிக்குத்தான் செல்வார் என்பது உறுதியாகி விட்டது. அந்த நேரத்தில் உடனே கூட்டணியை அறிவித்தால், சில எதிர்ப்புகள் வரும்.

ஆகவே, கொஞ்சம் காலம் இடைவெளிவிட்டு கடைசி நேரத்தில், தமிழ்நாட்டுக்கு மோடி வரும் வேளையைப் பார்த்து அறிவித்தால் சரியாக இருக்கும் என்பதற்காகத்தான் பொறுத்திருந்து இன்று கூட்டணியை அறிவித்துள்ளது பாமக.

அதிமுக பக்கம் ஏன் பாமக போகவில்லை?

இது முக்கியமான கேள்வி. கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்விகளை அதிகம் சந்தித்து வருகிறது. வெற்றிக் கூட்டணி அமைப்போம் என்று ஜெயக்குமார் அடிக்கடி கர்ஜிக்கிறார்.

ஆனால், பாமகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றும் வரும்போது மன்சூர் அலிகானை அழைத்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதைப் போல ஒரு புகைப்படம் வெளியாகிறது. அதைப் பலரும் கிண்டலடிக்கிறார்கள்.

அதிமுகவின் நிலைமை இந்தளவுக்குக் கீழ் இறங்கிவிட்டதா என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பறக்கின்றன. அதை எல்லாம் பாமரர்களே கவனிக்கும் போது பாமக கவனிக்காதா?

அதிமுகவில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்ற இரட்டை தலைமை இருந்தவரை 30% வாக்கு என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்த இரட்டைத் தலைமை இல்லை. ஒபிஎஸ் ஒரு பக்கம் உள்ளார். டிடிவி தினகரன் அணி அதிமுகவை முன்பே உடைத்துவிட்டது. இதற்கு நடுவில்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை ஏற்றுள்ளார்.

எனவே இந்த மக்களவைத் தேர்தல் யார் பிரதமர் என்பதை மட்டும் சொல்லப் போகின்ற தேர்தல் இல்லை. இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு எத்தனை சதவீதம் வாக்கு வங்கி உள்ளது என்பதை நிரூபிக்கப் போகின்ற தேர்தலும்கூட.

ஆகவே, நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற திரிசங்கு நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

அதிமுக தலைமையிலான அணியில் முன்பு பாமக இடம்பெற்றிருந்ததால், பெரிய இலாபங்களை அக்கட்சி பெறவில்லை.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள வன்னியர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரவாக உள்ளனர். அதே. ஆரணி, அரக்கோணம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையே உள்ளது.

அதற்கு என்ன சான்று என்று பலரும் கேட்கலாம்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் பாமக இருந்தது. அதன் மூலம் பென்னாகரம், தருமபுரி, சேலம் மேற்கு, மேட்டூர், மயிலம் ஆகிய பகுதிகளிலிருந்துதான் பாமகவுக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.

ஆனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய பாமக வலுவாக உள்ள மாவட்டங்களில் ஒரு எம்.எல்.ஏ கூட கிடைக்கவில்லை. இதே மாவட்டங்களில் அதிமுகவும் வலுவாக இருந்து தோல்வியே கிடைத்துள்ளது.

ஆக, அதிமுக- பாமக கூட்டணியை இந்த மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் பெரிதாக ஏற்கவில்லை என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 30க்கும் மேலான தொகுதிகளில் திமுக கூட்டணி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக திண்டுக்கல்லில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்றது. திண்டுக்கல்லில் பாமகவுக்குப் பெரிய பலம் இல்லை. ஆனால் அதிமுகவுக்குச் செல்வாக்கு உள்ளது.

2019 தேர்தலில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி 7,46,523 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் ஜோதி முத்து 2,07,551 வாக்குகளைத் தான் பெற்றார்.

அதிகபட்சமாக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவை திமுக கூட்டணி வீழ்த்தி உள்ளது. அப்படிப் பார்த்தால், இந்தத் தொகுதியில் அதிமுக ஓட்டுகள் பாமகவுக்குக் கிடைக்கவே இல்லை. அமமுக வேட்பாளர் 62,875 வாக்குகளைப் பிரித்துவிட்டார்.

பலம் இல்லாத தொகுதியை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியதே தவறு. இந்த முறை அதிமுக கூட்டணியில் நீட்டித்தால் அதிமுக ஆரணியை விடாது. கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற பாமக வலுவாக உள்ள இடங்களை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டும்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான வன்னியர் தலைவர்கள் என்று பாஜகவில் இல்லை. அதிமுகவில் வலுவான வன்னியர் தலைவர்கள் உள்ளனர். பாஜகவில் பாமக விரும்பிய தொகுதியை எடுத்துக் கொள்ள முடியும். அதிமுகவில் அது நடப்பது கஷ்டம்.

ஆகவே, பாதுகாப்பான பாஜக பக்கமே இருந்து விடலாம் என பாமக முடிவு எடுத்துவிட்டது. வெற்றி பெறவில்லை என்றாலும் பாமகவுக்குப் பிரச்சனை இல்லை. வாக்கு சதவீதத்தைக் காட்டி கட்சியின் அங்கீகாரத்தைச் சின்னத்தைத் தக்க வைக்க முடியும்.

இதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணியில் தான் பாமக இருந்தது. இரு கட்சிகளின் கூட்டணி பலத்துடன் நின்றும் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் தோல்வியைத் தழுவினார்.

திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் 5,74,988 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்புமணி 5,04,235 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

அமமுக வேட்பாளர் பெ.பழனியப்பன் அதிமுகவின் 53,655 வாக்குகளைப் பிரித்தார் என்பது மிக முக்கியமான செய்தி. அந்த வாக்குகள் அன்புமணிக்கு விழுந்திருந்தால், கட்டாயம் இவர் வெற்றி பெற்றிருப்பார். அன்புமணியின் தோல்விக்கு அமமுக ஒரு பக்கம் வாக்கைப் பிரித்தது முக்கிய காரணம்.

அன்புமணிக்கே இந்த நிலை என்றால், மற்ற பாமக வேட்பாளர்கள் நிலையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கடந்த 2019 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாமக இருந்தும் அதிமுகவின் ஓட்டுகள் கிடைக்கவில்லை என்பது உண்மை.

அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டும் கிடைக்கவில்லை. தலித் மக்கள் ஓட்டுகளும் கிடைக்கவில்லை. சுற்றிச் சுற்றி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் பாமகவுக்கு அதிமுக கூட்டணியால் நன்மை இல்லை என்றே தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் நிற்கும் போது யார் பிரதமர் என மக்களிடம் சொல்ல முடியாது. ஆகவே வெல்ல முடியாது என பாமக நினைக்கிறது. அந்தக் கணக்கையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.