பல்வேறு மக்கள் திட்டங்களை வரக்கூடிய தேர்தலை மனதில் வைத்து தமிழக முதல்வர் வழங்கவில்லை. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து வழங்கி உள்ளார் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
கரூர், திருமாநிலையூர் பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில், 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 18,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அவர்,
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாநாடு போல் நடத்தி வரும் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்துகள். மூன்று நாட்களுக்குள் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை கரூர் மாவட்டத்தால் மட்டுமே நடத்த முடியும். கரூர் எப்போதுமே ஸ்பெஷல். முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பகுதி கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ளது.
கரூர் பேருந்து நிலையம் வரக்கூடாதென சிலர் வழக்குகள் தொடுத்தனர். அதை செந்தில்பாலாஜி தனது பாணியில் வென்று காட்டியுள்ளார்.
இந்த விழாவில் சுமார் 13,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 1100 மகளிருக்கு 14 கோடி ரூபாய் இணைப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உதவி தொகை பெறுவதற்கான விதிகளை முதல்வர் தளர்த்தியுள்ளார்.
கரூருக்கு மினி டைடல் பார்க், முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை, நான் சார்ந்த விளையாட்டுத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டங்களை தேர்தலை மனதில் வைத்து முதல்வர் வழங்கவில்லை. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து வழங்கி உள்ளார் என்றார்.