சான்றிதழ்கள் ரத்து: பேராயுதமா? பேருக்கு அறிவிப்பா?
- February 17, 2025
- 0
அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.
அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், குற்றமிழைக்கும் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என, செய்திகள் வந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். மிக நல்ல செய்தி. வரவேற்க வேண்டிய ஒன்று. அதே சமயம், இது தாமதமான நடவடிக்கை என்ற வருத்தத்தையும் சேர்த்தே கவனிக்க வேண்டியிருக்கிறது.
பெட்டிச்செய்தி
“அமைச்சர் தானே அறிவித்துள்ளார். இன்னும் அரசிதழில் அறிவிக்கவில்லை. திமுக அரசை நம்ப வேண்டாம்” என சமூக ஊடகங்களில் பொய்ச்செய்திகள் உலவின. ஆனால், அரசு எப்போதோ அறிவித்துவிட்டது (2012-அரசாணை எண் 121). அமைச்சர் அதை இப்போது மீண்டும் தெரிவித்துள்ளார் என்பதே உண்மை.
2012ஆம் ஆண்டே அரசாணையாக (அரசாணை எண் 121) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளபோதும், இன்றுவரையிலும் தீர்க்கமாக அமல்படுத்தப்படவில்லையே என்ற வேதனை இருந்தது. இதனை விரைந்து வலிமையாக செயல்படுத்த வலியுறுத்தி பென் பாய்ண்ட் தளத்தில் கடந்த 9ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் கடந்த 13 ஆம் தேதி ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான பாலியல் குற்றம் நிரூபணமானால் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு முன்னதாக இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆசிரியர்கள் மீதான புகார், அதன் உண்மைத்தன்மை, துறைரீதியான நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை, விசாரணைக்குழு அறிக்கை, வழங்கப்பட்ட தண்டனை, நிலுவையில் உள்ளவை, பணியில் இருப்பவர்கள், ஒய்வு பெற்றவர்கள், தவறு நிரூபணமானவர்கள், பொய் புகார்கள் உட்பட அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக் கல்வித் துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறிழைத்த ஆசிரியர்கள் மீது அரசாணை 121-ன் படி துறைரீதியாக பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும். விரைவில் அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மார்ச் மாதமே இது அமலுக்கு கொண்டுவரப்படும்” என்று அலுவலக தகவல்கள் வெளியாகின.
அதன்படியே, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சரும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். பாராட்டுக்குரிய நடவடிக்கைதான். ஆனாலும்…
அதுதான் அறிவிப்பாக வந்துவிட்டதே! வேலையும் தொடங்கிவிட்டதே! இனி என்ன? அரசு எதைச் செய்தாலும் ஏதேனும் ஒரு வகையில் குறை சொல்வதா என்று கேட்கலாம்.
ஆனால், நிதானமாக சிந்தித்துப்பார்த்தால், அரசு இப்போது செய்ய வேண்டியது வெறும் அரசாணை அமலாக்கம் மட்டுமல்ல. அரசின் நடவடிக்கை இந்த அறிவிப்புக்கான நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும்.
அடிப்படையில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள்/ஊழியர்கள் துறைரீதியான நடவடிக்கைகளுக்குப் பின் என்ன ஆகிறார்கள் என்று பார்த்தால், வேறொரு இடத்துக்கு/பள்ளிக்கு மாறுதலாகின்றனர் அல்லது வேறொரு புதிய/தனியார் பள்ளியில் பணிக்கு சேர்கின்றனர். இது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. இதைத் தடுக்கும் பொருட்டே இந்த அரசாணை அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குநர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று அரசும் இந்த அரசாணையை – 2012 இல் – வெளியிட்டது. அதன்படி பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை இதுவரை அரசு கவனிக்கவில்லையா என்ன?
ஒரு பாலியல் குற்றவாளியின் கல்விச்சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டால், அவர் வேறொரு பள்ளியில் வேலைக்கு சேர்வது தடுக்கப்படும் என்பதுதான் இதில் அடிப்படையான புரிதல். அதே சமயம், புதிதாக வேலைக்கு சேரும் அனுபவமிக்க ஆசிரியர் ஒருவர், இதற்கு முன் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவரா என்பதை சோதிக்க ஏதேனும் அமைப்பு முறைமை உண்டா? அசல் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றே கொண்டாலும், இதில் போலிகள் உலவும் கொடுமையையோ, டிஜிட்டல் வடிவம் மூலம் ஆவணங்களை பெற்றுக்கொண்டு வேலையில் சேர்க்கும் நிலைமையையோ கருத்தில் கொண்டால், சான்றிதழ்களை ரத்து செய்வோம் என்ற அரசின் அறிவிப்பு அறிவிப்பளவில் மட்டுமே சிறந்ததாக தெரிகிறது.
வேறொரு பள்ளியில் ஒருவர் வேலைக்கு செல்ல முயற்சிக்கும்போது அவரது சான்றிதழ்கள் அரசால் ரத்து செய்யப்பட்டவையா என்பதை சோதிக்க ஒருங்கிணைந்த வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு, அன்றாடம் பராமரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள், சான்றிதழ் ரத்தானவர்கள், ஆய்வில் வைக்கப்பட்டுள்ளோர், குற்றம் பொய் என்று நிரூபிக்கப்பட்டோர் என இன்னபிற பிரிவுகள் வாரியாக பட்டியல் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். அரசு தனியார் பள்ளிகள் என அனைத்துக்குமான பொதுத்தளமாக இது பயன்படுத்தப்பட வேண்டும்.
கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டதன் வீரியம், அந்த ஆசிரியரை உண்மையாகவே பாதிக்காமல் போனால், இந்த அறிவிப்பு, குழந்தைகள் பாதுகாப்புக்கான பேராயுதம் என்று கொண்டாடப்படும் தகுதியை இழக்கும். பத்தோடு பதினொன்றாய் அத்தோடு இது ஒன்றும் என அமைச்சரின் அறிவிப்பு காற்றோடு கலந்து போகும் பேரபாயமும் உண்டு.