வெறும் கையால் இறால் பிடிக்கும் பெண்கள்: இது ஒரு பேசப்படாத பெரும்பாடு
- November 30, 2025
- 0
நம்பிக்கையுடன் கைகளால் இறால் பிடிக்கும் காளீஸ்வரியின் கதை இது.
நம்பிக்கையுடன் கைகளால் இறால் பிடிக்கும் காளீஸ்வரியின் கதை இது.
மீன்பிடி அல்லது கடல்தொழில் என்றாலே வலை, படகு, இயந்திரம், ஆண்களின் உழைப்பு, ஐலேசா சத்தம் என்றே பெரும்பாலோரின் பார்வை நிற்கிறது. ஆனால் அந்தக் கடலின் கரையோரங்களில், ஆழமில்லாத உவர்நீர்ப் பகுதிகளில், வெறும் கைகளையே கருவியாகக் கொண்டு வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிடிப்பது வெறும் இறால்கள் அல்ல; தினசரி வாழ்வாதாரம், தலைமுறை அறிவு, தன்னம்பிக்கை.
அப்படி ஒரு நம்பிக்கையுடன் கைகளால் இறால் பிடிக்கும் காளீஸ்வரியின் கதை இது.
கடல் உள்வாங்கினால் ஆபத்து என்றும் நீரோட்டத்தில் தொடர்புடைய எங்கோ ஓரிடத்தில் கடல் சீற்றம் காணப்படும் என்றும் அறிவோம். ஆனால், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கிராமத்தின் கடலோரப்பகுதியி, கடல் உள்வாங்கினால்தான் இந்தப் பெண்களுக்கு தொழிலே.
குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடல் உள்வாங்கும் வேளைகளில், இறால், நண்டு ஆகியவற்றைக் ஆழமற்ற உவர்நீர் கடல்பகுதிகளில் இறங்கி கைகளால் பிடிப்பது இவர்களது தொழில். பெரும்பாலும் மழை, காற்று உள்ளிட்ட இயற்கை காரணங்களால் பிரதானமான மீன்பிடி தொழில் தடைபட்டால் அன்றைய நாளுக்கான உணவும் வாழ்வாதரமும் வழங்கும் தொழில் இந்த இறால் பிடிதான்.
காலை 8 மணிக்கே கடலுக்குள் இறங்கி விடுகிறார் காளீஸ்வரி. அவரைச் சந்தித்தபோது மணி காலை 11.25. ஏற்கனவே பேசியிருந்தோம். கைகளிரண்டையும் கடல் மண்ணுக்குள் நுழைத்திருந்தபடி, இன்முகத்தோடு வரவேற்றார். இவரைப் போலவே உடன் இறால் பிடிக்கும் இன்னும் சிலரையும் சற்று இடைவெளிகளில் பார்க்க முடிந்தது.
எந்த நவீன தொழில்நுட்பமும் இல்லாமல், நீரில் கைகளை ஊன்றி இறால்களைப் பிடிக்கிறார்கள். கலங்கிய நீருக்குள் களிபோன்ற மண்ணுக்குள் மறைந்திருக்கும் உயிரின் அசைவை அவர்கள் கண்களால் அல்ல, உணர்வுகளால் அறிகிறார்கள்.
மண், பாசி, நீர்செடிகள் நிறைந்த இடங்களில் எங்கு இறால் இருக்கும் என்பதை மெல்ல மெல்ல கைகளால் தடவி எடுக்கும் அவர்களின் அனுபவமே சொல்லுகிறது, இது ஒருநாள் கற்றுக்கொள்ளும் திறன் அல்ல என்று.
கடந்த 20 ஆண்டுகளாக இப்படி இறால் தடவுகிறாராம். ஆம், இந்தத் தொழிலை இறால் தடவுதல் என்று பெயர் சொல்கிறார்கள். ஆண்டாண்டு கால மரபறிவிலும் தொடர் உழைப்பிலும் உருவான இந்த திறனுக்கு ஊதியம் என்னவோ சொற்பம் தான் .
வருமானம் என்றால் நாளொன்றுக்கு ₹250 முதல் ₹500 வரை தான். அதுவும் இறால் கிடைத்தால் மட்டுமே. கடலுக்குள் இறங்கினால் உண்டு; இயற்கை ஒத்துழைக்கவில்லை என்றால், அந்த நாளுக்கான வருமானம் கிடையாது.

மழை, அலைச்சல், பருவ மாற்றம் என எல்லாமே இவர்களின் வருமானத்தை நேரடியாகத் தீர்மானிக்கின்றன. சேமிப்பு இல்லை; மாற்று தொழில் இல்லை; நாளைய நிச்சயம் இல்லை.ஆனாலும் பேச்சில் நம்பிக்கை ஒளி தெறிக்கிறது.
ஏன் இப்படி என்று கேட்டோம். “என்ன செய்யப்பா, வீட்டு நிலம அபடி. வயசுபுள்ளைய வச்சுருக்கோம். படிக்கிதுக. நாம என்னமாச்சும் செஞ்சாத்தான வயித்துக்கு ஆகும்.” என்றார் இயல்பாக. இவ்வளவு நேரத்தில் எவ்வளவு பிடித்திருப்பார் என்றால் ஒரு அரைக்கிலோ இருக்கும் என்றார்.
இந்தப் பணியில் வேகம் இல்லை; ஆனால் கவனம் இருக்கிறது. சத்தம் இல்லை; ஆனால் உறுதி இருக்கிறது. கைகளில் கையுறை இல்லை; ஆனால் தைரியம் இருக்கிறது. இருந்தும், இந்த உழைப்பு பெரும்பாலும் எவராலும் கவனிக்கப்படுவதில்லை. காரணம், இவர்கள் மீனவர்களாக அதிகாரப்பூர்வமாகக் கருதப்படுவதில்லை; அதனால் அவர்களது வாழ்க்கை அரசின் கணக்குப்பட்டியல்களில் இடம் பெறுவதில்லை. அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பு இங்கு இவர்களைச் சேர்த்து இயங்குமா என்றும் இவர்களுக்கு புலப்படுவதில்லை.

இந்த பெண்களின் வாழ்க்கை எளிதானது அல்ல. உடல் உழைப்பு, குறைந்த வருமானம், சமூக அங்கீகாரம் இல்லாத நிலை என எல்லாமும் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது. இருந்தும் அவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்குள் இறங்குகிறார்கள். காரணம், வேறு வழி இல்லை என்பதற்காக அல்ல; இந்த வேலை அவர்களின் அடையாளமாக மாறிவிட்டதால் என்கிறார் காளீஸ்வரி.
“வெறும் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்” என்ற தலைப்பு, பார்ப்பதற்கு ஒரு ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது, நம்முடைய சமூகத்தில் எவ்வளவு உழைப்பும் தொழில்களும் முறைப்படுத்தப்படாமையால் காணாமலே போய்க் கொண்டிருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது.
அந்தக் கைகள் வெறுமையானவை அல்ல; அவற்றில் அனுபவம், தைரியம், மரபு, வாழ்க்கை எல்லாம் இணைந்திருக்கிறது. இதனை அரசும் மாவட்ட மீனவ அமைப்புகளும் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.
கட்டுரையாளர்: பாம்பன் மு.பிரசாந்த்