தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியுற்றதை தொடர்ந்து பாஜக இளைஞரணி நிர்வாகி எஸ் ஜி சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: “வரலாறு நெடுகிலும் பெண்களை ஏமாற்றிய காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியின் முகத்திரை முழுமையாகக் கிழிந்துவிட்டது!
அன்று முதல் இன்று வரை, நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பல தசாப்தங்களாக முடக்கப்பட்டதற்கு முழு காரணமும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே. மத்தியில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போது, மசோதாவை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு நாடகமாடியது காங்கிரஸ் கட்சி. அந்த அதிகாரத்தை அவர்களோடு இணைந்து முழுமையாக அனுபவித்த திமுக, அன்று தமிழகப் பெண்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை? திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே, இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கும் சமூக நீதியா?
உரிமை என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும், உண்மையான அரசியல் அதிகாரம் பெண்களின் கைகளுக்குச் செல்லும் நிலை வரும்போது அதனைத் தந்திரமாகத் தடுப்பதும் தான் காங்கிரஸ் மற்றும் INDI கூட்டணியின் எழுதப்படாத விதி. கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இதே மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த நகலைக் கிழித்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை இன்று அரவணைத்துச் செல்லும் உங்களுக்கு, பெண்ணியம் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
பெண்களை வெறும் வாக்கு வங்கியாகவும், இலவசங்களை வீசினால் போதும் என்று நினைக்கும் வஞ்சக மனப்பான்மை கொண்டவர்கள் நீங்கள். உங்கள் அறிவாலயத்திலும் சரி, சத்தியமூர்த்தி பவனிலும் சரி, என்றாவது ஒரு சாதாரணப் பெண்ணுக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா? சொந்தக் குடும்பத்து வாரிசுகளுக்கு மட்டுமே செங்கம்பளம் விரித்து முடிசூட்டும் நீங்கள், சாதாரணக் கிராமத்துப் பெண்கள் நாடாளுமன்றப் படிகளில் ஏறுவதை எப்படிப் பொறுத்துக்கொள்வீர்கள்? ஆணாதிக்கத்தின் உச்சமே உங்கள் கூட்டணி தான்!
ஆனால், அத்தனை வரலாற்றுத் தடைகளையும் சதி வலைகளையும் உடைத்தெறிந்து, தாய்மார்களுக்கு 33% நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டை நனவாக்கிக் காட்டியுள்ளது நமது மாண்புமிகு பாரதப் பிரதமரின் அரசு.
பெண்களின் அரசியல் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குச் சிந்தனை கொண்ட திரு.Rahul Gandhi மற்றும் திரு.M. K. Stalin கூட்டணியை தமிழகப் பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காலம் உங்கள் துரோகங்களைச் சுட்டெரிக்கும்!” என்று தெரிவித்திருந்தார்.