News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் தலையங்கம்

தலையங்கம்: பவன் கல்யாண் என்னும் பதருக்கு கண்டனம்

  • December 10, 2025
  • 0

அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.

Share:
தலையங்கம்: பவன் கல்யாண் என்னும் பதருக்கு கண்டனம்

நெல் எப்படி இருக்கும் என்று கேட்டால் அது ஒரு புல் என்று சொல்வது சரியாக இருக்குமா? இந்தியா என்றால் என்ன என்று கேட்டால் பெயரிலேயே இந்து என்று இருக்கிறது. எனவே அது ஒரு இந்து நாடுதான் என்று சொன்னால் சரியாக இருக்குமா?

அரைமுட்டாள்களின் குறைமதிப்பீடு இது. அப்படி ஒரு அரும்பெரும் ஒப்பீட்டை துளியும் வெட்கமின்றி – இந்தியாவுக்கு எதிராகச் – செய்திருக்கிறார் ஆந்திர மாநிலத்தின் தற்போதைய துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.


நேற்று, ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அவர் தெரிவித்த கருத்தில் தான் இப்படியோர் பேரறிவை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் அள்ளி அணைத்து முத்தமிட்டு கொண்டாடித்தீர்க்கவல்ல(!) இந்த கருத்தை பென்பாய்ண்ட் வலைதளம் முற்றுமுழுதாக மறுப்பதோடு வலிமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறது.

பவன் கல்யாண்

அப்படி என்ன பேசினார்?
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் பக்கத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்யும் ஓவியம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளான சமூக நீதி, பொறுப்புணர்வு, சமத்துவம், நலவாழ்வு, தர்மத்தை நிலைநாட்டுதல் ஆகியவை கீதையின் சாராம்சத்திலிருந்தே உருவானவை என்பதை அந்த ஓவியம் உணர்த்துகிறது.


தர்மம் என்பது நீதியின் தார்மிக வழிகாட்டி, அரசியலமைப்புச் சட்டம் என்பது நீதியின் சட்ட ரீதியான வழிகாட்டி. இரண்டும் ஒரே இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளன. பகவத் கீதையும், அரசியலமைப்பு சட்டமும் ஒன்றுதான். கையால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்தான் பகவத் கீதை” என்று பேசியுள்ளார்.

இந்திய அரசமைப்பு சட்டம்

மகாபாரத படமா?
அரசமைப்புச் சட்டத்தின் வடிவெழுத்து மற்றும் வரைபடங்கள் அடங்கிய முதன்மை வடிவத்தின் கலையம்சம் நிறைந்த பக்கங்கள் இந்திய அரசின் லலித்கலா வளைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.  வாய்ப்பிருப்போர் பார்த்துக்கொள்க ‘பகுதி 4’க்கான முகப்பில் மகாபாரதக் காட்சி வரையப்பட்டுள்ளது.

மகாபாரதக் காட்சி சொல்ல வரும் செய்தியான, “மனிதர்களைக் கொல்லலாம். ஆத்மாதான் முதன்மை. உடல்தான் கொல்லப்படப்போகிறது” என்கிற போதனையை இந்தியா ஏற்றுக்கொண்ட தர்மம் என்று சொல்லலாமா?


அது இடம்பெறும் பகவத்கீதையை இந்தியாவின் புனித நூல் என்று சொல்ல வருகிறார். இந்து எனும் மதத்தின்(!) புனித நூல் என்று சொல்லப்படும் நூலை இந்தியாவின் நூல் என்று சொல்வதன் மூலம் பேரினவாத பெரும்பான்மையை நாடு முழுக்க திணிக்கும் முயற்சியை ஊக்குவிக்கிறாரா?

அல்லது அரசியலமைப்பில் இடம்பெற்ற படம் என்பதாலேயே இதுதான் இந்தியா என்று சொல்வதானால் அடுத்தடுத்த பக்கங்களை பவன் கல்யாண் பார்த்ததால் என்ன ஆவார்?

அடுத்தடுத்த பகுதிகளில் வரும் புத்தர், மகாவீரர், அக்பர், திப்புசுல்தான் ஆகிய ஓவியங்களைக் கொண்டு இந்தியாவீன் தர்மம் புத்தம் தான் என்றோ இஸ்லாமியம் தான் என்றோ சொல்ல முடியுமா?

அரசமைப்பு சட்டத்தில் முகலாய அரசர் அக்பரின் படம்

குறைந்தபட்சம், எல்லோருக்குமான நாடாக இந்தியாவை வைத்திருக்கும் மதச்சார்பின்மையை முற்றுமுழுதாக எதிர்க்கும் இவர் செய்திருப்பது தேச துரோகக் குற்றமாகக் கருதப்பட வேண்டியது.

அரசியலமைப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். பகவத் கீதையின் படி இறைவன் உருவாக்கிய நால்வருணங்கள் வெவ்வேறு.

மொத்தத்தில், பவன் கல்யாண் மட்டுமல்ல. இது போல ஏராளமான பதர்களின் நுனிப்புல் பொது அறிவைப் பொசுக்கிக் கடப்பதோடு, அரசமைப்புச் சட்டம் சமத்துவம். பகவத்கீதை அசமத்துவம் என்பதுதான் முதன்மையாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம்.