அரசியல் ஆசிரியர் தேர்வுகள் சிறப்பு கட்டுரைகள் பொய் பொய்யப்பன்

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1

  • May 20, 2024
  • 0

இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.

பிரதமர் மோதியின் திருமண புகைப்படமா இது? – பொய் பொய்யப்பன் பகுதி1

திருமணத்தை மறைத்த திருடனின் திருமண புகைப்படம் என்ற குறிப்புடன் ஃபேஸ்புக் தளத்தில் ஒரு பதிவைப் பார்க்க முடிந்தது. அதுவரை (13.05.2024 ) 263 பேரால் பகிரப்பட்டிருந்த அந்தச் செய்தியை #ஏழை_மாமியாவின்_மருமகன் என்ற தனியடைவுடன் (Hashtag) பகிர்ந்திருந்தனர்.

பின்னணி என்ன?
இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோதி (மோதி என்பதே அப்பெயர்) தாக்கல் செய்த வேட்பு மனுவில் இணையர் குறித்த பதிலில் ‘தெரியவில்லை’ என்று குறிப்பிட்டதன் பின்னணியில் இதுபோன்ற பதிவுகள் வெளியாகியுள்ளன. பரவும் இந்த செய்தியை இதேபோன்ற தொனியில் இதே படத்துடன் மேலும் சில சமூக வலைதளக் கணக்குகளும் பகிர்ந்திருந்தன. ஏற்கனவே சில உண்மையறியும் தளங்கள் கடந்த ஆண்டுகளில் இதன் உண்மைத் தன்மையை சோதித்து, இந்தப் படம் நரேந்திர மோதியின் திருமண புகைப்படம் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன.

உண்மை என்ன?

மணப்பெண் ஒருவருக்கு பக்கத்தில் இளவயது நரேந்திர மோதி நிற்கும் இந்தப் படம் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் இணையத்தில் உலவி வருகிறது. அந்தப் படத்தில் இருப்பவர் நரேந்திர மோதியின் மனைவி என்று கூறப்படும் யசோதாபென் அல்ல என்றும் இது நரேந்திர மோதியின் திருமணம் அல்ல என்றும் தகவல்கள் ஏற்கனவே வெளியானபோதும் முழு உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தான். ஆனால், உடன் இருப்பவர் அவரது மனைவி அல்ல.

இந்த படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1994. அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி, தன் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த கெயூர் ஹேமந்த் சப்பத்வாலாவின் சகோதரி ஆல்பாவின் திருமணத்துக்கு சென்றபோது எடுக்கப்பட்ட படம் இது. அவ்வளவுதான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெளிவுற படத்துடன் பதிவிட்டுள்ளார் இந்த இணைப்பில் ( Keyur Hemant Chapatwalaa )

கூடுதல் தகவல்:
இதற்கு முன்பு இதே படத்தை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஸ்வாதி சதுர்வேதி தனது ட்விட்டர் (இப்போது எக்ஸ்) தளத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பொய் என்று வாதவிவாதங்கள் எழுந்தபிறகு, “கூகுளில் இருந்து எடுத்தேன். Modi Marriage pictures என்று கூகுள் செய்து பாருங்கள்” என்று பதிலளித்திருந்தார். கூகுள் தரும் படங்கள் எல்லாம் முற்று முழுதாக உண்மையானவை அல்ல என்பதுதான் அடிப்படைப் புரிதல். அவர் ஒன்றும் பாமரரல்ல. பத்திரிகையாளர். ஆனால், அந்தநேரத்து சமாளிப்புக்கு அவர் வைத்த சாக்குப்போக்கு அது.

2020 ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்குவாதம் “நரேந்திரமோதி திருமணமானவரா? இல்லையா?” என்ற கேள்வியில் போய் நின்றாலும் இந்த படத்துக்கான விளக்கம் 2014லேயே தெளிவுபடுத்தப்பட்டு விட்டது என்பதுதான் இதில் நாம் தெளிந்து கொள்ள வேண்டிய உண்மை.

பொய் பொய்யப்பன்:
ஏற்கனவே 10 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்தப் பொய்யை மீண்டும் பரப்பிய பாலகணேசன் அருணாசலம் என்கிற ஃபேஸ்புக் கணக்குதான் இந்த வார பொய் பொய்யப்பன்.