News அரசியல் தமிழ்நாடு

அதிமுக vs திமுக: அத்திக்கடவு அவினாசி திட்டம் – ஸ்டாலின் vs எடப்பாடி

  • August 17, 2024
  • 0

அத்திகடவு அவிநாசி திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் பகிர்ந்தவை என்ன?

அதிமுக vs திமுக: அத்திக்கடவு அவினாசி திட்டம் – ஸ்டாலின் vs எடப்பாடி

1957ஆம் ஆண்டு மாரப்ப கவுண்டர் எழுப்பிய கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டம், 67 ஆண்டுகளுக்குப் பின், 2024 இல் செயல்படுத்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அத்திக்கடவு – அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகிலுள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளிலுள்ள முப்பத்தி ஒன்று ஏரிகளையும், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்களையும், ஏனைய 538 நீர் நிலைகளையும் நிரப்பும், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கல் திட்டமாகும்.

இதற்கிடையில் தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் தங்கள் தரப்புக்கு தங்கள் பங்கை குறிப்பிட்டுச் சொல்லி வாத பிரதிவாதங்களைக் கிளப்பியுள்ளன.

ஆளுங்கட்சியான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார்?

1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த #அத்திக்கடவு_அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, கழக ஆட்சியில் இந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தேன்.



இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2019-இல் தொடங்கப்பட்டிருந்தாலும், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு, 1,916.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டன.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் சுமார் 60 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அறிவித்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு 2019ம் ஆண்டு, ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் மாநில நிதியின் கீழ், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தேன். இத்திட்டத்தின்படி பவானி ஆற்றின் உபரி நீரான 1.5 டி.எம்.சி தண்ணீரினை காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து நீரேற்று முறையில் குழாய்களின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலுள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குட்டைகளும், சுமார் 24,500 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும். 2021ல், எங்களது ஆட்சி முடிவில், சுமார் 90 சதவீத பணிகள் முடிவுற்றிருந்தது. எஞ்சிய 10 சதவீத பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் நிலையில் இருந்தது.

அஇஅதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டது இந்த விடியா திமுக அரசு. நான் பலமுறை சட்டமன்றத்திலும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாயிலாக பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முடிக்க வலியுறுத்தியும், 3 ஆண்டுகள் கழித்து ரூ.250 கோடி கூடுதல் செலவில், எஞ்சிய 10 சதவீதப் பணிகளை முடித்து, இன்றுதான் பொம்மை முதலமைச்சர் திறந்துள்ளார். இதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எஞ்சியப் பணிகளை முடித்து திறந்திருந்தால், மூன்று மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவை மற்றும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

இதுபோல ஏற்கனவே சேலம் மாவட்டம், தலைவாசலில் எங்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றும், கிடப்பில் போட்டுள்ள காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும் என்றும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.