ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று (2025 ஏப்ரல் 22) சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று (2025 ஏப்ரல் 22) சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசரமாக ஸ்ரீநகர் சென்றடைந்தார்.
இதனிடையே, சவூதி அரேபியாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்ததும் தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இந்தியாவுக்கு அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்” என்று தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசிய போது டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், அங்குள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் அவசர கால தொலைபேசி எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மெல்ல அமைதி திரும்பி, சுற்றுலா துறை மீண்டும் புத்துயிர் பெற்று வந்த நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் உள்ளூர் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.