இந்தியாவில் குரங்கம்மை தொற்று பரவல் ஆபத்து பெரிய அளவில் இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை கடந்த 14ஆம் தேதி அறிவித்தது.
குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் மத்திய அரசும் அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தீவிரமாக கண்காணித்தும் வருகிறது. இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை தொற்று எதுவும் பதிவாகவில்லை.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவலின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது புழக்கத்தில் உள்ள குரங்கு பாக்ஸ் வைரஸின் திரிபு தீவிரமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இறப்பு விகிதம் 0.1% இல் இருந்து 3% ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் இந்தியாவும் பெரிய அளவிலான சோதனை ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. இன்றுவரை இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட வழக்குகள் எதுவும் இல்லை என்றும் சுகாதார அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டை விட தற்போது 160% அதிகமாக உள்ளது. மேலும் இந்த வைரஸ் 10 நாட்களில் ஆறு புதிய நாடுகளில் பரவியுள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.