21/05/2026
அரசியல் ஆசிரியர் தேர்வுகள் உணவு மற்றும் உடல்நலம் சிறப்பு கட்டுரைகள் தமிழ்நாடு

இது திமுக ஆட்சி இல்லை : அம்மா உணவகங்களும் விஜயின் அரசியலும்

  • May 19, 2026
  • 0

திமுக திட்டங்களே திமுக ஆட்சியின் அடையாளம் என்று ஸ்டாலின் பேசிய நிலையில், அதிமுகவின் அம்மா உணவகங்களை புதுப்பிக்க விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது ஏன்?

Share:
இது திமுக ஆட்சி இல்லை :  அம்மா உணவகங்களும் விஜயின் அரசியலும்

“திமுக திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய மறுநாளே, அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதன் பின்னணி என்ன?

அதிமுக உருவாக்கிய திட்டத்தை தொடர்வதன் மூலம், “அரசு என்பது கட்சியை விட பெரியது” என்ற அரசியல் செய்தியை விஜய் மறைமுகமாக தெரிவிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

“அம்மா” பெயரை அழிக்காமல் தொடரும் விஜய்

அம்மா உணவகம் என்பது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஒன்று. 2013-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், குறைந்த விலையில் உணவு வழங்கும் சமூக நல மாதிரியாக தேசிய அளவிலும் கவனம் பெற்றது.

பொதுவாக ஆட்சி மாறும்போது, முந்தைய ஆட்சியின் அடையாள திட்டங்கள் பெயர் மாற்றம் அல்லது செயலிழப்பு போன்ற நிலைகளை சந்திப்பது இந்திய அரசியலில் புதிதல்ல. ஆனால் விஜய் அரசு “அம்மா” என்ற பெயரையே மாற்றாமல் அதே திட்டத்தை மேம்படுத்துவது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்டாலின் பேச்சுக்கு அரசியல் பதிலா?

ஸ்டாலின் தனது உரையில், “திமுக திட்டங்களே திமுக ஆட்சியின் அடையாளம்” என்ற கருத்தை வலியுறுத்தினார். மேலும், “பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுவோம்” என்றும் தொண்டர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் விஜய் எடுத்துள்ள முடிவு, மறைமுக அரசியல் பதிலாக வாசிக்கப்படுகிறது. “தமிழகத்தில் நல்ல திட்டங்கள் கட்சியினது அல்ல; மக்களினது” என்ற அரசியல் செய்தியை அவர் சொல்லாமல் சொல்கிறாரா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

தமிழக அரசியலில் “திராவிட மாடல்” என்பது திமுகவின் முக்கிய அரசியல் அடையாளமாக இருந்தது. ஆனால் விஜய் தற்போது உருவாக்க முயற்சிப்பது “கட்சியைத் தாண்டிய நிர்வாகம்” என்ற புதிய அரசியல் மொழியா என்ற விவாதம் உருவாகியுள்ளது.

திமுகவின் “எங்கள் கொள்கை தொடர்கிறது” என்ற பிரகடனத்துக்கும் விஜய்யின் “நல்ல திட்டம் என்றால் யாருடையதாயினும் தொடரும்” என்ற திட்டமிட்ட அரசியல் நகர்வுக்கும் இடையில் இயங்கவிருக்கிறது அம்மா உணவகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *