விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுகவுக்கு உறுதியான வெற்றி..!
July 13, 2024
0
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உயிரிழப்பை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான சி அன்புமணி நிறுத்தப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நடைபெற்றது. இந்த கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 7 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.
கிட்டத்தட்ட திமுகவின் வெற்றி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.