அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு பொய் பொய்யப்பன்

தமிழ்த்தாய் வாழ்த்தால் தப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

  • October 25, 2024
  • 0

சென்னையில் உள்ள தூர்தர்ஷன் -பிரசார் பாரதி- அலுவலகத்தில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது தமிழ்த்தாய்வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் தடுமாற்றத்தால் தவிர்க்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தால் தப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னையில் உள்ள தூர்தர்ஷன் -பிரசார் பாரதி- அலுவலகத்தில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது தமிழ்த்தாய்வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் தடுமாற்றத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி வாதப்பிரதிவாதங்களையும் கிளப்பியது. ஆனால், இந்த கூச்சலுக்கு மத்தியில் நாம் கடந்துவிட்ட அல்லது கண்டுகொள்ளத்தவறிய செய்தி ஒன்றை கவனப்படுத்த விரும்புகிறது பென்பாய்ண்ட்.  

அப்படி என்ன சொன்னார் ஆளுநர்? 

மொழியின் பெயரால் பிரிவினை நடக்கிறது என்ற தொனியில் தொடர்ந்து வழக்கம்போல, ‘ஒரே இந்தியா’ செயல்திட்டத்தை முன்வைத்துப் பேசிய அவர்,  கல்வி குறித்து பேசும்போது, “78% அரசுப்பள்ளி மாணாக்கர்களால் ஒரு 2ஆம் வகுப்பு தரத்திலான பாடப்புத்தகத்தைக் கூட படிக்க முடியவில்லை” என்றும் “75% மாணாக்கர்களால் ஒரு இரண்டிலக்க எண்ணைக் கூட அடையாளம் காண முடியவில்லை” என்றும் பேசினார். 

என்னது தமிழ்நாட்டின் கல்வி நிலை இப்படி இருக்கிறதா?  மொழி மொழி என்ற பெயரில் தரமான கல்வி தராமல் மக்களை ஏமாற்றுகிறதா அரசு என்று தோன்றினால், உண்மையைப் பார்க்கும்போது நிலைமை வேறாக இருக்கிறது. 

உண்மையில் ஆளுநர் பேசியது என்ன என்பதை முதலில் பார்த்து விடுவோம். 

“அண்மையில் வெளியான ASER ரிப்போர்ட் சொல்கிறது, நம் அரசுப் பள்ளிகளின் 78% மாணாக்கர்களால் ஒரு 2ஆம் வகுப்பு தரத்திலான பாடப்புத்தகத்தை கூட வாசிக்க முடியவில்லை. 75% மாணாக்கர்களால் இரண்டு இலக்க எண்களைக் கூட அடையாளம் காண முடியவில்லை. இது ஒரு கவலைக்குரிய செய்தி. ” என்பதுதான் ஆளுநர் பேசியது.

இப்போது, ஆசர் அறிக்கை குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தனியார் நிறுவனத்தால் இந்தியா முழுக்க முன்னெடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையிலான அறிக்கை. இருந்தபோதும், அரசு பெரிதும் கவனத்தில் எடுத்துக்கொள்கிற, திட்டங்களுக்கு பயன்படுத்துகிற அறிக்கைதான் அது. 

சரி… ஆளுநர் சொன்ன தகவல் உண்மையா என்று பார்த்தால், அண்மையில் வெளியான ஆசர் அறிக்கை 2023இன் படி, ‘பதினான்கு முதல் 18 வயதுக்குட்பட்ட கல்விபயிலும் குழந்தைகளில் 79.4% பேர் தமிழ்நாட்டில் 2 ஆம் வகுப்பு தரத்திலான பாடப்புத்தகத்தை வாசிக்க இயன்றவர்கள்’ என்று தரவுகள் தெரிவிக்கின்றன.  

தேசிய அளவிலான நிலையைப் பார்த்தால், சுமார் 25% பேரால் தங்கள் சொந்த மொழியில் இருக்கும் பாடப்புத்தகத்தை வாசிக்க இயலவில்லை என்று அதே ஆசர் அறிக்கை 2023 தெரிவிக்கிறது. 

இதில் எங்கிருந்து 78 சதவீதம் பேரால் வாசிக்க கூட முடியவில்லை என்று ஆளுநர் பேசினார் என்பதை அரசு பொறுப்பெடுத்து விசாரிக்க வேண்டும். ஆளுநர் இதற்கு பதிலளிக்கவும் வேண்டும்.  ஒரு தேசிய ஊடகத்தின் நேரலையில் ஒரு மாநில ஆளுநர் நாக்கூசாமல் பொய் சொல்வார் என்றால் என்ன அறிவு இது என்பதுதான் எழுப்பவேண்டிய கேள்வி.  

ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையாலும் வார்த்தை அரசியலின் விளையாட்டுகளாலும் சத்தமில்லாமல் ஒளிந்துபோனது இந்த பொய். தமிழ்த்தாய் வாழ்த்தால் தப்பிவிட்டார் ஆளுநர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதொன்றும் தமிழ்நாட்டு அரசியலில் புதியதல்ல. ஆனாலும், எப்படியாவது புதுப்புது சர்ச்சை பேச்சுகளுடன் பேசுபொருளாகிவிடுகிறார் .  

எதை கவனிக்க வேண்டும்?
தமிழ்த்தாய் வாழ்த்தில் குறிப்பாக ’ திராவிட நல் திருநாடும்’ என்று வருகிற வரியை விட்டுவிட்டு பாடியது தொடர்பாக ஆளுநர் மீதும் டிடி தமிழ் அலைவரிசை (சேனல்) மீதும் கண்டனங்கள் எழும்ப, இதற்கு ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ரு மன்னிப்பும் கேட்டது டிடி தமிழ். 

“தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற சொல்லை என்ன செய்வீர்கள்?” என ஆளுநர் தரப்பை நோக்கி கேள்விகள் வைக்கப்படுகின்றன. அதே டிடி நிகழ்வில் தொடங்கும்போதும் நிறைவின் போதும் பாடப்பட்ட தேசிய கீதத்தில் திராவிட என்ற சொல் வரும்போது பாடத்தான் செய்தார் ஆளுநர். இதற்கும் ஆளுநர் பொறுப்பில்லை. அவருக்கு தேசிய கீதம் தெரியும் பாடினார். தமிழ்த்தாய் வாழ்த்து தெரியவில்லை. பாடவில்லை. தவறவிட்டது டிடி தமிழ் தொலக்காட்சி அலைவரிசை தான். 

கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தவறிழைத்து விட்டார்கள் என்றால், இது வெறும் கண்டிப்பைத் தாண்டி அலுவல்ரீதியான தண்டனை நடவடிக்கைகளுக்கும் தகுதியான தவறுதான். அதன்படி துறைவாரி நடவடிக்கைகள் எடுக்கப்படட்டும். 

பயனில சொல்வதா?

ஆளுநரின் திராவிடப்பற்று/துவேஷத்தின் மீது விமர்சனம் வைப்பது penpointஇன் நோக்கமல்ல. ஆனால், திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி நிகழ்த்தப்பட்டிருக்கும் என்ற பிரசாரத்தை விட கூர்மையாக கவனிக்க வேண்டிய செய்தி, தொடர்ந்து தமிழ்நாட்டு அரசுக்கல்வியின் மீது ஆளுநர் வைத்து வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்தான்.

எதைக் கேள்வியாக எழுப்ப வேண்டுமோ அதை விட்டுவிட்டு, திராவிடம் மொழியா, இனமா? தமிழ் இனமா, மொழியா? என வெட்டிவாதங்கள் நிகழ்த்துவது ஒருபோதும் யாருக்கும் பலனளிக்கப்போவதில்லை.