தோழர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சதியில் ஆரூத்ரா ஊழலில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் வெளியாகின. அரூத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு ஆம்ஸ்ட்ராங் உதவினார் என்றும், அந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலையானார், அதற்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்றும் மின்னம்பலம் செய்தி வெளியிட்டது. இந்த ஆரூத்ரா ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பாஜகவின் மாநில நிர்வாக பொறுப்பிலிருந்தவர்கள். கடந்த ஏப்ரலில் ஆருத்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். பாஜகவின் மாநில நிர்வாகி நடிகர் ஆர்.கே.சுரேஷும், ஹரீஷ் என்பவரெல்லாம் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். தோழர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிகழ்வில் பாஜகவை பற்றியான கேள்வியை ஆதாரப்பூர்வமாக எழுப்பியது மின்னம்பலம் இதழ். இதற்கு பாஜகவும் மறுப்பு செய்தி வெளியிடவில்லை. திமுகவின் ஐ.டி பிரிவின் பலர் இதை குறித்த விவாதத்தை மேற்கொள்ளாமல், நேர் எதிரான திசைக்கு சென்றனர். பாஜகவின் மீதான குற்றச்சாட்டு வலுப்படுத்தப்படுகிற சமயத்தில் தோழர்.ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறுகளை பரப்ப ஆரம்பித்தனர். அவரை யாருக்கும் தெரியாது என்றும், அவர் அரசியல் தலைவரல்ல, தேர்தலில் வாக்கு வாங்கியவரல்ல, கட்டபஞ்சாயத்து செய்தவர் என்றும் பக்கம் பக்கமாக வன்மத்தை கொட்டிக் கொண்டிருந்தனர். தோழர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சமயத்தில் அவரை இழிவு செய்யும் பதிவுகளை முதன்முதலில் பாஜகவின் ஐ.டி விங் தான் ஆரம்பித்தது, பின் திடீரென அப்பதிவுகள் மறைந்தன. அவை திமுகவின் ஐ.டி-விங் குழுவினர் சிலரின் ட்விட்டர், பேஸ்புக்கில் வெளிப்பட ஆரம்பித்தன. மின்னம்பலத்தின் புலனாய்வு கட்டுரையாக அறியப்பட்ட ஆரூத்ரா மோசடியாளர்களின் கொலை பின்னனி பற்றிய செய்தி பெருமளவில் பரவியது. இது பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்த சமயத்தில்தான் எல்.முருகன் அரசு மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செய்ய வந்தார். இச்சமயத்தில் பாஜக செய்த ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறு பரப்புரையை கையிலெடுத்து திமுகவின் சமூகவளைதள குழுவில் சிலர் தீவிரமாக எழுதி பரப்ப ஆரம்பித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அடிபட்ட ஆரூத்ரா குற்றவாளிகள் பெயர் விவாதத்தில் இருந்து மறைந்தது, பாஜகவின் பெயர் மறைந்தது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறுகள் விவாத மையப்பொருளாக மாறியது. தோழர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கைதாகவில்லை என தோழர்.திருமா வெளிப்படையாக சொன்னார். பல முன்னனி செயல்பாட்டாளர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை, அதன் பின்னனி குறித்த கேள்விகள் எழுப்பினர். இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி தோழர்.ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறு ட்ரோல்களை திமுகவின் சில சமூகவளைதள கும்பல்கள் தீவிரமாக செய்து கேள்விகளை மடைமாற்றின.
கொலைக்கான புலனாய்வு முழுமையாக துவங்காத நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் திரு.சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள், இக்கொலையில் அரசியல் நோக்கமில்லை என்றார். இந்த செய்தியை ஏன் ஒரு தலைமை அதிகாரி தெரிவித்தாரென தெரியவில்லை. அதுவும் புலனாய்வு முழுமையாக தொடங்காத நிலையில் இது ஏன் சொல்லப்பட வேண்டுமென தெரியவில்லை.
மருத்துவமனையில், காவல்துறை அதிகாரிகள் சிலர் துயர சூழலை புரிந்து பரிவுடன் நடந்தனர், ஆனால் சிலர் தொண்டர்களை கடுமையாக கையாண்டனர். அங்கு நின்றிருந்த தோழர்களை விரட்டி ஒதுங்கி ஓரமாக நில்லுங்கள் என்றார் ஒருவர். அமைதியாக நிற்பவர்களை எதற்காக விரட்டுகிறீர்கள் என தோழர்.ரஞ்சித் உட்பட பலர் குரல் எழுப்பிய போது சமாதானம் பேச ஆரம்பித்தார் அந்த அதிகாரி. இதே அதிகாரி, தோழர்.ஆம்ஸ்ட்ராங் உடல் மருத்துவமனையின் வெளிப்புற வாயிலை அடைந்த உடன், மருத்துவமனையின் கதவுகளை இழுத்து மூடினார். (அவர் தமிழ்நாட்டை சார்ந்தவரல்ல. பல போராட்டங்களில் அவர் இது போல நடந்துகொண்டதை கவனித்து இருக்கிறோம்). இதனால் பலரின் வாகனங்கள் மருத்துவமனைக்குள் சிக்கியது. ஊர்வலத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது. இதைப்பற்றி ஒரு உயர்நிலை தமிழ் காவல்அதிகாரியிடம் தெரிவித்த போது, அவரும் ஏன் கதவுகள் அடைக்கப்பட்டன என்பது அறியாமல் குழம்பினார். அமைதியாக நடந்த ஊர்வலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தவர்கள் யார்?
மருத்துவமனை காத்திருப்பின் போதும், ஊர்வலத்தின் போதும் தேவையற்ற கடுமையை காவல்துறையின் சில உயர் அதிகாரிகள் காட்டினர். அவர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்களாயில்லை. காலையிலிருந்து மிகத்துயரத்துடன் காத்திருந்த தொண்டர்களிடையே இது கோபத்தை கிளப்பியது. அமைதி காத்த தொண்டர்களை எதற்காக சீண்டினர் என்பது புரியவில்லை. தோழரது உடலை அடக்கம் செய்வதற்கான அனுமதியை எளிமையாக்கி இருக்க முடியும் என்கிற நிலையில், கடுமையை தேவையற்று காட்டினர் அதிகாரிகள். நீதிமன்றம் வரை அலைக்கழிக்கப்பட்டது எதனால்?
மறுபுறம் சமூகவளைதளத்தில் தோழர் ஆம்ஸ்ட்ராங் மீதான திமுக ஐடி குழுவின் அவதூறுகள் தீவிரமாகின. சனாதன எதிர்ப்பாளராக இறுதிவரை செயல்பட்டவர் ஏன் இழிவு செய்யப்படுகிறார்?
மக்கள் நேசித்த தலைவருக்கான மரியாதை நிகழ்வு ஏன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது? இது யாருக்கு லாபமாக அமைந்தது என்பதெல்லாம் கேள்விகள்.
தேர்தல் களத்தில் பாஜகவிற்கு எதிராக நின்றவர்கள் தலித்திய மக்கள். அவர்களது வாக்குகள் தேர்தலில் தீர்க்கமான முடிவு வருவதற்கு முதுகெலும்பாக அமைந்தது. தமிழ்நாட்டில் பாஜவிற்கு எதிரான கூட்டணியில் முன்னனியில் நின்றவர்களாக தலித்திய செயல்பாட்டாளர்கள் இருந்தார்கள். இந்துத்துவ சனாதனத்திற்கு எதிராக பெளத்தத்திற்கு மக்களை அழைத்துச் சென்ற தோழர் ஆம்ஸ்ட்ராங்கின் அயராத பணி பேசப்படாமல், அவர் மீது அவதூறுகள் ஏன் பரப்பப்பட்டது? திமுகவின் சமூகவளைதளக்குழு பெயரில் இயங்கும் ஒரு கும்பலின் சாதியம், தனிப்பட்ட வன்மம், மறைமுக பாஜக ஆதரவு என ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? படுகொலையில் பாஜகவின் பங்கை மறைத்து, படுகொலையானவர் மீது அவதூறுகளை பரப்பியவர்களை நோக்கிய கேள்வியை நாம்தானே கேட்டாக வேண்டும்.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்னனியில்லை என்று சொன்ன சென்னை காவல்துறை ஆணையர் பணியிட மாற்றம் செய்ப்பட்டுள்ளார். இனிமேலாவது உண்மையான புலனாய்வு நிகழுமா?
திமுகவின் மரு.எழிலன், திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர்.விடுதலை ராஜேந்திரன், தந்தைப்பெரியார் திகவின் கோவை இராமகிருட்டிணன் போன்றோர் தோழர்.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கான மரியாதையும், அவரது பணியையும் பற்றி பதிவு செய்யும் சமயத்தில், திராவிடன் ஸ்டாக் எனும் பெயரை வைத்துக்கொண்டு தோழர்.ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறுகளை தீவிரமாக்கியது திமுக சமூகவளைதள கூட்டம் ஒன்று. ஆரூத்ரா மோசடியாளர்கள், பாஜக பிரமுகர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என நீளும் பட்டியலை நம் கவனத்திலிருந்து நீக்கிவிட்டு பாஜகவை பாதுகாத்தவர் யார் என்பது கேள்வியாக நிற்கிறது. தோழர் திருமா எழுப்பிய ‘உண்மையான குற்றவாளிகள் கைதாகவில்லை’ என்பதும், ஊடகங்கள் எழுப்பிய ‘கொலையில் பாஜக பங்கு மீதான கேள்வியும்’ அனைவரின் கவனத்திலிருந்தும் நழுவச்செய்யப்பட்டுள்ளது. இது யாருக்கான வெற்றி, யாருக்கான தோல்வி என்பதை பொறுப்போடு சிந்திப்பது அவசியம். உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது திமுக அரசின் பொறுப்பு.
இதுவே எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்யும். அதேபோல தோழர் ஆம்ஸ்ட்ராங்கிற்கான அடக்க இடத்தையும், மணிமண்டப இடத்தையும் உடனடியாக ஒதுக்குவதும் நிகழவேண்டும்.
ஜெய்பீம்!
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
சூலை 09, 2024