ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 8 பேர் காவல் துறையில் அடுத்த சில மணி நேரங்களில் சரண் அடைந்தனர். இது அரசியல் கொலை அல்ல, முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக காவல் துறை விளக்கம் அளித்தது.
சரண் அடைந்தவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை எதற்காக நடந்தது, கொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், கொலையில் கூலிப் படையினருக்கு எவ்வளவு பணம் கைமாறியது உள்ளிட்டவை தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடியை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மைத்துனரான வழக்கறிஞர் அருள் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில் மலர்கொடியுடன் தொடர்ச்சியாக பேசியது தெரியவந்துள்ளது. இவரது வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், விசாரணை நடத்திய போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பணம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கைமாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மலர்கொடி மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.