மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர் விஜய் சற்றுமுன் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செலுத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று மாலை நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சென்றுள்ளார். இது அரசியல் அரங்கில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கியதற்கு நன்றி கூற விஜய் சென்றதாக கூறுகின்றனர்.
ஒருபுறம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து ஒப்புதலுக்கு காத்திருக்கின்றனர். மறுபுறம் கட்சியின் கொள்கைகள், கொடி, செயல் திட்டங்கள் மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இத்தகைய சூழலில் தனது வழிகாட்டியாக இருந்த விஜயகாந்தை மீண்டும் நினைவு கூற திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் விஜயகாந்தை போலவே நடிகர் விஜய்யும் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். எனவே அவரைப் போல தன்னுடையை பாதையையும் வகுத்து கொள்ள திட்டங்களை தீட்டியிருக்கக் கூடும். இதையொட்டி விஜயகாந்தின் ஆசிர்வாதம் பெறும் சந்திப்பாகவும் இருக்கலாம் என்கின்றனர்.